Saturday, May 12, 2012

அத்தியாயம் ஐந்து : மைசூர் ரஸம்ப்ளேஸ்மெண்ட் ஆஃபீஸர் ‘ஆனமட்டும்’ முயற்சி செய்தும் பிரின்ஸிபாலைச் சந்திக்க முடியவில்லை. ‘சொல்ப பிஸி…ஒரகட ஹோகிதாரே’ என்று சமாளித்து, அகாதெமிக் டீனிடம் அழைத்துச் சென்றார்.

திரிசூலம் சிவாஜி போல ‘தொந்தி’யை, பெல்ட்டால் இறுக்க்க்கி, மார்பு வரை பேண்ட், கூலர்ஸ் டைப் கண்ணாடி, கள்ளமில்லா புன்னகையுடன் வரவேற்ற டீனைப் பார்த்தால் பொறாமையாய் இருந்தது. கறுப்பு தலைமயிர் / மீசை!

’இந்தப் பொண்ணுங்களை நம்ப முடியாது ஸார். வேலை கையில வர்றப்போ வேண்டாம்னு சொல்லுவா...ங்க. கல்யாணம், மைசூர் விட்டுப் போக புடிக்கலைன்னு ஏதாவது ஸில்லியா ரீஸன் வரும்’ என்றார் ஆதங்கத்துடன்.

மைசூர் அமைதியாயிருக்கிறது என்ற போது வெள்ளந்தியாய்ச் சிரித்தார். ‘உண்மை! லக்ஷ்மிபுரத்திலிருந்து, ஸரஸ்வதி புரத்திற்குக் கூட மாற விரும்பாதவர்கள் மைசூர்வாசிகள் (நம்மூர் திரு அல்லிக்கேணி, மயிலை போல லக்ஷ்மிபுரம்/ஸரஸ்வதிபுரம்!).

இப்படித்தான் 1980-ல் எஸ் பி ஐ வங்கி (ஸரஸ்வதிபுரம்) யில் வேலை செய்த என் உறவினர் லக்ஷ்மிபுரத்திலிருந்து வர முடியவில்லை, அதனால் லக்ஷ்மிபுரக் கிளைக்கு மாற்றுங்கள் என மேலதிகாரியிடம் மனுக்கொடுத்தார். அப்போதெல்லாம் லக்ஷ்மிபுரத்திலிருந்து, ரயிலடிக்கு வந்து, ஸரஸ்வதிபுரத்திற்குப் போக வேண்டும். அவ்வளவாக பஸ் வசதி கிடையாது. அதனால் இப்படி ஒரு வேண்டுகோள். மேலதிகாரி என்ன செய்தார் தெரியுமா?’ என்று நிறுத்தினார் குறும்புப் பார்வையுடன்.

‘என்னதான் ஆச்சு’ என்றேன்.

‘அவரை ஹலசூரு (அல்சூர், பெங்களூர்!) கிளைக்கு மாற்றி விட்டார்’

‘மைசூரைப் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. இங்கிருக்கும் அமைதி, பெங்களூரில் நிச்சயம் இல்லை. ரெண்டு நாட்கள் கூட எச் எஸ் ஆர் லே அவுட் வீட்டில், மகன்/மருமகளுடன் இருக்க முடிவதில்லை. மைசூர் மைசூர்தான்’ என்றார்.

‘உண்மைதான். சென்ற முறை வந்தபோது தாஸப்ரகாஷில் தங்கியிருந்தேன். டி வி இல்லை. அறைகள் போன நூற்றாண்டை நினைவு படுத்துபவையாய் இருந்தாலும், அடிப்படை வசதிகளுக்குக் குறைவில்லை. தங்கியதில் நிறைவிருந்தது’.என்றதும் சந்தேகத்துடன் ‘பழசா / புதுசா?’

‘பழசுதான் ஸார்!’ என்றதும் குதூகலித்தார். ‘மெட்ராஸிலும், டில்லியிலும் இதேதான். ஹோட்டலுக்குள் நுழைந்தால் போதும். அந்த அளவுக்கு மைசூர்  சாப்பாட்டின் மணம் வந்து விடும். இதனாலேயே நான் அங்கெல்லாம் போனால், எட்டிப் பார்த்து வாந்து விடுவேன்’

‘நீங்கள்ளெல்லாம் ப்ராமின்ஸ்னு நெனக்கிறேன். இங்க சில ப்ராமின்ஸ் ரொம்ப சுத்தமா (ஆசாரம்!) கச்சம் கட்டிகிட்டு சாப்பாடு போடுவாங்க. அவ்வளவு சூப்பரா இருக்கும். அதுலேயும் ரஸம் செய்வாங்க. ரொம்பவே நன்னாயிருக்கும்’ என்று சிலாகித்தார்.

‘ஸார்! இவர் வெளில சாப்பிடமாட்டார்’ என்றேன் நான் பார்த்து வியந்த சக ஊழியரைக் காட்டி.

‘பரவாயில்ல ஸார்! உங்க பொழைப்பு நிம்மதி. நாங்கதான் எங்க சாப்பிடலாம்னு யோசிச்சி யோசிச்சி டயத்தை வேஸ்ட் பண்ணிகிட்டு இருக்கோம்’ என்று இடி இடியெனச் சிரித்தார்.

விடைபெறும்போது, அறையை விட்டு வெளியே வந்து கைகளைக் குலுக்கி, மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தார் மல்லிகார்ஜுன ஷெட்டி.

இயல்பான, அந்தக் காலத்தில் சொல்வது போல ‘ரஸ’மான மனிதரைச் சந்தித்த த்ருப்தி எனக்கு.

No comments: