Monday, June 07, 2010

ராஜ்நீதி, கமல், ரஜினி மற்றும் பலர்

ப்ரகாஷ் ஜா (கங்காஜல், அபஹரன்) இயக்கிய ராஜ்நீதி திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டு 'ஸீரியஸ் சினிமா' என்கிற முத்திரையில் வெற்றி வலம் வருகிறது. பார்த்த என் நண்பர் விளித்த ஒரு வரி காமெண்ட் 'மகாபாரதம், God Father மற்றும் தளபதி படங்களின் கலவை!'

கவனிக்கவும். இந்தக் கட்டுரை படத்தைப் பற்றியதல்ல.

அஜய் தேவகன், அர்ஜுன் ராம்பால், மனோஜ் பாஜ்பாய், ரன்பீர் கபூர், நாநா படேகர், நஸ்ருதீன் ஷா போன்ற பெரிய நடிகர்களை பங்கேற்க வைத்து, அவர்களுக்குத் தகுந்தாற்போல வேடங்களைக் கொடுத்து, இயக்குவது இந்தியில் மட்டுமே சாத்தியமாகிக் கொண்டு வருகிற விஷயம். இது போன்ற பல்வேறு நடிகர்களை ஒன்றிணைப்பது தமிழில் ஏன் நடப்பதில்லை?

கொஞ்சம் பின்னோக்கிப் போனால் விடை கிடைக்கலாம்.

எம் ஜி ஆர் / சிவாஜி கோலோச்சிய நேரங்களில் எஸ் எஸ் ஆர், ஜெமினி, முத்துராமன், பாலையா, ரங்காராவ், நாகையா, நம்பியார், மனோகர், அசோகன், நாகேஷ், சந்திரபாபு, எம் ஆர் ராதா, ஜெய்சங்கர், வி கே ராமசாமி, மேஜர், எஸ் வி சுப்பையா, சகஸ்ரநாமம் ஆகியோரின் பங்களிப்பும் பக்கபலமும் வார்த்தைகளில் விவரிக்க இயலாது. சக நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதில் சிவாஜி / எம் ஜி ஆர் கவனமாய் இருந்ததின் காரணமும் இதுதான்.

ஜெய்சங்கர், சிவகுமார், முத்துராமன், ஏவி எம் ராஜன், ஸ்ரீகாந்த், விஜயகுமார், ஜெய்கணேஷ் காலங்களில் கூட இது மாறவில்லை. சில படங்கள் நீங்கலாக, இவர்களது படங்கள் பெரும்பாலும் இசை/நகைச்சுவை/இயக்குநர் பலத்தை நம்பியே இருந்தன.

கமலின் முதல் 60 படங்களில் பல நடிகர்/நடிகையரின் பங்கேற்பு, தாக்கம் உண்டு. இயக்குநர்களின் நாயகனாக கமல் பரிணமித்த நேரம். எம் ஜி ஆரின் அரசியல் பிரவேசம், சிவாஜியின் தேக்கம் - கமல், சிவகுமார், விஜயகுமார் போன்ற இளைஞர்களுக்குக் கை கொடுத்தது.

Enter ரஜினி. வியாபாரிகள் கமல்/ரஜினி இணைப்பைக் 'கண்டு' கொண்டதில் இருவரும் இணைந்து நடிக்கத் துவங்கினர். கமல்/ரஜினி காம்போவில் வெளிவந்த பெரும்பான்மையான படங்கள் சூப்பர் ஹிட் (அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, ஆடு புலி ஆட்டம், நினைத்தாலே இனிக்கும், இளமை ஊஞ்சலாடுகிறது, 16 வயதினிலே). பின்னர் நடந்தது வேதனைக்குரிய விஷயம்.

ரஜினியும் கமலும் தனித்தனியாகப் படம் பண்ணுவது என்று முடிவெடுத்தனர். இதைக் கமல் சொன்னார் என்று ரஜினியும், ரஜினியே விருப்பப்பட்டுத் தனியாகப் போனதாகவும் வந்த செய்திகளில் எது உண்மை என்று இன்று வரை தெரியாது.

Star Image என்கிற அஸ்திவாரம் தமிழ்ப் படங்களுக்குப் போடப்பட்டது அன்றுதான்.

ரஜினி அல்லது கமல் அவ்வளவுதான். சற்று விரிந்து விஜயகாந்த், சத்யராஜ் (வில்லனாக நடித்தவர் ஹீரோவாக மாறியது தமிழ் சினிமாவின் மற்றுமொரு துரதிர்ஷ்டம்), சரத்குமார், ப்ரபு, கார்த்திக், மோகன், முரளி என்று நீண்டது. போதாதென இயக்குநர்களும் நடிகர்களாகத் துவங்கினர். தமிழ் சினிமா தயாரிப்பாளர் / இயக்குநர் கைகளிலிருந்து நடிகர்களின் கைகளுக்கு மெதுவாக மாறத் துவங்கியது.

விஜய்யின் துவக்கப் படங்கள் 'ஷகீலா'வின் நீலக்காட்சிகளுக்கு போட்டியாக இருந்தன (இத்தனைக்கும் இயக்குநர் இவரது தந்தை!). பின்னர் மீண்டு, கதைகளில் கவனம் செலுத்தத் துவங்கிய பின் வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறத் துவங்கினார். சரி, தமிழ் சினிமா இனி மெல்ல நிமிரும் என்கிற நம்பிக்கை விஜய்யின் 'commercial/அரசியல்' கனவுகளில் சிதைந்து போனது. அஜீத் / விக்ரம் / சூர்யா போன்ற இயக்குநரின் நடிகர்கள் வலம் வந்தாலும் இவர்களை ஒன்றிணைப்பது சாத்தியமேயில்லாது போனது.

தப்பிப் பிழைத்த அன்பே சிவம் (கமல்/மாதவன்), ஆய்த எழுத்து (சூர்யா/மாதவன்) வசூலில் திருப்தியளிக்கவில்லை. தமிழ் சினிமா முழுக்க முழுக்க ஹீரோயிஸத்தில் மூழ்கிப் போனது. நட்சத்திரங்களை ஒருங்கிணைப்பது 'வெற்று அரசியல்' மற்றும் 'பிரம்மாண்டமான நட்சத்திரப் பெருவிழா' மட்டுமே ஆகிப் போனது.

கமல்/ரஜினியின் தமிழ் சினிமா பங்களிப்பு மறக்க முடியாது/மறக்கவும் கூடாது. ஆனால், 'தனித்தனியாகப் படம் பண்ணுவோம்' என்கிற முடிவு மன்னிக்க முடியாதது. சற்று சிந்தித்திருந்தால், அட்லீஸ்ட் 'சேர்ந்தும் பண்ணுவோம்' என்றாவது சொல்லி, வருடம் ஒரு படமாவது செய்திருந்தால், நிச்சயம் தமிழ் சினிமா பிழைத்திருக்கும்.

No comments: