பெரீய்ய
முன்குறிப்புடன் ‘மாற்றான்’ பார்வை….
மாத
நாவல்கள் வளரத் துவங்கியது 1980களில்தான்.
மாலைமதி
என்கிற மாத நாவல் மட்டுமே குமுதம் குழுமத்திலிருந்து வந்து கொண்டிருந்தது. கொஞ்சமாக வளர்ந்து, சாவி/இதயம் பேசுகிறது/குங்குமம்
போன்ற குழுமங்கள் மாத நாவல்களைத் துவங்கி, வெளியிட்டார்கள் (பெயர்கள் நினைவில்லை).
ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுரேஷ்-பாலா என்கிற சுபா போன்றவர்களின் சிறுகதைகளைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி, எல்லா வார இதழ்களும் வெளியிட்டு வந்தன. குறிப்பாக திரு ராஜேஷ்குமார் அவர்களின் சிறுகதைகள் பெரும் வரவேற்பைப் பெற்ற காலம். என் தந்தை குமுதம் வந்தவுடன், ஒரு புரட்டு புரட்டி, ராஜேஷ்குமார் சிறுகதை இருந்தால் உடனே படித்துவிடுவதை நான் பார்த்திருக்கிறேன் (அப்புறம்தானே குமுதம் என் கைக்கு வரும்!).
ஜீயே
பப்ளிகேஷன்ஸ் (இன்றும் திருவல்லிக்கேணி ஹைரோட்டு முக்கில், போலீஸ் ஸ்டேஷன் அருகில்
இருக்கிறது) திரு அசோகன் அவர்கள், திரு ராஜேஷ்குமாரை வைத்து ‘க்ரைம் நாவல்’ என்கிற
புதிய கலாச்சாரத்தை உருவாக்கி வைத்தார். அவரே
பட்டுக்கோட்டையாரையும் வைத்து ‘எ நாவல் டைம்’-ஐயும் துவங்கினார். எண்பது முதல் நூறு பக்கங்களில் குற்றம்/கொலை/துப்பறிதல்
கொண்ட நாவல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
கடும்
விமர்சனங்கள் இவை குறித்து வந்தாலும் (கவிஞர் மு மேத்தா, எழுத்தாளர் சுஜாதா), என்னையும்
சேர்த்து, மக்கள் என்னவோ விரும்பித்தான் படித்தார்கள். இந்த வரிசையில் அதே திருவல்லிக்கேணியில், அச்சகம்
ஒன்றில் எழுத்தாளர்கள் திரு சுரேஷ்-பாலா(சுபா) ’சூப்பர் நாவல்’ என்கிற பெயரில் க்ரைம்களைப் பின்னத் துவங்கினார்கள். அட்டைப்படத்தை அவ்வப்போது அலங்கரிக்கும் அட்டஹாசப்
புகைப்படத்தின் சொந்தக்காரர் திரு கே வி ஆனந்த் அவர்கள்.
இந்த
நாவல்கள் படிக்க மிகச் சுவாரஸ்யமாக இருக்கும்.
அரை மணி (எனக்கு!) போவது தெரியாது.
விறு விறு வென மழைக்காலத்து மொளகா பஜ்ஜி போல, சாராயத்திற்கு ஊறுகாய் போல, தச்சு
மம்முவுக்கு வத்தக் குழம்பு போல…இருக்கும்.
ஆச்சரியப்பட வைக்கும். அவ்வளவுதான். அதற்கு மேல் மனதில் தங்காது. It is a good time pass…that’s it!
திரு
கே வி ஆனந்த் பின்னால் வளர்ந்து, தேர்ந்த ஒளிப்பதிவாளராகி இயக்குநர் ஷங்கருடன் இணைந்து
புகழ் பெற்றார். தனது நண்பர்கள் சுரேஷ்-பாலா-வை மறக்காமல் திரைக்குக் கொணர்ந்து, ‘கனா
கண்டேன்’ என்கிற படத்தில் இயக்குநராய் அறிமுகமானார். கடல் மூலம் குடிநீர் கண்டுபிடிப்பு, கந்து வட்டி,
மென்மையான கொடூர (?!!) வில்லன் என்கிற அம்சங்களைக் கொண்ட நல்ல படம் என்கிற பெயர் ஆனந்த்
அவர்களுக்குக் கிடைத்தது.
பின்
அடித்த ‘அயன்’ ஜாக்பாட்டில் ஆனந்த் புருவங்களை உயர வைத்தார். ஏவி எம் என்கிற பெரிய பேனரில் வந்தாலும், குறிப்பிட்ட தொகையில் படம், சன் பிக்ஸருக்குக் கைமாறியது. வசூலில் அள்ளிய படத்தில் திருட்டி டிவிடி, போதை
மருந்து கடத்தல், நட்பின் துரோகம் என மசாலாவுக்கு வேண்டிய எல்லா அம்சங்களும் இருந்தன.
அடுத்த
வந்த ‘கோ’ பற்றிச் சொல்லவே வேண்டாம். தினசரி
நாளிதழ், அரசியல், முதலமைச்சர், இளைஞரணி எனச் சரிவிகிதமாய்க் கலந்தடித்த திரைக்கதையின்
முக்கியமான இறுதித் திருப்பம் எல்லோரையும் கட்டிப் போட்டது. (எனக்குப் படம் பிடிக்கவில்லை)
அட! கோடம்பாக்கத்தில் இன்னொரு ‘ஷங்கர்’ ?
அடுத்து
என்ன பண்ணலாம்? அயன் ஜோரில் இருந்த சூர்யா
சம்மதிக்க….மாற்றான் துவங்கியது.
-தொடரும்
No comments:
Post a Comment