Showing posts with label காக்டெய்ல். Show all posts
Showing posts with label காக்டெய்ல். Show all posts

Tuesday, June 07, 2011

பரதேசியின் டைரிக்குறிப்பு - 3

அமெரிக்கா வந்தபின்பு, நண்பர்களுடன் தொலைபேசுவது சற்றுக் குறைந்து போனதில் எனக்கு வருத்தமதான். அதுவும், சென்னை வாசகர் திரு ஜி ஆர் ஷங்கர் அவர்களுடன் பேச இயலாததில்....

ஜி ஆர் ஷங்கர் அவர்கள் பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். மனிதருடன் பேசுவது என்பது அர்த்த ராத்திரியில் மட்டுமே நடக்கக்கூடிய விஷயம். ஒவ்வொரு மாதத்தின் பின்பாதியில்...அதுவும் வார நாட்களில், சுதந்திர இரவுப் பறவையாய் அவர் திரிந்து கொண்டிருக்கும் தருணங்களில் அரசியல் / சினிமா/ வாழ்க்கை போன்ற பலவற்றை என்னோடு பகிர்ந்து கொள்வது அவருக்குப் பிடித்த ஒன்று. எப்போதும் அவர் செலவில் என்னை அழைப்பதின் நோக்கமும் அதுதான்.

வாய்ப்பு சென்ற சனிக்கிழமை கிடைத்ததில்....மலையாளத் திரைப்படங்களைப் பற்றிய பேச்சில்...'பார்த்தே தீர வேண்டிய' சில படங்களைப் பற்றிக் குறிப்பிட்டார். அதில் ஒன்று 'காக்டெய்ல்' (மலையாளம், 2010)! 'விக்கி'யில் மேய்ந்த போது, படம் 'critical acclaim' வகையாம்! (தெரிந்த இன்னொரு முக்கியமான விவரத்தைக் கடோசியில் குறிப்பிடுகிறேன்).

இரண்டு மணித்துளிக்குப் பத்து நிமிடங்கள் குறைவாக ஓடும் காக்டெய்ல் 'த்ரில்லர்'க்குரிய எல்லா அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு படம்.



அழகான மனைவி பார்வதி (ஸம்வ்ருதா) , அருமையான பெண் குழந்தை அம்மு, செல்வாக்குள்ள பதவி என வாழ்ந்து வரும் ரவி (அனூப் மேனன்)க்குத் திடீரென சோதனை வருகிறது. அதுவும் எப்படி? பெண்ணைப் பொறுப்பாக 'ஆயா'விடம் ஒப்படைத்து விட்டு, மனைவியுடன் ஊருக்குக் காரில் போகும்போது வெங்கடேஷ் (ஜெயசூர்யா) என்பவரை வழியில் ஏற்றிக்கொண்டதால்!

கார் பழுதடைந்து விட்டதால் 'லிஃப்ட்' கேட்டு ஏறிக்கொள்ளும் வெங்கடேஷ் துப்பாக்கி / வீட்டில் அம்முவை மிரட்டல் முனையில் வைத்து இருவரையும் பாடாய்ப் படுத்துகிறான். கைப்பேசி / மணிபர்ஸ்-களைப் பிடுங்கிக்கொளவது, கைக்கெடியாரத்தை அடகு வைக்கச் சொல்வது, வங்கியிலிருந்து 25 லட்சங்களைக் கேட்டு வாங்கி எரித்து ஏரியில் போடுவது, ரவியின் அலுவலக ரகசியங்களை 'போட்டி கம்பெனிக்கு' கொடுக்க வைப்பது, 'பலான' பார்ட்டியை ரவியை விட்டு ஏற்பாடு செய்யச் சொல்வது, மனைவி பார்வதியை ரவியின் முன்னிலையில்...ஒடுங்கிப் போகும் ரவிக்கு எழும் கேள்வியெல்லாம் 'ஏன்? ஏன்? ஏன்?'

முடிச்சு அவிழும்போது, நமக்கு வியப்பாயிருக்கிறது. 'ரவிக்கு இவனை எப்படித் தெரியாமல் போயிருந்திருக்கும்?' கேள்வியும் எழுகிறது! காக்டெய்ல் என்கிற தலைப்பின் அர்த்தமும் புரிகிறது (நண்பர் ஜி ஆர் ஷங்கர் அவர்களுக்குப் புரியாததில் எனக்கு ஆச்சர்யம்தான்).

ஜெயசூர்யா (வசூல் ராஜா வயிற்றுவலிக்காரர்!) வந்தபின்-தான் விறுவிறுப்பு. சாதாரண கண்ணாடி, மீசை, trimmed தாடியுடன் அவரைப் பார்க்கும்போது...அடடா! ஒரு வில்லன் இவ்வளவு அமைதியாகவும், அழுத்தமாகவும் இருப்பாரா? ('கனா கண்டேன்' ப்ருத்விராஜ் போல!)

துணைவி பார்வதியாய் வரும் ஸம்வ்ருதா சுனில்...ஆஹா...ஓஹோ...தமிழ் சினிமா! ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறீர்கள்?! (ஹி! ஹி!)




15-20 நிமிடங்களுப்ப்பின், ஒரே நாளின் நிகழ்வாதலால ஒளிப்பதிவும் இயல்பாய் ஒத்துழைத்திருக்கிறது. பாடல்களில் 'நீயாம் தணலினு தாழே' superb!

அங்குமிங்கும் நகராமல் கதையை கொண்டு சென்றமைக்கு

திரைக்கதையாளர் (ஷ்யாம் மேனன்),
வசனகர்த்தா (அனூப் மேனன்),
இயக்குநர் (அருண் குமார்)

நன்றி சொல்லியே ஆக வேண்டும்....யாருக்கு?

'Butterfly on a Wheel' எனும் கனடியன் படத்திற்கு!