'என் பையன் மிகவும் நல்லவன்' என்று நீ நம்பிவிட்டால், எந்தவிதத் தொல்லையும் இருக்காது.
பையன் கெட்டவனாக இருக்கலாம்; அதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டியவன் அவனே.
மனைவி உத்தமி, பத்தினி என்று நம்பிவிட்டால், உன்னைப் பொறுத்தவரை காதல் சுகமாகிவிடும்.
தவறான நடத்தைக்குத் தண்டனை அனுபவிக்க வேண்டியவள் அவளே.
நம்பிக்கையோடு கோவிலுக்குப் போ.
'நம்பினார் கெடுவதில்லை' என்பது நான்கு மறைத் தீர்ப்பு.
வாஸ்கோடகாமாவின் நம்பிக்கை புதிய நிலத்தைக் கண்டுபிடித்தது.
கொலம்பஸின் நம்பிக்கை, அவன் தாய் நாட்டுக்கு ஒரு புதிய நிலத்தைத் தந்தது.
ஆயுதங்களில்லாத சர்ச்சிலின் நம்பிக்கை, இரண்டாவது உலகப் போரின் போது இங்கிலாந்துக்கு வெற்றியைத் தேடித் தந்தது.
கடலில் விழுந்து தத்தளித்து ஒருவன் இரண்டு மாதங்கள் நீந்திக்கொண்டிருந்தானென்றும், பிறகொரு கப்பலில் கரை சேர்ந்தானென்றும் நான் படித்திருக்கிறேன். நம்பிக்கை மட்டும் இல்லாவிட்டால் அவன் பிணமாகி மீன்களுக்கு இரையாகியிருப்பான்.
பிரகலாதனின் நம்பிக்கை, கடவுளைக் காட்டிற்று.
கண்ணனின் நம்பிக்கை, பாரதப் போரில் வெற்றி பெற்றது.
நான் முன்னேறியது படிப்பினால் அல்ல; நம்பிக்கையால்.
தேசத்தை நம்பு; தெய்வத்தை நம்பு; உலகம் உன்னைப் புகழும்.
'இது நம்மால் முடியும்' என்று எண்ணு; முடிந்து விடும்.
மனோதிடமும், வைராக்கியமும் இந்த நம்பிக்கையின் குழந்தைகளே!
ஒரு துறையில் முனைந்து நின்று நம்பிக்கையோடு முன்னேறினால், நீ நினைக்கும் அளவுக்கு புகழும், பொருளும் வந்து சேரும்.
கடலைக் கடக்கக் கப்பலைத் தந்தது எவனோ ஒருவனின் நம்பிக்கை.
இவற்றுள் தலையாயது தெய்வ நம்பிக்கை.
தெய்வ நம்பிக்கை பொருள் தருகிறது; நிம்மதி தருகிறது; நியாயமாக நடக்கச் செய்கிறது.
மருத்துவரிடம் நம்பிக்கை வைத்தால் மருந்தில்லாமலே பாதி நோய் தீர்ந்து விடுகிறது.
நம்பிக்கை உடையவன் தான் வேதாந்தியானான்; விஞ்ஞானியானான்.
நம்பிக்கை இல்லாதவனுக்குச் சுகமும் அற்பம்; ஆயுளும் அற்பம்.
தண்ணீரைப் பால் என்று நம்பினால் அது பால்தான்; வேப்பிலை இனிக்கும் என்று நம்பினால் அது இனிக்கும்.
நம்பிக்கைக்கு மிகவும் தேவையானது மனம்.
அது உன்னிடமே இருக்கிறது; அதற்காக நீ ஒரு பைசாவும் செலவழிக்கத் தேவையில்லை.
- கடைசிப் பக்கம், கவியரசு கண்ணதாசன், வானதி பதிப்பகம்.
3 comments:
Super post.! Kannadasanukku eedu inai kidayadhu.!!
Manam dhaan thevai - Very true.!!
Rombha nalla ezhudhirukeenga Ranga. So true
SIR Sathya solren.. Nallakeedhubaaa
Post a Comment