Monday, August 08, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 10

மோகம், (பெயர்ச்சொல்)

1. மாயையால் நிகழும் மயக்கவுணர்ச்சி
2. திகைப்பு.
3. காம மயக்கம்
4. ஆசை
5. மூர்ச்சை
6. மோகநட்சத்திரம் - சனி நிற்கும் நட்சத்திரத்திற்கு ஆறாவதும் பத்தாவதும் 7. பதினோராவதும் இருபதாவதுமாகிய நட்சத்திரங்கள்
8. மோர். மோகமுறை யிணக்கம்
9. பாதிரிப் பூ

மோகம், தாபம், விரகம், போகம், காமம் இந்த வார்த்தைகள் எல்லாமே அடிப்படையில் ஆசை சார்ந்த சொற்கள்.

'மோகம்’ என்றால் சித்தம் கலங்குவது. 'யாரைப் பார்த்து?’ என்பதெல்லாம் அதற்கு அவசியம் இல்லை!
'தாபம்’ என்றால், காதல் தாகத்தால் துன்புறுவது-அதன் காரணமாக உடலில் வெப்பம் அதிகரிப்பது!
விரகம் - பிரிவினால் ஏற்படும் (காதல்) துன்பம்!
போகம்-சிற்றின்பங்களை அனுபவிப்பது.
காமம்-உடற்கூறுசம்பந்தப்பட்டது-Physical.

என்கிறார் மதன் (ஆனந்த விகடன், கேள்வி-பதில்)

ஒரு பேராசிரியர் குறிப்பிடுவது போல 'மோகம்' என்பதற்குத் தனியாக அர்த்தம் ஏதும் இல்லை. எதையேனும் சார்ந்திருத்தலே 'மோகம்'...உதாரணத்திற்கு..நாகரீக மோகம், சினிமா மோகம், பண மோகம், பதவி மோகம், ஆடம்பர மோகம், ஆங்கில மோகம், வெளிநாட்டு மோகம் ...என சொல்லிக்கொண்டே போகலாம்...

பாரதியார் நொந்து/வெந்து போய்....

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்...
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்...

பாடியிருப்பதும் நினைவுக்கு வரலாம்!

'மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்' என்பது பழமொழி. இவ்வகையில் ஆராய்ந்து, 'விக்கி' ஒரு படி மேலே போய், 'பாலியல் வேட்கை' தான் என்கிறது...

மோகம் (perversion) என்பது மோகி, மோகித்தல் என்ற பொருள்களின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன. இது உளவியல் நோக்கில் பாலியல் தொடர்பான வேட்கைகளைக் (sexual desires) குறிப்பதாகும். இதன் அடிப்படையிலேயே மோகத்திரிபுகள் (perversions) ஏற்படுகின்றன என்பர் அறிஞர். இவ்வாறான மோகம் என்பது பல நிலைகளில் அழைக்கப்பட்டு வருகின்றன. அவை, காட்சிமோகம் (exhibitionism), பார்வைமோகம் (voyerism), சார்பொருள்மோகம் (fetishism), தன்மோகம் (narcissism) என்பனவாகும். பிறரைக் காமநோக்கில் பார்த்து இன்புறுவது பார்வைமோகம் எனப்படும். தன் அழகை, அங்கங்களைப் பிறருக்குக் காட்டுவது காட்சிமோகம். தன் காதலி, காதலன், பயன்படுத்திய பொருட்களைக் கண்டு காமுறுதல் சார்பொருள் மோகம். தன்னைத் தான் கண்டு தானே காமுறுதல், தன் அழகில் தானே மயங்குதல் தன்மோகம் எனப்படும்.

மோகம் என்கிற சொல்லை / உணர்வை வைத்து தமிழ் சினிமா / பாடல் விளையாடியிருக்கிறது.

'ஜெயப்ரதாவின் உயரிய நடிப்பு வெளிப்பட்டிருக்கும், கொஞ்சம் பிறழ்ந்து விட்டால் கூட விரசமாய் விழுந்திருக்கும்...இது மௌனமான நேரம்'(சலங்கை ஒலி, இளையராஜா, வைரமுத்து,எஸ் பி பி, எஸ் ஜானகி, 1983)பாடல்...கே விஸ்வநாத் என்கிற மாபெரும் இயக்குனர் கை பட்டு 'மோகம்' கூட மிளிர்கிறது பாருங்கள்.....

மனதில் ஓசைகள்...
இதழில் மௌனங்கள்...
ஏன் என்று கேளுங்கள்...!!

இளமைச் சுமையை
மனம் தாங்கிக்கொள்ளுமோ?!

ஊதலான மார்கழி ,
நீளமான ராத்திரி,
நீயும் வந்து ஆதரி!


'மோக'த்தின் பிடியில் சிக்குண்டு வீணாய்ப் போவது போல வேறெதுவும் இருக்க முடியாது....ஒரு கலைஞனுக்கு இது நேரும் தருணம் மிகவும் அவஸ்தையானது...அதுவும் தன மனைவியோடு இன்புற்று இருக்கையில்...வேறொருத்தி நினைவில் நின்றால்...ஒரு நல்ல மனிதனால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியாது....அதோடு மோதிப் பார்த்து, வீழ்த்தி விட வேண்டும் என்கிற துடிப்போடு அமைந்த பாடல் தான் 'மோகம் என்னும் தீயில்' (சிந்து பைரவி, இளையராஜா, வைரமுத்து, யேசுதாஸ், 1985)

மோகம் என்னும் மாயப்பேயை
நானும் கொன்றுபோட வேண்டும்...
இல்லை என்ற போது
எந்தன் மூச்சு நின்று போக வேண்டும்...

அருமையான பாடல் பதிவு இது....ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு நடுவே ஆக்ரோஷமான பாட்டு....Hats off to KB saar!


இந்தப் பாட்டு கொஞ்சம் ஜாலியான வகை...பார்வையிலேயும், பழக்கத்திலேயும் வந்த 'மோகம்' இது...இசை / வரிகள் / பாடியவர் அற்புதமாய்ச் செய்திருந்தாலும் இயக்குனர் சொதப்பிய பாடல்....இருந்தாலும்...அரவிந்த்சாமி, கஜோல் நடிப்பில் கொஞ்சம் நிமிரச் செய்து நம்மைச் சந்தோஷிக்க வைக்கிறது...எஸ் பி பி அவர்களுக்குத் தங்கத் தாமரை வாங்கித் தந்த 'தங்க தாமரை' (மின்சார கனவு, ஏ ஆர் ரஹ்மான், வைரமுத்து, எஸ் பி பி, 1995)

வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே!

தொடட்டுமா
தொல்லை நீங்க...?!!

நகம் கடிக்கும் பெண்ணே!
அடக்காதே ஆசை...
நாகரீகம் பார்த்தால்
நடக்காது பூசை!

என எந்தப் பருவத்தினருக்கும் பொருத்தமாய் எழுதியிருப்பதை என்னவென்று சொல்ல?!!


நன்றி: நண்பர்கள் திரு ஜே கே / திரு தியாகராஜன் அவர்கள், விடியலைத் தேடி பதிவு மற்றும் விக்கி வலைத்தளம்.

2 comments:

udhaya said...

no issue.u used that image for good..
and i impressed ur blog

தக்குடு said...

பருப்பு ஆசிரியர் சார், திடீர்னு 'இந்த' ஏரியால உங்களுக்கு என்ன தனி மோஹம்?? :P