Saturday, August 13, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 11

வார நாட்கள் மாலைகளில் ஏனையோரைப்போல் வெளியில் பொழுதைக் கழிக்காமல் வீட்டிலேயே ஓட்டுவேன். பெரும்பாலான மாலைகளில் 'அலுவல் வேலை' பிய்த்துப் பிடுங்கும்.

அலுவலகத்திலிருந்து வந்தவுடன், பாத்திரம் தேய்த்து, 'லைட்'ஆ டிப்பின் போட்டு, அந்த நாளைய முதல் காஃபியைத் தயாரிக்கத் துவங்குவது அவ்வளவு சுளுவான வேலை அல்ல தெரியுமோ?! வால்பாத்திரம் எடுத்து, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, அதன் மேல் பாலைக் கலந்து, அடுப்பில் ஏற்றி, நினைவாய் அடுப்பைப் பற்ற வைப்பது எவ்வளவு கஷ்டம் என்று 'இதுவரை செய்து பார்க்காதவன்'க்குத் தானே தெரியும்?!!

எதற்காக முதலில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, அப்புறம் பாலைக் கலக்கிறோம்? (இது பால்காரன் வேலையல்லவா!) அம்மாவின் அறிவுரைகளை நினைவில் வைத்து 'தண்ணி ஊத்தி, பாலை கலந்தாதான், அடிப்புடிக்காது, பாத்திரம் தேய்க்கறதுக்கும் ஈஸி!' ஸோ, பாத்திரம் நானே தேய்க்கறதால, கவனமா 'இத மட்டும் செஞ்சு போடுவேன்'!

ஸ்டார் பக்ஸ், Dunkin' Donuts, Folgers, Maxwell House, Seattle's Best, Van Houtte (காஃபி கொட்டே மாதிரி இது வான் ஹுட்டே?!) எனக் காஃபி வகைகள் இங்கு கொடி கட்டி பறந்தாலும், இன்னும் 'ப்ரூ'வை விடாமல் பிடித்து... (என்னடா! சிக்கரி ரொம்ப ஜாஸ்தியா இருக்குமே, உடம்புக்கு ஆகவே ஆகாதுறா - என் 'கரிசன' நண்பன் அங்கலாய்ப்புகளில் ஒன்று!) வைத்திருப்பதற்குக் காரணம் ஏதுமில்லை ஜென்டில்மென்! ரூமி வாங்கி வந்ததைக் குடித்துத் தீர்க்க வேண்டாமா?!

ப்ரூ-வை அப்பிடியே பாலில் கலந்து, காய்ச்சக்கூடாது. 'காய்ச்சல்' வாசனை காஃபி குடிக்கும்போது வந்து பாடாய்ப் படுத்தி, சுவையைக் குறைத்துவிடும். பாலை நன்றாகப் பொங்க விட்டு (மறந்த சில சமயங்களில் வெளியில் 'போங்கய்யா போங்க' விட்டு!), அடுப்பைக் கவனமாக அணைத்து, சரியான சதவிகிதத்தில் 'ப்ரூ'வைக் கலப்பது என்பது முன்னே சொன்னது போலச் சாமான்ய காரியமல்ல.

பாலை பிரிட்ஜ்-லிருந்து எடுத்து, கொதிக்க வைத்து, பில்ட்டர் காஃபி சாப்பிட்டுப் பார்த்தவனுக்கு, 'ப்ரூ' சரிப்படுமா என்ன?! (இன்னொரு சூட்சுமாபிகேஷன், காய்ச்சின பாலை மீண்டும் காய்ச்சி, காஃபி போட்டுக் குடித்துப் பாருங்கள், சுவை...ஊஹும்! டிகாக்ஷன் முதன் முறையாக இருந்தாலும் டேஸ்ட் சுமார்தான்!) அதே போல, ஆறிப் போன / மீதமான காஃபியை மீண்டும் காய்ச்சிக் குடிப்பவர்கள், போன ஜன்மத்தில் நிச்சயம் பெரும் பாவம் செய்திருக்க வேண்டும், கொடுப்பவர்களுக்கு... நிச்சயம் நரகம்தான்!

பதமாய்க் கலந்த காஃபி-யைக் கோப்பையில் குடிப்பது அவமானம், பிட்சாவுக்கு பூசணிக்காய் மோர்கூட்டு மாதிரி! டபரா (வட்டா) , டம்ளர்-தான் காஃபிக்கு உகந்தது. வசதியிருப்பவர்கள் 'ஸில்வர்' வைத்துக்கொள்ளலாம். இல்லாதவர்களுக்கு இருக்கிறது எவர்-ஸில்வர்!

