Sunday, March 13, 2011

ஒண்ணரை பக்க நாளேடு! (தலைப்புக்கு நன்றி: துக்ளக்)

சதத்தில் சதம் அடித்தார் சச்சின்!

மேற்கிந்தியத் தீவுகளுடன் நேற்று சென்னையில் நடந்த போட்டியில் சச்சின் இரட்டைச் சதம் அடித்து, சதத்தில் சதம் அடித்தார்! ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம், உலகக் கோப்பையில் அதிக சதம், சதம் அடித்தும் இந்தியா தோல்வி எனப் பல்வேறு சாதனைகளைத் தன்னுள் வைத்திருக்கும் சச்சின் அடித்த சதம் 100வது சதமாகும். 200 ஓட்டங்களை 202 பந்துகளில் அடித்து சச்சின் 'உலக நாயகன்' ஆகியிருப்பது பெருமைக்குரியது!


மேற்கிந்தியத் தீவுகளிடம் அதிர்ச்சித் தோல்வி: கால் இறுதிச் சுற்று கை நழுவல்!

சென்னையில் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுடனான போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவியது.

முன்னதாக பேட் செய்த இந்தியா சச்சின், ஷேவாக் தயவால் 362 ஓட்டங்கள் எடுத்தது. விரைவாக ஆடிய ஷேவாக் 80 பந்துகளில் 150 ரன்கள் குவித்தார். இரட்டைச் சதமடித்த சச்சின் 48வது ஓவரில் அவுட் ஆனபின், களமிறங்கிய வீரர்கள் அனைவரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்ததில், 361-1 என்றிருந்த இந்தியா, 362 ஓட்டங்களுக்கு ஆட்டத்தை இழந்தது. அணித் தலைவர் தோனி ஒரு ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பின்னர் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, வெகு நிதானமாக ஆடி, 321 ஓட்டங்களை 49 ஓவர்களில் எடுத்தது. இறுதி ஓவரில் 42 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் அஸ்வின் பந்து வீச அழைக்கப்பட்டார். சுலைமான் பென் அந்த ஓவரில் 7 சிக்ஸர்கள் (இரண்டு 'நோ பால்'கள்) அடித்த போது, இந்திய நாடே 'தலை'யில் அடித்துக் கொண்டது!. மிக விரைவில் 50 ஓட்டங்கள் (10 பந்துகள்) என்கிற பெருமையை சுலைமான் பென் தட்டிச் சென்றார். இந்த அதிர்ச்சித் தோல்வியினால் இந்தியா கால் இறுதிச் சுற்றில் ஆடும் வாய்ப்பை இழந்தது!

அஸ்வின் பந்து வீசியது ஏன்? - தோனி விளக்கம்

ஸகீர் கான், ஹர்பஜன் சிங் போன்றோர்க்கு ஓவர்கள் இருக்கையில் எதற்காக அஸ்வினுக்கு 50வது ஓவர் கொடுக்கப்பட்டது? என்ற சிக்கலான கேள்விக்கு ''இந்தியா இளைஞர் கையில்' என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அடிக்கடி கூறுவது எனக்கு நினைவில் வர, அதற்காகவே அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என வாய் கிழிய பேசிய அதே கூட்டம், இன்று ஏன் வாய்ப்பளித்தது எனக் கேட்பது விசித்திரமாயிருக்கிறது' என்று தோனி சாதுரியமாகப் பதிலளித்தார்.

'ஸகீர் கான், ஹர்பஜன் சிங் போன்ற நண்பர்களை இக்கட்டிலிருந்து காப்பாற்றுவதுதானே ஒரு நல்ல நண்பனின் கடமை. அதைத்தானே நானும் செய்தேன். இந்தக் கேள்வி கேட்டிருக்கவே கூடாது!' என்றும் தோனி பேட்டியளித்தார்!


ஒரு நாள் போட்டிகளிலிருந்து விலகல் - நெஹ்ரா அதிர்ச்சிப் பேட்டி

மேற்கிந்தியத் தீவுகளுடனான போட்டியில் ஸ்ரீசாந்துடன் மைதானத்தின் ஓரமாக உட்கார்ந்திருந்த நெஹ்ரா 'ஒரு நாள்' போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது இந்திய அணிக்குக் கவலையைத் தந்திருக்கிறது. 'இறுதி ஓவரை இனி யாரை வைத்துப் போடுவது?' என்பதும் தெரியாத நிலையில் தோனி இருப்பதாகவும், 'நம்மளை போடச் சொல்லிட்டா என்ன பண்றது?' என்கிற திகிலில் ஸகீர் கான் / ஹர்பஜன் சிங் இருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன!


'இந்திய அணி ரசிகர்கள் பக்கம்' - பிரதமர் பாராட்டு!

