Showing posts with label ஜெயநகர். Show all posts
Showing posts with label ஜெயநகர். Show all posts

Saturday, January 01, 2011

இனிய புத்தாண்டு!

கடந்த ஆறு வருடங்களாக அலுவலகத்திலதான் எனது புத்தாண்டு துவங்கியிருக்கிறது. அதிகாலை மூன்றுக்கு விழித்துக்கொண்டு, நான்கே-கால் மணிக்குக் காரில் ஏறி, ஐந்துக்குள் அலுவலகத்தில் அடைந்துவிடும் புத்தாண்டு எனக்கு!

ஸப்போர்ட் ப்ராஜக்ட்-லிருந்து விலகியதால், இந்த வருடம் புத்தாண்டு வித்தியாசமாயிருந்தது! ஐந்திற்கு வைத்த அலாரத்தைத் தணித்துவிட்டு, மெதுவாய் ஆறரைக்கு எழுந்து, நிதானமாய்க் குளித்து, மிக நிதானமாய் சந்தியாவந்தனம், பூஜைகளை முடித்து, ராகி குட்டா ஆஞ்சநேயர் ஆலயத்துக்குச் சென்றோம்.


பத்தடிக்கு விக்னேசுவரர் இருந்தாலும், கோயிலுக்கு அனுமன் பெயர் சூட்டியிருப்பது அதிசயம். கண் கொள்ளாமலிருக்கும் விநாயகரைத் தரிசித்து, அன்னபூரணிக்கு அரிசியிட்டு (சாப்பாட்டுக்கு யாரும் கஷ்டப்படக்க்கூடாது மற்றும் நேரத்துக்குச் சாப்பாடு கிடைக்கவேண்டுமப்பா!), 40 படிகள் (சுமார்!) ஏறினால் சிவ பெருமான், ராம லக்ஷ்மணர்கள் சகித ஆஞ்சநேயரைக் கண் குளிரத் தரிசிக்கலாம்.

வெள்ளியில் பிள்ளையார், வெள்ளையாய் அன்னபூரணி, தங்கத்தில் மாருதி தக தகவென ஜ்வலித்தனர். கூட்டம் அதிகமில்லாததால் தரிசனம் இயல்பாகவும், அமைதியாகவும் நிகழ்ந்தது.

பசியெடுத்ததில், மெதுவாய் நடந்து எஸ் எல் வி உணவகத்துக்குச் சென்று மாடியில் அமர்ந்தோம். இரண்டு மேசைகள் மட்டுமே நிரம்பியிருந்தன. 'தோசை' சாப்பிட்டுப் போரடித்துப் போனதால், இட்லி வடையுடன், வித்தியாசமாய் 'பிஸி பேளா பாத்'! அடடா! அட்டஹாஸம்(அன்னபூரணி எ·பெக்ட்!)!! 'அடக்கி வாசிக்கும்' விஷ்ணு கூட அடம்பிடித்து 'பிஸி பேளா'வை ஒரு பிடி பிடித்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! சாப்பிட்டு, அரை கப் (1 by 2) கா·பியைச் சுவைத்தபோது 'இதை விட வேற என்னடா வேணும் ரங்கநாதா உனக்கு?!' என்றது மனது.

மூன்று சக்கர வாகனத்தைப் பிடித்து, ஜயநகர் பிள்ளையார் கோயிலுக்குச் சென்றால்.... அடேங்கப்பா! கூட்டமோ கூட்டம்! பணக்காரப் பிள்ளையார் தங்கத்தில் மினுமினுக்க, அனேகமாய் எல்லோரும் காக்காய் பிடித்துக்கொண்டிருந்தனர்! (பின்னே, வேண்டினால் உடனே நடத்திவிடும் பாப்புலர் பிள்ளையாராயிற்றே!) உடல் நோகாது பூக்கொண்டு செந்நிற மேனியனான கணபதியைத் துதித்தால், வாக்குண்டாம், நல்ல மனமுண்டாம், லக்ஷ்மி கடாக்ஷம் உண்டாம் என்கிறார் ஔவைப் பாட்டி. ஆனால், 'மேனி நுடங்காது' (உடல் நோகாது) என்கிற பதம் இந்தப் பிள்ளையாருக்குப் பொருந்துமா எனத் தெரியவில்லை! ஏனென்றால், தீபத்தை ஒற்றிக்கொண்டு, தீர்த்தத்தை வாங்கிக்கொண்டு, ஒரு சுற்று சுற்றி வருவதற்குள் கொஞ்சம் கசங்கித்தான் போய்விட்டோம்!

