Thursday, July 08, 2010

ஒரு படம், ஒரு சொற்பொழிவு


Ek rukha hua faisla (ஹிந்தி, 1986, 118 நிமிடங்கள்) - தந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மகன் 'குற்றவாளியா?' எனத் தீர்மானிக்க, 12 நபர்கள் கொண்ட jury கூடுகிறது. ஓட்டெடுப்பில் ஒரு ஜுரர் மட்டும் 'மகன் நிரபராதி' என சாந்தமாய்க் கூற, துவங்குகிறது சர்ச்சைகள்/கோபங்கள்/உரையாடல்கள்/தாக்குதல்கள்!

இந்த ஒன்று, இரண்டாகி, நான்காகி, ஆறாகி, பதினொன்றாகி விடுகிறது! 'குற்றவாளி' என்பதற்குச் சாட்சியங்கள் போதுமானதாக இல்லாவிட்டாலும், கடைசியில் ஒருவர் மட்டும் 'அவன் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்?' என ஒட்டாது நின்று கொண்டிருப்பது ஏன்? முடிவு நம் மனதைப் பிசைந்து, அறைகிறது!

பங்கஜ் கபூர், அன்னு கபூர் நடிப்பை விட 'குற்றவாளி இல்லை' எனத் துவக்கம் முதலே தனித்து நின்று, பின் நிரூபிப்பவர் நம் மனதில் நிற்கிறார்! படத்தின் மற்றொரு சிறப்பு, ஒரே அறையில் நிகழ்வதுதான்!

படம் ஆங்கிலப் படத்தின் பாதிப்பு எனக் கூறப்பட்டாலும், காம்ப்ரமைஸ் செய்யாமல் எடுத்ததற்குப் பாராட்டுவதோடு, மொழி தெரியாதவர்கள், ஸப் டைட்டில்களோடு பார்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



பெண் (சிவகுமார், 58 நிமிடங்கள், குறுந்தகடு, மோசர்பேர்) - பெண் என்கிற தலைப்பில் நடிகர் திரு சிவகுமார் அவர்கள் வைக்கும் தாய், தாரம், மகள் 'நிம்பவே' வித்தியாசம்.

தாயாருடனான உறவை ஆழமாகப் பதிக்கும் சிவகுமார், மனைவியை உதாசீனப்படுத்திவிட்டேனே என வருந்தும் சிவகுமார், மகள் மழலையில் தொலைக்காமல் வாழ்வைத் தொலைத்துவிட்டேனே எனப் பொருமும் சிவகுமார் சொல்ல வந்ததை நேரடியாகவும், நேர்மையாகவும் சொல்கிறார். தியானம், யோகா போன்றவற்றை போகிற போக்கில் இறைத்து விட்டுப் போனாலும், ப்ராக்டிகலாக இருக்கிறது.

திரு சிவகுமார் அவர்களின் மொழி ஆளுமை, வன்மை பேச்செங்கும் விரவியும், பரவியும் கிடக்கிறது. நல்ல தமிழ்ப் பேச்சு கேட்க வேண்டுமானால் 'பெண்' இருக்கிறாள்!

No comments: