Showing posts with label சுதந்திரம். Show all posts
Showing posts with label சுதந்திரம். Show all posts

Monday, August 15, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 12

நாடு சுதந்திரம் பெற்ற இந் நன்னாளில் என் மனதில் தோன்றியவைகளைத் தொகுத்திருக்கிறேன்

ஒரு பசுமையான பாடலுடன் துவங்குவோமே...


சுதந்திரம் பெற்று விட்டாலும் என்றும் எத்துணை விஷயங்களில் 'அடிமை'ப்பட்டுக் கிடக்கிறோம்...? நம்மைச் சுற்றி நாமே போட்டுக்கொண்ட வேலிகள், பிணைத்துக் கொண்ட சங்கிலிகள்.....ஆக 'தொட்டி மீன்' போல வாழ்வதா வாழ்க்கை...? சுயநலத்தின் உச்சியில் இருந்து கொண்டு, சுதந்திரமாய் இருப்பதாய் நினைத்துக்கொண்டு...தனிமையில் யோசித்தால் நான் சொல்ல வந்தது நன்றாகப் புரியும்! பாட்டுக்கவி பாரதி அவர்களின் 'அடிமையின் மோகம்' நம்மைப் போன்றோரை மனதில் வைத்துதான் எழுதப்பட்டது அய்யா!


நாட்டு நடப்பை விமர்சிக்கும் பலர் வெறும் காகிதப் புலிகளாகவே இருப்பது மானக்கேடு. நம்மால் முடிந்ததை நாட்டுக்குச் செய்ய வேண்டும். நம் வீட்டை எவ்வளவுச் சுத்தமாக வைத்துக்கொள்கிறோமோ அந்த அளவுக்கு நாட்டைச் சுத்தமாகுவதில் காட்ட வேண்டும். குப்பையைத் தொட்டியில் போடு, தெருவில் துப்பாதே, வரிசையில் செல், மனிதனை மதி, தன்னலம் குறை...போன்ற சின்னச் செயல்கள் நாட்டை மாற்றும் நாளை! அன்னா ஹசாரே, நாராயண் கிருஷ்ணன் போன்றோரின் வாழ்வில் நாம் நெறையக் கற்றுக்கொள்ள வேண்டும்.


சிறுமை அதிகரித்து வரும் இந்நாளில், அதில் பெருமை கொள்ளாது...நம்மை மேம்படுத்தும் செயல்களைத் துணிவுடன் செயல்படுத்த வேண்டும். காந்தியின் எளிமையையும், சுபாஷின் வலிமையையும் உன்னிடத்தில் வளர்த்துக்கொண்டால் போதும்...இந்தியா வல்லரசாகி விடும்.


ஆக, எவ்வளவு வேண்டும்கள்? வேண்டியதைத் துணிவுடன், பணிவுடன், மகிழ்ச்சியுடன், நேர்மையுடன் வேண்டி நின்றால்...'வேண்டும்'கள் வேண்டி நம் காலடிகளில் வராது போய் விடுமா என்ன?


சுதந்திர தின வாழ்த்துக்கள்!!

Saturday, August 15, 2009

நம் நாடு சுதந்திரம் அடைந்ததை ஒட்டி நாமும் சுதந்திரம் அடைய முற்பட வேண்டும். நம்மை நாம் முற்றிலும் அறிந்து கொண்டால்தான் நாம் சுதந்திரம் அடைந்தவர்களாவோம். இந்நிலைக்கு மாறாகத் தற்போது நமது மனமோ இந்திரியங்களோ நமக்கு வசப்படவில்லை. ஆசையையும் கோபத்தையும் நம்மால் அடக்க முடியவில்லை. இவை இரண்டுமே நம்மை எப்பொழுதும் துன்புறுத்தி வருகின்றன. எந்தப் பொருளை எவ்வளவு அடைந்த போதிலும், போதும் எனும் மன நிம்மதி நமக்கு ஏற்படுவதில்லை. உலகத் துயரம் நம்மை விட்டபாடில்லை. சிறு துயரத்தைக் கண்டு விட்டாலும் மனம் கலங்கத்தான் செய்கிறது. இதனின்றும் கரை ஏற வழியென்ன?

நமது மனம் நமக்கு வசமாக வேண்டும். எவ்வளவோ காலமாகத் தன்னிஷ்டப்படியெல்லாம் தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்த இந்த மனத்தைத் தன்னுள் அடக்கச் சிறிது சிறிதாகவேனும் முயற்சி செய்ய ஆரம்பிக்க வேண்டும். மனம் அடங்கிவிட்டால் நமக்கு வேறொன்றும் தேவையில்லை. அதுதான் நாம் பெற வேண்டிய பூர்ண சுதந்திரமாகும்.


ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது மனத்தை சாந்தமாக வைத்துக்கொண்டு, வேறு நினைவுகளை மனத்தில் செலுத்தாமல், கடவுளது தியானத்தில் அமர வேண்டும். வேறு நினைவுகள் இல்லாமல் தியானம் செய்வதால் நாளடைவில் புத்தியானது தெளிவடையும். ஆசையையும் கோபத்தையும் அடக்குவதற்கு இது ஒரு சாதனமாகும். இவ்வித சாதனையைப் படிப்படியாக மேற்கொண்டவனுக்குச் சீக்கிரமாக ஆத்ம ஞானம் உண்டாகும். குறைவில்லாத அந்த ஞானத்தைப் பெறுபவன்தான் உண்மையான சுதந்திரனாகிறான்.


வெகு காலமாக நாடு சுதந்திரத்திற்காகப் பாடுபட்டுள்ளது. கடவுள் அருளாலும், மகான்கள் ஆசியினாலும், மக்களின் ஒப்பற்ற தியாகத்தினாலும் கிடைத்த இந்த சுதந்திரத்தினால் நமது நாடு செழித்து ஓங்கி, பஞ்சம் விலகி, தேச மக்கள் சமூகச் சச்சரவுகள் எதுவும் அறவேயின்றி, ஒற்றுமையுடன் அன்பு கொண்டு ஒரே சமுதாயமாக ஒட்டி வாழ அருள் பொழிய வேண்டுமென எங்கும் நிறைந்த கடவுளைப் பிரார்த்திப்போமாக!


-மகா பெரியவர், தெய்வத்தின் குரல், ஏழாம் பகுதி, வானதி பதிப்பகம்