'ஸில்வர்' என்றவுடன் சின்ன வயது சம்பவம் நினைவுக்கு வருகிறது. சின்ன வயதில், திருவல்லிக்கேணி வாசத்தில், டி வி பார்க்க நாலு வீடு தள்ளி ஓடுவோம். ஆசாரோத்தமான ஐயங்கார் வீடு. ஆஜானுபாகுவாய், நெற்றி நெறைய திருமண் 'சிடு சிடு' (டிகாக்ஷன் கலர்) மாமா-வுக்கு, லக்ஷணமாய்ப் பார்த்தவுடன் வணங்கும்படியாய் மடிசார் கட்டிய 'சிரித்த' மகாலட்சுமி (பால் கலர்) மாமி 'ஸில்வர்' வட்டா, டம்ளரில் காஃபி கொடுப்பதும், மாமா எங்களையெல்லாம் ஒரு 'சிம்ஹ'ப் பார்வை பார்த்துக்கொண்டே காஃபியை மேலும் கீழுமாய் ஆற்றி, ஆசாரமாய்ச் சீப்பிக் குடிப்பதும் என்றும் பசுமையான நினைவுகள்.

டபரா-வுல அலுங்காம ஆற்றி, டம்ளரில் நுரை ததும்பிய பின், கொஞ்சம் கொஞ்சமாய் அண்ணாத்திக் குடிப்பதில் இருக்கும் சுகம் வார்த்தைகளில் வருவதில்லை. அனுபவித்தே அறியவேண்டியது மாமூ! (அமெரிக்காவுக்கு என்னோடு பயணம் செய்தவைகளில் 'டபரா/டம்ளர்'-க்கு முக்கிய 'இடம்'!) என்னுடைய தாய் மாமா அவர்களுக்குக் காஃபி, டபரா / டம்ளர் இல்லாமல் சரிப்படாது! இதனாலேயே மாமி, மாமா போகும் இடங்களில் 'டபரா / டம்ளர்' உஷார்படுத்தி, மாமாவைக் 'கவனித்து' விடுவதை நான் ரொம்ப லேட்-ஆகக் 'கண்டு' கொண்டேன்! (ஹும்! கொடுத்து வைத்த மகராசர்!)

பெரும்பாலான அமெரிக்க 'தேசி' (மாற்றிப் படித்துவிடாதீர்கள்!) வீடுகளில் காஃபியை 'அவன்'-ல் (அதானையா, மைக்ரோவேவ்!) 'சுட'வைத்துதான் உறிஞ்சுகிறார்கள். இன்றுவரை 'அவன்' இவனுக்குச் சரிப்படவில்லை! டேஸ்ட் இல்லை சுவாமி!

இதெல்லாம் விட்டுத்தள்ளுங்க...ஒரு நாள் மாலை, காஃபி-யுடன் வலைத் தளத்தை மேய்ந்ததில், சிக்கிய குறும்படம் பார்த்த பின், கொஞ்சம் பயமாய்ப் போனது...நீங்களும் பார்த்துட்டு அப்புறமா என்னைப் பத்தி என்ன நெனக்கறீங்கன்னு ஒரு வரி எழுதிப் போடுங்க :-)

6 comments:

mohan said...

Really good Re(C)ollection about coffee and your old golden days.I also told my roomie some times, we'd add water when we boil the milk.But was not sure about exact reason, thx for sharing the reason behind that..

Mahi said...

வாஸ்தவமாச் சொன்னேள் காப்பியப் பத்தி! நானும் இது பத்தி ஒரு பதிவு போடணும்னு பலநாளாத் தீவிரமா யோசிச்சுட்டே இருக்கேன் MCE sir! :)

ப்ரூ காபி போடுவதும் ஒரு டெக்னிக்தான்.சில நேரம் பால் அதிகமாப் போகும்,சிலநேரம் காபித்தூள் அதிகமாப்போகும்,சிலநேரம் சக்கரை அதிகமாப் போகும்..பெரும்பாடு போங்க!

எனக்கு ஈவினிங் டீ- மார்னிங் காஃபிதான் வழக்கம்! :)

தக்குடு said...

பாவி மனுஷா! ரொம்ப நாளா இந்த காபி பத்தி ஒரு பதிவு எழுதனும்னு யோசிச்சுண்டு இருந்தேன். இப்படி முந்திட்டையே! ஆனா அழகாதான் எழுதி இருக்கேள்! உமக்குன்னு குறும்படம் கிடைக்கர்து பாரும்!!! ஹும்ம்ம்! :)))

shankar said...

thank you for a good post. please keep writing. the short film was great as well.

Ananya Mahadevan said...

கலக்கல்ஸ் ஆஃப் இண்டியா! :)நிறைய ரசனைகள் இருக்கு இந்த்ப் போஸ்டில்! ஐயங்கார் மாமா மாமி உபமானம், அவன் இவனுக்கு பிடிக்கவில்லை, சுட் வைத்து காஃபி குடிப்பவன் பெரும் பாவம் பண்ணியிருக்கான், நரகம் நிச்சியம். :)) தூள் கிளப்பியிருக்கேள்! :) மஹா ரசனை. நாங்களும் போட்டிருக்கோம் காஃபி பதிவு. ஆனா இவ்வளோ ரசனை லேது! முடிந்தால் வரவும். http://ananyathinks.blogspot.in/2013/08/blog-post.html

கௌதமன் said...

சுவையான பதிவு! இரசித்துக் குடித்தேன் .... இல்லை படித்தேன்!