
எழுத்தாளர் சுஜாதா அவர்கள் வரிகளில்
சொல்ல வேண்டுமானால்...
ஜயநகர் 4 -வது ப்ளாக்-ல் நடை பயிலும்போது, ’லொள்’ளிக் கொண்டிருந்த தெருநாய் ஒன்று ஓடி
வந்து, என் கெண்டைச் சதையைச் சன்னமாகக் கடித்து விட்டது!
நந்தனா, சுக் சாகர்,
தோஸா ப்ளாஸா, மய்யாஸ், கணேஷ் ஸாகர், உபஹார ஸாகர், பவித்ரா, ஷெனாய்ஸ் என ஜயநகரின் உணவகங்கள்
தெரிந்த எனக்கு மருத்துவமனை எங்கே என்று தெரியவில்லை!
மாமிக்குச் சொல்லிவிட்டு,
மருத்துவமனையைத் தேட ஆரம்பித்து, அங்கங்கு விசாரித்ததில் யாருக்கும் தெரியவில்லை. கணேஷ் ஸாகர் ஸிக்னலில் நின்றுகொண்டிருந்த போக்குவரத்துக்
காவலரைக் கேட்டதில் ‘கார்டன் ஸிட்டி’ என்றார்.
‘ஆமாங்க…கார்டன் ஸிட்டிதாங்க இது, ஆஸ்பிடல் எங்க இருக்கு?’ என்றேன்.
சற்றே முறைத்து,
ஜயநகர் ”3-வது ப்ளாக் ஸிகனல் இடது புறம் திரும்பினால் ‘கார்டன் ஸிட்டி ஹாஸ்பிடல் வரும்”
என்றார். உடனே விறு விறுவென நடந்து மருத்துவமனைக்கு
வந்தால் டாக்டர் இல்லை!
பத்து நிமிடக்
காத்திருத்தல்களுக்குப் பிறகு, தாதி வந்து காயத்தைக் கழுவி ‘ரொம்ப கடிச்சிருக்கே’ என்று
கொச்சைத் தமிழில் பரிதாபப்பட்டாள். உடனே வந்த
இளம்பெண் ‘யாருக்கு எமர்ஜென்ஸி?’ என்று கோபப்பட, ‘ஸாரி மேடம்! பதட்டத்தில எனக்கு என்ன
பண்றதுன்னே தெரியலை, அதான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்’ என்று ஆங்கிலத்தில் மென்மையாக
உரைக்க.., அமைதியானாள். ‘இது மாதிரி வாரத்துக்கு
மூணு கேஸுங்க வருது’ என்று முணுமுணுத்தது கேட்டது!
‘ஐயய்யோ! இந்த
சின்னப் பொண்ணுதான் எனக்குத் தொப்புளைச் சுத்தி 14 ஊசி போடப்போறாங்களா?? நமது தொப்புளை (தொந்தி?!)யைக் காண்பிக்க வேண்டுமா?’
என்று சங்கடப்பட்டுக்கொண்டிருக்க…தாதி அருகில் வந்தாள்.
‘படுங்க! பாண்டைத்
தளர்த்துங்க…!’ என்றாள். ’அடடா! மஹா தருணம்
வந்துவிட்டது!’ என்று நினைக்க…’திரும்பிப் படுங்க!’ என்றாள். என்னது??!
‘வலதா, இடதா’ என்றேன். ரெண்டு இடத்திலும் என்று அதிர்ச்சி கொடுத்து, ஊசி
குத்தியதில், பின்பகுதி பஞ்சராய்ப் போனது.
டென்ஷனான மாமியைச்
சமாதானப் படுத்துவதற்குள் அப்பப்பா! வீடு வந்து
அம்மாவிடம் கைப்பேசியில் ஆதங்கத்தைக் கொட்ட, நானும் என் பங்கிற்குப் பேசிவிட்டு வைத்த
பின், மாமி ஏனோ சிரித்தாள்.
‘என்னடி சிரிக்கறே?’
என்றேன். ’நாப்பது வயசானா நாய்க்குணம் வரும்பா,
உங்களுக்கு நாய்க்கடி வந்துடுத்தேன்னு நெனச்சேன், சிரிப்பு தானா வந்துடுத்து!’ அடிப்பாவி!
‘இனிமே நாயா கத்தாதீங்கன்னும்
சொல்ல முடியாது, சொன்னாலும் தப்பா நெனச்சிக்காதீங்க!’ என்று மேலும் கிண்டலடிக்க நிலைமை
சுமுகமானது.
செவ்வாய் மற்றும்
சனி அன்று மீண்டும் ஊசி குத்தப்படும் என்கிற என் குடும்ப டாக்டரின் அறிவுரையோடு மனம்
சமாதானமாகியது.
ஆக, நாயும், நானும்
நலம்.
No comments:
Post a Comment