Showing posts with label சாரு நிவேதிதா. Show all posts
Showing posts with label சாரு நிவேதிதா. Show all posts

Sunday, February 26, 2012

எக்ஸைல் - 1



இது என் பார்வை. விமர்சனம் அல்ல. ஏனென்றால், சாருவை எனக்குப் பிடிக்கும்.

சாரு கையொப்பமிட்ட 'எக்ஸைல்' நாவலை 4 நாட்களாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். 126 பக்கங்கள் போயிருக்கின்றன. சாருவின் கட்டுரைகளைப் படித்தவர்களுக்கு, படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு பெரும்பாலான பக்கங்கள் ஏற்கெனவே அறிமுகமானதுதான்.

கதையின் முடிவு துவக்கத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. சுரேஷ், அஞ்சலி தம்பதியினருக்கு நடுவில் உதயா, அஞ்சலியின் 60 வயதுக் காதலன் (அல்லது 50?!). கூடா உறவுடன் துவக்கம் (அல்லது முடிவு?!)

சாருவின் எழுத்து காட்டாறு போல. தலைப்பை எடுத்துக் கொண்டால் ஓட்டம்தான். குஷால்தாஸ், பக்கிரிசாமி, குணரத்தினம், நளினி, சாட் பெண், ஜிம்கா சாமியார், பெருந்தேவி என பக்கங்கள் (கொக்கரக்கோ!) நீள்கின்றன. தன்னைத் தமிழகம் புரிந்துகொள்ளவில்லையே என்கிற நினைப்பும் உண்டு. ஊடே அஞ்சலி/உதயா காதல்/காமம் கலந்த உரையாடல்கள் பல மொழிகளில்.

எனக்குத் தெரியவே தெரியாத எழுத்து, இசை, பாடல்-களைப் படிக்கும்போது பிரமிப்பு. 'இணையத்தில்தான் இறைந்து கிடக்கிறதே? எடுத்து எழுதுவது சாரு போன்றவர்களுக்குக் கஷ்டமா?' எனப் பொத்தாம் பொதுவாய்க் குற்றம் சாட்டுபவர்களுக்கு - எடுத்து எழுதுவதற்கும், அனுபவித்து எழுதுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது ஐயா!

நண்பர் தியாகராஜனிடம் உண்மையைச் சொன்னேன் 'எக்ஸைல் என்னுள் தாக்கத்தை இன்னும் ஏற்படுத்தாதது ஏமாற்றம்தான். ஆனால், படிக்கத் தூண்டுகிறது' என்றதற்கு 'பின்நவீனத்துவம் என்றால் என்ன ரங்கா?' என்றார்! 'எனக்கும் தெரியாது!' என்றேன். ஆனால், எங்கள் இருவருக்குமே சாருவைப் பிடிக்கவே செய்கிறது.

பேச்சு திசை மாறி, எக்ஸைலின் விற்பனைக்குத் திரும்பியது. 'சேத்தன் பகத் போன்றவர்களின் புதினங்கள் விற்பனையாகும் அளவிற்கு, தனது புத்தகங்கள் ஆகவில்லையே என்கிற எண்ணம் சாருவிற்கு நிச்சயம் இருக்கும். அதற்காகவே எக்ஸைலை விற்பனை செய்வதற்குச் சிரத்தை எடுத்துக்கொள்கிறார்' என்றார் தியாகராஜன். அவர் கூறுவதிலும் உண்மையிருக்கிறது.

'கமல் என்னதான் உடல் முழுக்கக் கறுப்பாய் 'அபிராமி! அபிராமி!' என நடித்தாலும், ரஜினி 'சாங்குசிக்கு, சாங்குசிக்கு, சாங்கிசிக்குச்சா' என இடுப்பை ஆட்டுவதுதான் எடுபடுகிறது! ஆக, எல்லாத் துறைகளிலும் இந்தப் 'பிரச்னை' உண்டு' என்றேன். ஆறுதலான விஷயம் என்னவென்றால் கமல் காம்ப்ரமைஸ் செய்வதுபோல சாரு செய்ய நினைக்காதுதான் அவருக்கென தனி இடத்தைத் தந்திருக்கிறது.

பாசாங்குகளை விட்டுவிட்டு படிக்கும் எவருக்கும் சாருவை ரசிக்க முடியும். ஆனால், அவரின் எழுத்தை வைத்து அவரையும், அவரது வாசகர்களையும் எடைபோட்டு, ஒதுக்கி வைத்து, ஓரம் கட்டுவதுதான் இன்றுவரைக்கும் நடந்து கொண்டிருக்கிறது.

பின்குறிப்பு: எக்ஸைல் என்பதற்கான தமிழ் வார்த்தை 'நாடு கடத்தப்பட்டவர், அஞ்ஞாத வாசம்'. கடைசி பாராவைப் படித்தால் உங்களால் தலைப்பை நன்றாகப் பொருத்திக் கொள்ள முடியும்.

Tuesday, October 05, 2010

எந்திரனும் சாரு ஸாரும் - 1

எந்திரன்: இது போன்ற குப்பையை தமிழ் சினிமா சரித்திரத்திலேயே பார்த்ததில்லை. தமிழ் சினிமாவின் நிரந்தர அவமானம்.

-திரு சாரு நிவேதிதா, ட்விட்டரில்

இதை என் கஸினிடம் சொன்னபோது கிடைத்த ஒற்றை வரி பதில் அல்லது கேள்வி 'Who cares?!'

Saturday, August 07, 2010

கனவுகளை விதைத்துவிடு!

அதிகம் பேசப்படும் 'இன்ஸெப்ஷன்' எனும் ஆங்கிலப் படத்தைக் காண நேர்ந்தது.



எனக்கு ஓரளவுக்குத்தான் புரிந்தது என்று சொல்லிக்கொள்வதில் வெட்கம் ஏதுமில்லை. 'கனவுகளை ஒருவரின் ஆழ்மனதில் விதைக்கமுடியும்' என்கிற கோணம், 'கனவுகளில் சிக்கி வாழ்வை இழக்கும் (அ) இழந்து கொண்டிருக்கும்' கதாநாயகன் என்று கதை நகர்கிறது. தொழில்நுட்பத்திலும், இசையிலும், எடுத்துக்கொண்ட கருவிலும் (புரியாவிட்டாலும் கூட) பிரமிப்பை ஏற்படுத்துகிறது. என்னுடைய சக ஊழியர் அழகாக விவாதித்து, எனக்குப் புரிய வைத்தார்.

சாரு நிவேதிதா(அவரே இருமுறை பார்த்திருக்கிறாராம்! அப்படியென்றால் நானெல்லாம் எந்த மூலை?!) அவர்களின் கோணம் சுவாரஸ்யமாயிருந்தாலும், படத்தை இன்னும் பார்க்காதவர்கள், இதைப் படிக்க வேண்டாமெனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்( படம், கதையுடன் விரிவாக விவரிக்கப்பட்டு, ஆராயப்பட்டிருக்கிறது).

இந்தப்படம் எனது
தம்பிக்கும், அண்ணாத்தைகளுக்கும், ஜேகே / சந்தர் / நாக் / ஸ்ரீராம் / அபி / சின்ன சுவாமிஜி போன்றவர்களுக்கு நிச்சயம் புரியும் / பிடிக்கும். அதுவும், மனித மூளையினை ஆராயும் அண்ணாத்தை திரு ஸ்ரீதர் அவர்களுக்கு ரொம்பவும் பரிச்சயமாயிருக்கும்.

மல்டிப்ளக்ஸ் அரங்கில், துல்லிய (எ) உயரிய தரத்தோடு பார்க்க வேண்டிய அற்புதம் 'இன்ஸெப்ஷன்'.

பின் குறிப்பு: சென்னை வாசகர் திரு ஜி.ஆர். ஷங்கர் அவர்களுடன் பேசும்போது 'பார்க்கப்போவதாய்' சொன்னார்; பார்த்துவிட்டு என்னதான் எழுதப்போகிறார்?!