Sunday, March 25, 2012

கர்ணன்!


கர்ணன் – நவீன தொழில்நுட்ப வடிவத்தில் மறு பிறவி எடுத்திருப்பதைப் பற்றி எல்லோரும் ’போற்றி’ பலவிதமாய் எழுதி, பேசித் தள்ளும் நிலையில் மற்றுமொரு பதிவு… 

படத்தின் தொழில்நுட்பத்திற்கு ஒன்றும் பெரிதாக மெனக்கிட வேண்டியிருந்திருக்காது.  ராஜ் டிவி வசம் இருந்த டிவிடி பிரிண்ட் / டிஜிட்டல் வடிவமாய் மாற்றுவது அவ்வளவு சிரமமாயிருந்திருக்காது.  Mughal-E-Azam படத்தை வண்ண வடிவமாக்குவதில் உள்ள யத்தனங்கள் நிச்சயம் இருந்திருக்க வாய்ப்பில்லை.  அதனால்தான், என்னால் கர்ணனின் புதிய வடிவத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

‘சிவாஜி’ படம் என்று படு அமர்க்களமாய் விளம்பரம்.  உண்மையிலேயே ‘சிவாஜி’ படம் மட்டும்தானா? 

-ஈஸ்ட்மென் கலர் (1964-ல் இது சாதனை)
-கிருஷ்ணராய் படம் நெடுக கம்பீரமாய் வலம் வரும் என் டி ஆர்  
-இரட்டையர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசை
-இலக்கியம், காதல், பக்தி, கொடை, வீரம் என சமூக உணர்வுகள் கொண்டு எழுதப்பட்ட கவியரசுவின் வீர்யம் மிக்க வரிகள். 

ஆக, இவற்றோடு ‘சிவாஜி’யின் மிளிரும் நடிப்பைக் கொண்டதுதான் ‘கர்ணன்’. 

கர்ணனின் பாத்திரப்படைப்பு படத்தில் குழப்பம்தான்.  நல்லவனா? கெட்டவனா?  கெட்டவனாய்க் காண்பிக்க முடியுமா? கதாநாயகன் சிவாஜியாயிற்றே?! இமேஜ் என்னவாகும்?! - (இன்று டெண்டுல்கரை ‘நீக்க’ முடியாத சிக்கல் போல!)  இதனாலேயே, கர்ணனின் புத்திரனை பாண்டவர்கள் கொல்வது போல (புராணத்தில் இல்லாத) ஒவ்வாத கற்பனைக் காட்சிகளைப் புகுத்தி, ‘கர்ண’னை  உருவாக்க வேண்டிய சூழ்நிலை. 
எனக்குத் தெரிந்தவரையில் வியாசர் கர்ணன் பாத்திரத்தைத் தீயவனாகவே சித்திரித்திருக்கிறார்.  வில்லிபுத்தூரார் பாரதம் கர்ணனை ‘கொடையிற் சிறந்தோன்’ என்று போற்றிப் பாடுகிறது. 

மிகப் பலவீனமான பாத்திரப் புனைவான ‘கர்ணன்’ படம் ‘வேட்டைக்காரன்’ முன் தாக்குப் பிடிக்க முடியாமல் போனது.  தேவரின் தாய் செண்டிமெண்ட், எம் ஜி ஆர் ஃபார்முலா, கறுப்பு வெள்ளை முன் பி ஆர் பந்துலுவின் வண்ணம் நீர்த்துப் போனது எளிய உண்மை. 

சிவாஜியின் அற்புத நடிப்பைக் கொண்ட படங்கள் எவ்வளவு இருக்கின்றன?  அதையெல்லாம் விட்டுவிட்டு, ‘கர்ணன்’ படத்தை மட்டுமே ‘தொழில்நுட்பம்’ என்கிற பம்மாத்து வேலை செய்து, சிலாகிப்பதன் காரணம் என்ன?  புரிந்து கொள்ளத்தான் முடியவில்லை. 

No comments: