Saturday, November 05, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 32

பத்மராஜன் என்பவரைப் பற்றி இன்றைய இளைஞர்களுக்கு தெரிய அதிகம் வாய்ப்பில்லை. ஆனால், அன்றைய இளைஞர்களுக்கு இப்படித்தான் தெரியும்!


இவர் திரைக்கதை எழுதிய ஐ.வி. சசி இயக்கிய இதா இவிடே வரு,வாடகைக்கு ஒரு இதயம், பரதன் இயக்கத்தில் உருவான ரதி நிர்வேதம், மற்றும் சத்திரத்தில் ஒரு ராத்திரி, தகரா, போன்ற படங்கள் மலையாள கவர்ச்சிபடங்களாக வெளியாகி தமிழகத்தில் வெற்றிகரமாக ஒடின. ஆனால் அந்தப் படங்களைக் காண வந்தவர்களில் எத்தனை பேர் அதை இயக்கியவர் பரதன் எழுதியவர் பத்மராஜன் என்று தெரிந்திருப்பார்கள். படம் பார்க்க வந்தவர்களின் நோக்கம் வேறு இல்லையா?

பத்மராஜன், பரதன் மீது படிந்துள்ள இந்தக் கவர்ச்சி படிமம் அவர்களாலே விரும்பி உண்டாக்கி கொண்டவை. அதன்முன்பு வரை மெலோடிராமா மட்டுமே சினிமா என்று நம்பி வந்த மக்களை தன் பக்கம் கவனம் கொள்ள செய்ய வேண்டும் என்பதற்காகவே இது போன்ற பாலியல் சார்ந்த படங்களை உருவாக்கினார்கள் என்று என் மலையாள நண்பர்கள் சொல்கிறார்கள். இந்த படங்களின் வருகை மலையாள சினிமாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது நிஜமே.

என்று துவங்கிய திரு எஸ் ராமகிருஷ்ணன் அடுத்த பத்தியில் பத்மராஜனை அடையாளம் காட்டி விடுகிறார்.

ஆனால் இவை மட்டுமே பரதன் பத்மராஜனின் அடையாளங்கள் இல்லை. அவர்கள் இருவருமே சிறந்த இயக்குனர்களாக பல முக்கிய படங்களை உருவாக்கியிருக்கிறார்கள். அது போலவே பத்மராஜனின் முக்கிய திரைக்கதைகளை சிறப்பாக படமாக்கியது பரதனே.அவர்கள் கூட்டணி மலையாள சினிமாவில் புதிய அலையை உருவாக்கியது.

பத்மராஜன் சிறந்த எழுத்தாளர். சாஹித்ய அகாடெமி விருது பெற்றவர். திருச்சூர் வானொலி நிலையத்தில் பணி புரிந்தவர். சினிமாவின் மீது கொண்ட தீராக் காதலின் விளைவாய், பணியிலிருந்து விலகி, திரைக்கதை ஆசிரியராய் அறிமுகமாகி, இயக்குனராய் தன்னை உயர்த்திக்கொண்டு மலையாள சினிமாவை புரட்டிப் போட்டவர். புதிய கோண இயக்குனர்களான சிபி மலையில், பரதன், சத்யன் அந்திக்காடு, லோஹிதா தாஸ் போன்றோருக்கு முன்னோடி. நாற்பதுகளில் பத்மராஜன் மறைந்தது மலையாள சினிமாவின் துரதிர்ஷ்டம்.

பத்மராஜன் இயக்கத்தில் பெரிதும் பேசப்பட்ட படங்களில் ஒன்று 'மூன்னாம் பக்கம்' (மூன்றாவது நாள்). திலகன், ஜெயராம், சோமன் நடித்து, இசைஞானி அவர்கள் இசையில் 1988-ல் வெளிவந்து, காமர்ஷியலாயும் வெற்றி பெற்ற படம்.


படத்தைப் பற்றி விரிவாய் எழுதுவதாய் திரு ஜி ஆர் ஷங்கர் உறுதி அளித்திருப்பதால் மூன்று விசேஷங்களைப் பற்றி மட்டும்..

இசைஞானி - பாயசத்தின் முந்திரி, திராக்ஷை, ஏலக்காய் போல இசைஞானி அவர்களின் இசை படம் முழுவதும் சுவையாய் இருக்கிறது. சந்தோசம், சோகம், ஏக்கம், பரிதவிப்பு, பதைபபு, நகைச்சுவை, களியாட்டம் என மாஸ்ட்ரோ இசை / பின்னணி இசையில் புகுந்து விளையாடியிருக்கிறார். சாம்பிள் பாட்டு இதோ


திலகன் - திலகனை 'சத்ரியன்' அரசியல்வாதியாய், 'சாணக்யன்' முதல் அமைச்சராய் மட்டுமே தமிழ் சினிமா அறிந்திருக்கும். முதியவராய் அறிமுகமாகி, மகன் இழந்த சோகத்தை மறைத்துக்கொண்டு, பேரன் மேல் பாசத்தைப் பொழிந்து, அவன் நண்பர்களுடன் சகஜமாய் உரையாடி, இழப்பை ஏற்றுக்கொண்டு / கொள்ள முடியாமல் தத்தளித்து...திலகன் நடிப்பு அமர்க்களம் / அசத்தல்.

பத்மராஜன் - கதை / திரைக்கதை-ல் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது இயக்கி இருப்பது பேரும் பலம். இறுதி அரை மணியில் சோகம் கப்பிக் கிடந்தாலும் நம்மால் திலகன் குடும்பத்தின் துக்கத்தை உணர முடிகிறது. 'பலிச்சோறு' கொடுக்கும் கடோசிக் காட்சி 'சொடேர்' என நம்மை அறைந்து, உறைய வைக்கிறது.

'மூன்னாம் பக்கம்' தென்றலாய் தாலாட்டும், புயலாய் புரட்டி எடுக்கும், பாசத்தை உணர்ந்த / இழப்பை அனுபவித்த ஒவ்வொருவருக்கும் எளிதாய் இணைத்துக் கொள்ளவும் முடியும்.


இவர்கள் இல்லாமல் என்னால் இதை எழுதி இருக்க முடியாது....

திரு ஜி ஆர் ஷங்கர் - பத்மராஜனை அறிமுகப்படுத்தியதற்கு
திரு எஸ் ராமகிருஷ்ணன் - பத்மராஜனைப் பற்றிய சுவாரஸ்யப் பதிவிற்கு
விக்கி - பத்மராஜன், மூன்னாம் பக்கம் பற்றிய விவரங்களுக்கு

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

பத்மராஜனைப் பற்றிய சுவாரஸ்யப் பதிவிற்கு பாராட்டுக்கள்..