Showing posts with label காஃபி. Show all posts
Showing posts with label காஃபி. Show all posts

Saturday, August 20, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 14

நண்பர் திரு தியாகராஜன் அவர்களோடு பேசும்பொழுது, காஃபி பற்றிய பேச்சு எழுந்தது. 'நான் லியோ காஃபி-தான் குடிப்பேனாக்கும்' என்றார்! 'அடடா...!" என்று நாக்கைக் கடித்துக்கொண்டேன். லியோ-வும் நரசுஸ்-ம் நம்மை ஆண்ட காலத்தை மறக்க முடியுமா?

தமிழை உலகம் முழுதும் அறிய வைத்த 'காலத்தை வென்ற ரசனை இதுவே' ரஹ்மானை யாரால் மறக்க இயலும்? லியோ காஃபியின் விளம்பரங்கள் அந்தக் காலத்தில் மிகப் பிரபலம்!


இன்று இதைப் பார்க்கும்போது இவர் என்ன நினைத்துக் கொள்வார்? 'எப்படி இருந்த நான் இப்டி ஆயிட்டேன்?!' அட! நம்ம அர்விந்த் சாமிங்கோ அம்மணி!


என்னதான் வருடங்கள் உருண்டாலும் அதே பின்னணியில் இன்றைய 'காலத்தை வென்ற ரசனை'யைப் பாருங்கள்!




'பேஷ்! பேஷ்! காஃபி-னா அது நரசுஸ் காஃபிதான்...பேஷ்! பேஷ்! ரொம்ப நல்லாருக்கே' என்று சம்பந்தி உசிலைமணி ஆடியதை மறக்கத்தான் முடியுமா? (எழுத மறந்துட்டேனே, மறந்துட்டேனே!)


'பேஷ்..பேஷ்'-ஐத் தூக்கிச் சாப்பிடுவது போல வந்தது 'தேங்காய்' சுனாமி. பிராமணத் தம்பதிகளாய்த் தேங்காய் மற்றும் மனோரமா. விடுவாரா தேங்காய்?! இந்த விளம்பரத்தைப் பார்த்து விட்டு உங்களால் சிரிப்பை அடக்க முடியவே முடியாது!


இதே 'நரசுஸ்' நிறுவனத்தின் இன்றைய விளம்பரத்தைப் பார்க்கும்போது....அடடா...எல்லாம் மாறினாலும் 'பேஷ்..பேஷ்' மட்டும் அப்படியே!

Saturday, August 13, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 11

வார நாட்கள் மாலைகளில் ஏனையோரைப்போல் வெளியில் பொழுதைக் கழிக்காமல் வீட்டிலேயே ஓட்டுவேன். பெரும்பாலான மாலைகளில் 'அலுவல் வேலை' பிய்த்துப் பிடுங்கும்.

அலுவலகத்திலிருந்து வந்தவுடன், பாத்திரம் தேய்த்து, 'லைட்'ஆ டிப்பின் போட்டு, அந்த நாளைய முதல் காஃபியைத் தயாரிக்கத் துவங்குவது அவ்வளவு சுளுவான வேலை அல்ல தெரியுமோ?! வால்பாத்திரம் எடுத்து, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, அதன் மேல் பாலைக் கலந்து, அடுப்பில் ஏற்றி, நினைவாய் அடுப்பைப் பற்ற வைப்பது எவ்வளவு கஷ்டம் என்று 'இதுவரை செய்து பார்க்காதவன்'க்குத் தானே தெரியும்?!!

எதற்காக முதலில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, அப்புறம் பாலைக் கலக்கிறோம்? (இது பால்காரன் வேலையல்லவா!) அம்மாவின் அறிவுரைகளை நினைவில் வைத்து 'தண்ணி ஊத்தி, பாலை கலந்தாதான், அடிப்புடிக்காது, பாத்திரம் தேய்க்கறதுக்கும் ஈஸி!' ஸோ, பாத்திரம் நானே தேய்க்கறதால, கவனமா 'இத மட்டும் செஞ்சு போடுவேன்'!

ஸ்டார் பக்ஸ், Dunkin' Donuts, Folgers, Maxwell House, Seattle's Best, Van Houtte (காஃபி கொட்டே மாதிரி இது வான் ஹுட்டே?!) எனக் காஃபி வகைகள் இங்கு கொடி கட்டி பறந்தாலும், இன்னும் 'ப்ரூ'வை விடாமல் பிடித்து... (என்னடா! சிக்கரி ரொம்ப ஜாஸ்தியா இருக்குமே, உடம்புக்கு ஆகவே ஆகாதுறா - என் 'கரிசன' நண்பன் அங்கலாய்ப்புகளில் ஒன்று!) வைத்திருப்பதற்குக் காரணம் ஏதுமில்லை ஜென்டில்மென்! ரூமி வாங்கி வந்ததைக் குடித்துத் தீர்க்க வேண்டாமா?!

ப்ரூ-வை அப்பிடியே பாலில் கலந்து, காய்ச்சக்கூடாது. 'காய்ச்சல்' வாசனை காஃபி குடிக்கும்போது வந்து பாடாய்ப் படுத்தி, சுவையைக் குறைத்துவிடும். பாலை நன்றாகப் பொங்க விட்டு (மறந்த சில சமயங்களில் வெளியில் 'போங்கய்யா போங்க' விட்டு!), அடுப்பைக் கவனமாக அணைத்து, சரியான சதவிகிதத்தில் 'ப்ரூ'வைக் கலப்பது என்பது முன்னே சொன்னது போலச் சாமான்ய காரியமல்ல.

பாலை பிரிட்ஜ்-லிருந்து எடுத்து, கொதிக்க வைத்து, பில்ட்டர் காஃபி சாப்பிட்டுப் பார்த்தவனுக்கு, 'ப்ரூ' சரிப்படுமா என்ன?! (இன்னொரு சூட்சுமாபிகேஷன், காய்ச்சின பாலை மீண்டும் காய்ச்சி, காஃபி போட்டுக் குடித்துப் பாருங்கள், சுவை...ஊஹும்! டிகாக்ஷன் முதன் முறையாக இருந்தாலும் டேஸ்ட் சுமார்தான்!) அதே போல, ஆறிப் போன / மீதமான காஃபியை மீண்டும் காய்ச்சிக் குடிப்பவர்கள், போன ஜன்மத்தில் நிச்சயம் பெரும் பாவம் செய்திருக்க வேண்டும், கொடுப்பவர்களுக்கு... நிச்சயம் நரகம்தான்!

பதமாய்க் கலந்த காஃபி-யைக் கோப்பையில் குடிப்பது அவமானம், பிட்சாவுக்கு பூசணிக்காய் மோர்கூட்டு மாதிரி! டபரா (வட்டா) , டம்ளர்-தான் காஃபிக்கு உகந்தது. வசதியிருப்பவர்கள் 'ஸில்வர்' வைத்துக்கொள்ளலாம். இல்லாதவர்களுக்கு இருக்கிறது எவர்-ஸில்வர்!

'ஸில்வர்' என்றவுடன் சின்ன வயது சம்பவம் நினைவுக்கு வருகிறது. சின்ன வயதில், திருவல்லிக்கேணி வாசத்தில், டி வி பார்க்க நாலு வீடு தள்ளி ஓடுவோம். ஆசாரோத்தமான ஐயங்கார் வீடு. ஆஜானுபாகுவாய், நெற்றி நெறைய திருமண் 'சிடு சிடு' (டிகாக்ஷன் கலர்) மாமா-வுக்கு, லக்ஷணமாய்ப் பார்த்தவுடன் வணங்கும்படியாய் மடிசார் கட்டிய 'சிரித்த' மகாலட்சுமி (பால் கலர்) மாமி 'ஸில்வர்' வட்டா, டம்ளரில் காஃபி கொடுப்பதும், மாமா எங்களையெல்லாம் ஒரு 'சிம்ஹ'ப் பார்வை பார்த்துக்கொண்டே காஃபியை மேலும் கீழுமாய் ஆற்றி, ஆசாரமாய்ச் சீப்பிக் குடிப்பதும் என்றும் பசுமையான நினைவுகள்.

டபரா-வுல அலுங்காம ஆற்றி, டம்ளரில் நுரை ததும்பிய பின், கொஞ்சம் கொஞ்சமாய் அண்ணாத்திக் குடிப்பதில் இருக்கும் சுகம் வார்த்தைகளில் வருவதில்லை. அனுபவித்தே அறியவேண்டியது மாமூ! (அமெரிக்காவுக்கு என்னோடு பயணம் செய்தவைகளில் 'டபரா/டம்ளர்'-க்கு முக்கிய 'இடம்'!) என்னுடைய தாய் மாமா அவர்களுக்குக் காஃபி, டபரா / டம்ளர் இல்லாமல் சரிப்படாது! இதனாலேயே மாமி, மாமா போகும் இடங்களில் 'டபரா / டம்ளர்' உஷார்படுத்தி, மாமாவைக் 'கவனித்து' விடுவதை நான் ரொம்ப லேட்-ஆகக் 'கண்டு' கொண்டேன்! (ஹும்! கொடுத்து வைத்த மகராசர்!)

பெரும்பாலான அமெரிக்க 'தேசி' (மாற்றிப் படித்துவிடாதீர்கள்!) வீடுகளில் காஃபியை 'அவன்'-ல் (அதானையா, மைக்ரோவேவ்!) 'சுட'வைத்துதான் உறிஞ்சுகிறார்கள். இன்றுவரை 'அவன்' இவனுக்குச் சரிப்படவில்லை! டேஸ்ட் இல்லை சுவாமி!

இதெல்லாம் விட்டுத்தள்ளுங்க...ஒரு நாள் மாலை, காஃபி-யுடன் வலைத் தளத்தை மேய்ந்ததில், சிக்கிய குறும்படம் பார்த்த பின், கொஞ்சம் பயமாய்ப் போனது...நீங்களும் பார்த்துட்டு அப்புறமா என்னைப் பத்தி என்ன நெனக்கறீங்கன்னு ஒரு வரி எழுதிப் போடுங்க :-)