செவிகொடு...
உனக்கொரு 
சேதி சொல்கிறேன்...!
இன்று 
உனக்கொரு
சவக்குழி இனாம்...!
நாளை
உயிருடன் உள்ளே நீ...
அதன்மேல் 
அரசியல்வாதியின் 
பளிங்கு மண்டபம்....
விழித்துக்கொள் சமுதாயமே...
சலுகைகள்
உன் கண்முன்னே 
தோண்டப்படும்
உனக்கான சவக்குழிகள்...
உணர்வுகள் விற்றாய்...
உரிமைகள் விற்றாய்...
தன்மானம் விற்றாய்...
மண்மானமும் விற்றாய்...
இனி 
ஏது விற்பாய் மனிதா..
இலவசங்களுக்கு....?
இனாம் 
வாங்கி வாங்கியே 
வளைந்து போன 
உன் முதுகுத்தண்டு 
இனி 
நிமிரவே நிமிராதா...?
உன் 
அரை வேஷ்டி உருவி
அதிலிருந்து உனக்கொரு
புதுக் கோவணம் 
இனாமாம்...!
ஓடு...
இலவசக் கோவணம்
இன்றே கடைசியாம்...!
உன்
அறுவடை களவாடி
உனக்கு 
ஒரு வேளை சோறு 
இலவசமாம்...!
ஓடு...
புறங்கை நக்கி
புசித்துவிட்டு வா...!
நினைவில் கொள்...
கட்டிக்கொள்ள
தலைக்கொரு 
அரைக்கோவனம் இனாம்...!
நின்று கொள்ள 
ஆளுக்கொரு 
சதுரடி இனாம்...
உயிர் நனைக்க 
நாளுக்கொரு 
குவளைத் தண்ணீர் இனாம்...
என்ற நிலை வரும்...
போதும்...!
இனாம் போதும்...!
உரிமை கேளுங்கள்...
நீங்கள் எஜமானர்கள்...
அவர்கள் உனது
சேவகர்கள்...
உரிமை கேளுங்கள்...
இலவசம் வேண்டாம்...
இடுங்கிப் போன கண்களுக்கு
ஒளி கேளுங்கள்...
தளர்ந்து போன தோள்களுக்கு
தன்னம்பிக்கை கேளுங்கள்...
உலர்ந்து போன வாழ்க்கைக்கு
உயிரோட்டம் கேளுங்கள்..
கரைந்து போன வளங்களுக்கு
காரணம் கேளுங்கள்...
மறைந்து போன மனிதாபிமானத்தை
மறுபடியும் கேளுங்கள்...
போதும்...!
இனாம் போதும்...!
இலவச நோய் 
அடுத்த தலைமுறையினரயாவது
தாக்காமல் இருக்கட்டும்...!
உரக்கச் சொல்லுங்கள்...
செவிகளில் ஏறவில்லையா...
உதைத்துச் சொல்லுங்கள்....
இந்த கவிதை படிக்க மட்டும் அல்ல,
உணரவும் தான்...
அன்பர்கள்,
இதனை தங்களுது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் முன்னெடுத்து செல்லுமாறு வேண்டுகிறோம்.
வாக்களிக்கும் முன், வீட்டின் நலன் கருதாமல், நாட்டின் நலன் கருதுவோம்
நன்றி - திரு ஜே கே அவர்களுக்கு
 
No comments:
Post a Comment