Sunday, November 15, 2009

'திருப்பாச்சி' அறுவை!


அன்புள்ள திரு விஜய் அவர்களுக்கு,

தங்களுடைய அண்மைப் படமான திருப்பாச்சியைக் காணும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டேன் (விதி வலியது!).

அய்யனாருக்கு அரிவாள் செய்யும் பரம்பரையாய் அறிமுகமாகும் நீங்கள், அயோக்கியத்தனத்திற்கு எதிராய் அரிவாள் தூக்குவதுதான் கதை.

மெட்ராஸில் தங்கையைக் கட்டிக்கொடுத்து, நல்லபடியாய் வாழ ரவுடியிஸம் ஒழிக்கக் கிளம்பும் நீங்கள் நினைவு படுத்துவதென்னவோ 'நான் சிகப்பு மனிதன்!' அது சரி, ரவுடிகளை ஒழித்துவிட்டீர்கள். இன்னும் வெயிலில் பொசுங்குவது, தண்ணீருக்காய்க் காத்திருப்பது, ரேஷன் கடையில் நின்றிருப்பது, பஸ் ·புட்போர்டில் தொங்குவது, வேலையில்லாமல் திண்டாடுவது போன்றவைகளுக்காக என்னவெல்லாம் செய்யப்போகிறீர்கள்?

அறிமுகக் காட்சியில் வெயிட் பண்ணி ஒய்ட்ஸில் (நடுவில் 'காசி' சிகப்புத் துண்டு!) வருவதாகட்டும், ஆடு பலி நகைச்சுவைக் காட்சிகளில் (அப்படித்தன் நினைத்து எடுக்கப்பட்டிருக்கிறது!) பேசும்போதாகட்டும், அடிதடி காட்சிகளாகட்டும், திரு ரஜினி போல் முயன்றாலும், நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது ஒரிஜினல் என்றும் ஒரிஜினல்தான்!

நடுவில் பாசத்திற்கு மல்லிகா, காதலுக்குத் த்ரிஷா, ஐட்டம் நெம்பருக்கு சாயாசிங், டப்பாங்குத்துக்கு தினா (இசையின் ஓசை!) என உங்களுக்கு ஓடி ஆட நிறைய ஸ்கோப் இருக்கிறது.

பட்டாசு பாலு (பசுபதி வேஸ்ட்!), பான்பராக் ரவி (சகிக்கவில்லை), சனியன் சகடை (பழம்பெரும் தெலுகு வில்லன் சீனிவாச ராவ் வீணடிப்பு!) என அடிப்பதற்குத் தோதாய் வில்லன்களைத் தேர்ந்தெடுப்பதில் கில்லாடி அய்யா நீங்கள்!

'அறிமுகமான' கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் பேரரசு (இவர் அறிமுகமாம்! கொஞ்சம் மாற்றிப் போட்டதற்கு மன்னியுங்கள்!).

சும்மா சொல்லக்கூடாது 'உங்க படத்துக்கு கனடாவிலும் கூட்டம் அம்முதுங்ணா!'

ஏதோ ஒரு பத்திரிகையில் படித்தேன். நீங்கள் கதையைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்வீர் என. மதுர வரிசையில் திருப்பாச்சி வரும்போது நிறைய சந்தேகப்பட வேண்டியிருக்கிறது உங்கள் தேர்வு பற்றி!

மொத்தத்தில் நீங்கள் படத்தில் அடிக்கடி பஞ்ச் வைப்பது போல, திருப்பாச்சி 'வதம் அல்ல கொலை!' (மாத்திப்டோம்லா!).

நன்றி நவில்தலுடன்,
பருப்பு ஆசிரியர்

No comments: