Sunday, June 24, 2012

கவியரசு - 2

மெல்லிசை மன்னர் விசுவநாதன், கவியரசு பற்றி…

அவன்தான் மனிதன் படத்துக்கு கண்ணதாசன், ஐந்து பாடல்கள் எழுதினார்.

மே மாதம் சிங்கப்பூரில் நடக்கும் மலர்க்காட்சியில் பாடலைப் படமாக்கத் திட்டம்.  ஆனால், கவிஞர் ‘பிஸி’.


கவிஞரிடம் தயாரிப்பாளர்கள் அடிக்கடி நினைவுபடுத்திக்கொண்டே வந்தார்கள்.  நானும் ‘அண்ணே..மே மாதம் நெருங்குது’ என்று இடையிடையே ஞாபகப் படுத்தினேன்.

ஒரு நாள் கவிஞர் வந்தார்.  நான் ‘மே மாதம்’ என்றேன்.  ‘என்னடா…சும்மா மே..மே..மே..ன்னு கத்துறே…இந்தா பல்லவி’ என்று பாடல் மழை பொழிந்தார்.  சொக்க வைக்கும் பல்லவி, அது!

அன்பு நடமாடும் கலைக்கூடமே…!
ஆசை மழை மேகமே!

இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் ‘மே’ என்கிற எழுத்தில் முடியும்.  மொத்தம் 27 ‘மே’ பாட்டில் வரும்!

இதே போல் இன்னொரு பாடல்.  படம் ‘பட்டினப் பிரவேசம்’.  கே பாலசந்தர் இயக்கம்.  பாடல், கவிஞர்.  என் விரல்கள் ஆர்மோனியத்தில்.  ‘நா…நன்னா..நன்னா..நன்னா..நன்னா..ந நான நா…’ என்ற மெட்டை வாய் உச்சரித்தது.

மெட்டு கவிஞருக்குப் பிடிக்கவில்லை.  ஆனால் பாலசந்தருக்கு பிடித்துவிட்டது.  ‘கவிஞரை விடாதீர்கள், அவரால் முடியாதது அல்ல’ என்று அவர் என்னை உசுப்பினார்.  நான் கவிஞரை உசுப்பினேன்!

கவிஞர்தான் அற்புதக் கவி ஆயிற்றே! கற்பூரமாகப் பற்றிக் கொண்டார்; கலக்கல் ‘மூடு’க்கு வந்துவிட்டார்.

‘விசு! ட்யூனை போடுறா’  என்றார்.  உடனே நான் ஒரு சின்ன வேலை செய்தேன்.  ஏற்கெனவே சொன்ன மெட்டுதான்.  அதில் எழுத்தை மாற்றி ‘லா…லல்லா.. லல்லா… லல்லா.. லல்லா.லால லா…’ என்று மெட்டுக் கட்டினேன்.

கவிஞர் ‘என்னடா…முதலில் ‘நா’ வந்தது, இப்போது ‘லா’ வருகிறது?’என்று கேட்பார் என நினைத்தேன்.  ஆனால், கேட்கவில்லை!  பூமழை போன்று பாமழை சொரிந்தார்.  அந்தப் பாடல்

வான் நிலா நிலா அல்ல..
உன் வாலிபம் நிலா…

நானும் ‘லா;வில் முடித்தேன்.  கவிஞரும் ஒவ்வொரு வரியையும் ‘லா’விலேயே முடித்தார்.  இதில் அவரை அவரால் மட்டுமே வெல்ல முடியும்.

நான் ‘அண்ணே! எல்லா ‘லா’வையும் சொல்லிட்டீங்க…நாலு ‘லா’தான் பாக்கி’ என்றேன்.

’என்னடா, அந்த நாலு ’லா’?’

‘பாதர் இன் லா, மதர் இன் லா, பிரதர் இன் லா, சிஸ்டர் இன் லா’ என்றேன்.

கவிஞர் என்னை இறுகக் கட்டிக்கொண்டு கலகலவென சிரித்தார்.

-கவியரசு கண்ணதாசன் கதை, கண்ணதாசன் பதிப்பகம்.

No comments: