கவிதா
வெளியீடான திரு அசோகமித்திரன் அவர்கள் எழுதிய ‘அம்மாவுக்கு ஒரு நாள்’ 27 சிறுகதைகள்
கொண்ட தொகுப்பு (ரூபாய் 125). இவ்வகைத் தொகுப்புகளை
படிக்கும்போது வசதியுண்டு. முதல் பக்கத்திலிருந்து
துவங்க வேண்டிய அவசியமில்லை. அட்டவணையைப் பார்த்துவிட்டு,
நமக்குப் பிடித்த தலைப்புக் கதைகளைப் படிக்கலாம்.
ஆனால்,
அசோகமித்திரனை இதில் சேர்க்க முடியாது.
1950கள், 1960களில் எழுதியவைகளைப் படிக்கும்போது பிரமிப்பு ஏற்படுகிறது. சில சிறுகதைகள் காலத்தை மீறிய சிந்தனைகள் எனும்போது
மதிப்பு கூடுகிறது.
அம்மாவுக்கு
ஒரு நாள் கதையின் நாயகன் ரகுவிடம் ‘நான்கணா’ (நாலணா) இல்லாததால் அம்மாவின் ஆசையை நிறைவேற்ற
முடியாமல் போகிறது. இதே கதையில் ஆறணா கொடுத்து
இரண்டு காஃபி சாப்பிட்டு ஆறு நயா பைசாக்களை 1958-ல் சேமிக்க முடியும் என்று தெரியும்போது
ஆச்சரியமாயிருக்கிறது.
’ரிஷ்கா’
சொல்லும் குழந்தைக்கு ‘ரிக்ஷா’ எனத் திருத்த முற்படும் தகப்பன் கடைசியில் தானும்
‘ரிஷ்கா’ சொல்வதாய் ஒரு கதை (ரிக்ஷா, 1965).
பக்கத்தில்
இடித்துக்கொண்டு படுத்து, படுக்கையை நனைக்கும் குழந்தையை டாக்டரிடம் காட்டும் சந்திரசேகரன்;
அப்படியும் சரியாகததால் ’முடிக்கயிறு’ கட்ட மசூதிக்கு அழைத்துச் செல்கிறான். (‘ஆயிரம்
விளக்கருகில் இவ்வளவு மசூதிகள் இருக்கின்றன என்று சந்திரசேகரனுக்குத் தெரிய வந்தது’
என்கிற ஒற்றை வரியில் எண்ணிக்கையின் வருணனை)
முடிக்கயிறும் ஒத்துவராததில், எப்படி முடியும் என்ற கேள்வி எழும்போது, ஒரே போடாய்ப்
போட்டு கதையை முடிப்பது அபாரம் (மறுபடியும், 1966).
ஜெமினி
ஸ்டூடியோவில் பணியாற்றியவர் என்பது அவரது ‘பயாஸ்கோப்’ (பின்னால் எழுதுகிறேன்) கட்டுரைத்
தொகுப்பு படித்த போது தெரியவந்தது. அதை வைத்தும்
ஒரு கதை வருகிறது. ஸ்டூடியோவின் பெயர் ‘லிப்ரா’ (ஸோடியாக்
பாணியிலேயே பெயர்!) சினிமா ஸ்டூடியோவின் சாதாரண வரவேற்பாளன் பிரபல நடிகனின்
தாடையில் குத்து விடுவதில் துவங்கும் கதை மனிதத்தைத் தொடுகிறது (வெறி, 1966).
பெண்ணின்
கையை எதிர்பார்க்கும் தந்தை - அந்தப் பெண்ணிற்கு வரம் தேடும் ‘ஒரு ஞாயிற்றுக்கிழமை’
(1959) முடிவு நம்மைக் கலங்க வைத்து, ’ஐம்பதுகளில் இப்படி ஒரு சிந்தனையா?’ என்று வியக்கவும்
வைப்பது சூப்பர்.

எல்லை
(1967) சிறுகதையில் வரும் உரையாடலுடன் முடித்தால் பொருத்தமாக இருக்கும்….
பிறகு
‘ ஒண்ணும் முடியலை. ஒவ்வொரு மாசமும் இழுத்துப்
பறிச்சுண்டு இருக்க வேண்டியிருக்கு. தேதி பதினெட்டு. இன்னும் பால்காரன் பாக்கி. டாக்டர் பில் இரண்டையும் கொடுக்க முடியலை. கடலெண்ணெய் மூணே கால் ரூபாய் வித்தால் என்ன பண்ண
முடியும்? ஒண்ணும் முடியலை’ என்றான் பத்மநாபன்.
‘ரொம்பக்
கஷ்டமாகத்தான் போயிடுத்து’ என்றான் ராவ். அப்புறம்,
‘நீ கடலெண்ணெய் வாங்கி எவ்வளவு மாசம் இருக்கும்? என்று கேட்டான்.
‘ஏன்
போன வாரம்கூட வாங்கினேன்’
‘கடலெண்ணெய்
விலை நாலு ரூபாய்க்கு மேலே போய் மூணு மாசம் ஆறது’.
கண்டிப்பாக
வாங்கிப் படியுங்கள். ஒரு மகத்தான படைப்பாளிக்கு
நம்மாலான சிறு பங்காய் இது இருக்கக்கூடும்.
No comments:
Post a Comment