Showing posts with label உபேந்திரா. Show all posts
Showing posts with label உபேந்திரா. Show all posts

Saturday, December 04, 2010

தலைப்பு?!

கன்னட ஸினிமாவின் தற்போதைய பேச்சு, வெள்ளியன்று வெளியான, திரு ராக்லைன் வெங்கடேஷ் அவர்கள் தயாரிப்பில், திரு உபேந்திரா அவர்கள் இயக்கி, நடித்த 'சூப்பர்' என்கிற படத்தைப் பற்றித்தான்.

பத்து வருட இடைவெளிக்குப் பின் உபேந்திரா இயக்கிய படமென்பதால் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. 'ஓம்', 'ஏ', 'ஆபரேஷன் அந்தா', 'ஹாலிவுட்' போன்ற வித்தியாசமான படங்களை இயக்கியவர். எந்திரன் படத்தின் கதையின் சாயல் 'ஹாலிவுட்' போல் இருப்பதாக ஒரு பேச்சு வந்தபோது, அதை நாகரிகத்துடன் மறுத்தவர் (ஓரளவுக்கு உண்மையிருந்தாலும்!).

இந்தப் படத்திற்குத் தலைப்பே வைக்காது, 'ஆட்காட்டி விரலும், கட்டை விரலும் இணைந்த கரம்' கொண்ட சித்திரத்தை மட்டுமே அமைத்தது இவரது வித்தியாசமான கற்பனைக்கு ஒரு சான்று. சின்முத்திரை என வர்ணிக்கப்பட்ட முத்திரை, 'ஆங்கிள்' மாறினால் அர்த்தம் மாறிவிடும் பொருள் பொதிந்த சித்திரத்தை வைத்து பரபரப்பை ஏற்படுத்திய உபேந்திரா, தமிழிலிருந்து 'நயனதாரா'வைப் பிடித்து நாயகியாய்ப் போட்டு கன்னட ஸினிமாவையும், தமிழ் ஸினிமாவையும் புருவம் உயர வைத்தார்.

முழுக்க முழுக்க இது உபேந்திராவின் படம், ரஜினிக்கு சிவாஜி போல உபேந்திராவுக்கு சூப்பர் என்று பத்திரிகைகள் பாராட்டு மழை பொழிந்தாலும் படம் ஓடுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஓடவில்லையென்றால், நயனதாரா படத்தை மட்டுமே போட்டு தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடும் வாய்ப்புமிருக்கிறது!