'இந்திய அணி எப்போதும் ரசிகர்கள் பக்கம்தான், டிக்கெட்டுக்களுக்காக ரசிகர் அடி வாங்குவதைக் கண்டு பொங்கி எழுந்து, எதிரணியிடம் மாங்கு மாங்கு என அடிவாங்கி 'எப்போதும் ரசிகர்களுக்காகத்தான் இருக்கிறோம்' என்பதைத் தெளிவுபடுத்திய இந்திய அணிக்கு எனது பாராட்டுதல்கள்' என இந்திய நாட்டுப் பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டினார். இந்தப் பேட்டியின் போது சோனியா காந்தியும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக உறுப்பினரான திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள், 'இந்திய அணி 'அடி' வாங்கிய நிலையில் பிரதமர் இவ்வாறு பேசியிருப்பது, கண்டனத்துக்குரியது' என்று சாடினார்.

'ஆரிய'ரால் கோப்பையை இழந்தோம் - முரசொலியில் கருணாநிதி அறிக்கை


மார்ச் மாதம் உலகக் கோப்பை வாய்ப்பை இழந்ததற்கு, மார்பிலே பூணூல் எனும் கயிறைச் சுற்றிக்கொண்டிருப்பவர்கள்தான் காரணம் என்று தமிழக முதல்வர் கருணாநிதி அதிரடி அறிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தந்தியும் கொடுத்துள்ளார்.

'இந்திய அணியைத் 'தெரிவு' செய்யும் அமைப்பில் இருப்பவர்கள் ஆரியர்கள்; மார்பிலே கயிறணிந்து, சதித் திட்டம் தீட்டி, தாழ்த்தப்பட்டவரின் கையில் கோப்பையை தங்க விடாமல் செய்துவிட்டார்கள். இறுதி ஓவரில் பந்து வீசிய இளைஞரும் இதே ஜாதி எனும்போது, என் சந்தேகம் வலுத்துப் போகிறது. சிறுபான்மையைச் சேர்ந்த சுலைமான் வெற்றி தேடித் தந்தது எமக்கு மகிழ்ச்சி அளித்தாலும், கமிட்டி தலைவர்கள்/பந்து வீச்சாளர்கள் போன்ற ஆரியப் பின்னணி இருக்கும்போது கோப்பை எப்படி இந்திய அணி மேஜையில் கொலு வீற்றிருக்கும்?' என்று பட பட அறிக்கை விட்டிருப்பது கழகக் கண்மணிகளுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது.

இது பற்றி தேர்வு கமிட்டித் தலைவர் திரு ஸ்ரீகாந்த் அவர்களிடம் கேட்டபோது, 'பூணூலா, அப்டின்னா?' என்றது பெரிய தமாஷ்!


2015 உலகக் கோப்பையிலும் விளையாடுவேன் - சச்சின் சிறப்புப் பேட்டி - ரசிகர்கள் உற்சாகம்!

இரட்டைச் சதம் அடித்து இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த சச்சின் '2015 உலகக் கோப்பை'யிலும் விளையாடுவேன் என அறிவித்திருப்பது அனைத்து அணிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. ''சச்சினை எப்படி அவுட்டாக்குவது?' என்று தெரியாமல் நாங்கள் இருக்கிறோம், இந்த நிலையில் அவர் 2015 உலகக் கோப்பையிலும் இருப்பது இந்திய அணிக்கு நிச்சயம் வெற்றியைத் தேடித் தரும்' என்று ஆஸ்திரேலிய அணித் தலைவர் பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அணித் தலைவர் தோனி கூறுகையில், 'நிச்சயம் இந்திய அணியின் இளைஞர்களுக்கு ஊக்கத்தைத் தரும் முடிவு; அவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டேயிருக்கிறோம்' என்றார்.

சச்சின் ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் உற்சாகத்தை அளித்திருப்பதாகத் தெரிகிறது. இந்தியா முழுவதும் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து இதைக் கொண்டாடியது 'ஈ.எஸ்.பி.என்' தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பியது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்!


ஆழ்வார்ப்பேட்டை ஆஞ்சநேயருக்கு வடைமாலை - சச்சின் ரசிகர் பரபரப்பு பேட்டி!

'சேப்பாக்கம் மைதானத்தில் சச்சின் சதமடிப்பது உறுதி என்கிற நம்பிக்கை என்னிடம் நிறைய இருந்தது. இதனால் ஆழ்வார்ப்பேட்டை சிக்னல் அருகிலுள்ள ஆஞ்சநேயர் ஆலயத்திற்குச் சென்று 108 வடை மாலை சாத்துவதற்காகச் சென்றோம். 80 வடைகளை 60 நிமிடங்களில் செய்ய முடிந்த எங்களுக்கு, ஏனோ சோதனையாக மீதம் செய்ய வேண்டிய 28 வடைகளை ஒழுங்காகச் செய்ய முடியவில்லை. ஒரு வழியாக 108 வடைகளைச் செய்தபோது சரியாக 100 நிமிடங்கள் ஆகிவிட்டன! ஆஞ்சநேயர் சோதனைகளைக் கொடுத்தாலும், சச்சினை சாதனை படைக்க வைத்துவிட்டார்' என்று தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீவத்ஸன் தெரிவித்தார்.

1 comment:

Shankar said...

brilliant!