சமீபத்தில் நான் பார்த்த இரு படங்களைப் பற்றி....
மனக்கணக்கு (1986)
விஜயகாந்த்/கமலஹாசன் இணைந்து நடித்த படம் என்பதால் பார்த்த படம். ஆனால், ரெண்டு பேருமே இண்டர்வெல்லுக்கு அப்பாலதான் எண்ட்ரி!
ஆர் சி சக்தி இயக்கத்தில் உருவான படத்தின் முதல் பாதி 'ஆஹா'! பின் பாதியின் முதல் அரை மணி 'ஓஹோ'! அப்புறம் 'சொத்தைக் கடலையை'ச் சாப்பிட்ட ஃபீலிங்! இருந்தும், கதை நம் பக்கத்து வீட்டில் நடப்பதைப் போலத்தான் இருக்கிறது.
படிப்பு / காதல் / விவாகரத்து/ விட்டுக்கொடுத்தல் / கணவன் - மனைவி உறவு என காட்சிகள் எல்லாமே இயல்பு எனப் பாராட்ட நினைத்தால்...ஸாரி! கடைசி அரை மணி நேரத்தில் எல்லாமே தலைகீழ். இயக்குநருக்கு யார் மேல் என்ன கோபமோ, இப்படி எடுத்தால் எடுபடாதோ என்கிற சந்தேகமோ, சத்தியமாகத் தெரியவில்லை...! அந்த அரைமணியில் படம் பப்படம்!
முதல் பாதியில் நம் மனதை அள்ளி எடுப்பவர்கள் ராஜேஷ்/ராதா/செந்தாமரைதான். ராதா என்கிற கதாநாயகி படம் முழுதும் உடுத்தும் உடை/முகபாவனை/நடிப்பு அசத்தல். கூடவே ராஜேஷ். கூடவே அம்பிகா. கூடவே விஜயகாந்த் (அட நம்புங்க, பாஸ”!). கமல்ஹாசனின் காமெடி படத்தின் ஹைலைட். ஒரு இயக்குநர் படும் அவஸ்தையை அட்டஹாசமாய் ஹைலைட் செய்திருப்பது கமல் 'பெசல்'!
மொத்தத்தில், முதல் பாதியில் இயக்குநர் 'bold', பின் பாதியிலோ 'clean bowled'!
அடுக்குமல்லி (1979)
கே எஸ் ஜி என்கிற குடும்ப இயக்குநர் எடுத்த படம்.
நாடகம் பார்க்கிற உணர்வு படம் நெடுகத் தெரிந்தாலும், platonic relationship என்கிற உறவை மிக மேன்மையாகக் காட்டியிருப்பது வியப்பைத் தருகிறது.
குடும்பத் தலைவியாக, மனைவியாக, விதவையாக என அடித்தது சான்ஸ் சுஜாதாவிற்கு! விடுவாரா, அதகளம் செய்திருக்கிறார். அதுவும் விதவையாக மனதில் மட்டும் துக்கத்தை வைத்துக்கொண்டு, இயல்பாய் நடமாடுகிறாரே, அது டாப் க்ளாஸ்! (எப்படியெல்லாம் பெண்களுக்குத் திரைப்படங்களில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள், அந்தக் காலத்தில்! நிம்பவே ஆச்சரியம்!).
குடும்ப நண்பராக வந்து, குடும்பத்தில் ஒருவராய் மாறி, தலைவன் மறைந்த பின் தாங்குவதாய் அமைந்த தேங்காய் žனிவாசன் பாத்திரம் படத்தின் ஹைலைட். நகைச்சுவை நடிகரை, குணச்சித்திரமாக்கி உலா வைத்திருப்பது சில இடங்களில் 'ரிஸ்க்' பல இடங்களில் 'ரஸ்க்'! (டேங்ஸ”, வடிவேலு!) விஜயகுமார்/மகேந்திரன் நடிப்பிலும் முதிர்ச்சி தெரிகிறது.
வெற்றிடத்தை நிரப்ப பல பாடல்கள் இருந்தாலும் வாணி ஜெயராமின் தேன் குரலில் ஒலிக்கும் 'ஆயிரம் ஆண்டுகள்' பாடல் க்ளாஸ்! அண்ணா! பாட்டு எழுதியது யாருங்கோ?!
சில காட்சிகள் செயற்கையாய் அமைந்திருந்தாலும், ஒரு நல்ல குடும்பத்தைப் பார்த்த திருப்தி, இந்தப் படத்தைப் பார்த்தால் வரும்!
1 comment:
சத்தியமா சொல்றேன் இந்த படத்த பத்திலாம் நா கேள்வி பட்டதே இல்ல... எங்கேந்து புடிக்கிறிங்க இதெல்லாம்..
Post a Comment