ஜயநகர் பேருந்து நிலையம் அருகில், கணேஷ் ஜுஸ் எதிரிலிருக்கும் திண்ணையில் ஆராமாய் உட்கார்ந்தால் உலகம் மாறியிருப்பது நிதர்சனமாய்த் தெரிகிறது. இளம்பெண்கள் உட்கார்வது, செல்பேசி அதிர்வது, பின்னர் ஆண்மகன் வந்து 'இட்டாந்து' செல்வதும் இயல்பாயிருக்கிறது. வயதானவர்கள் என்னதான் யோசித்துக் கொண்டிருப்பார்கள்?! உட்கார்ந்திருந்த என் அம்மாவைக் கேட்டேன். சிரித்தாள்!

விஷ்ணுவிற்கு ஒரு ஆட்டோ, ஒரு லாரி, ஆரஞ்ச் புக் (ஜயநகர் பிள்ளையார் நோட்டீஸ் கம் மினி புக்-ஐக் காட்டி ஏமாற்றி விட்டேன்!), எனக்கு சக்தியுடன் பக்தி + தினகரன் + துக்ளக், அம்மாவுடன் மீண்டும் ஒரு மினி கா·பி (அதிகமில்லை ஜெண்டில்மேன், ஐந்தே ரூபாய்தான்!, விஷ்ணு இதிலும் பங்கு, ஆச்சரியம்!) என என்னுடைய புத்தாண்டின் முதல் நாள் முதல் பாதி 'நிம்பவே' வித்தியாசம்தான்.

Monday, September 21, 2009

பல நாட்களாகப் பார்த்து மட்டுமே ரசித்து வந்த மய்யா'ஸ்-க்கு குடும்பத்துடன் சிற்றுண்டி உண்ணச் சென்றேன்.

ஜயநகர் 4வது ப்ளாக் காவல் நிலையம் மற்றும் பிள்ளையார் கோயில் அருகில் அமைந்துள்ள மய்யா'ஸ், எம் டி ஆர் என்கிற பாரம்பரிய உணவகத்தைச் சேர்ந்தது. காலை 7-11 சிற்றுண்டி, மதியம் 12-2.30 சாப்பாடு, மாலை 3-5 நொறுவல், இரவு 6-8 இரவுச் சாப்பாடு, திங்கள்தோறும் விடுமுறை என அட்டவணை போட்டு வைத்தாலும் கூட்டத்திற்குக் குறைவே இல்லை.
முதல் தளத்திற்குச் சென்றவுடன், பெயர்/எண்ணிக்கை குறித்துக்கொள்ளப்பட்டு , இடப்பட்ட நாற்காலிகளில் அமர்த்தி வைக்கப்பட்டோம்.

பத்து நிமிட காத்திருத்தலுக்குப் பின் உள்ளே அனுமதிக்கப்பட்டவுடன் 'என்ன ஆர்டர் ஸார்?' டிபிகல் ஸௌத் இண்டியனாய் 'இட்லி, வடை, சாதா தோசை, மசாலா தோசை' எனக் கூறிவிட்டு அங்கிருந்த தொலைக்காட்சியில் லயித்தோம். 'எது எது செய்யக்கூடாது? செய்யலாம்' என H1N1 அறவுரைகள் நிகழ்ந்து கொண்டிருந்தன.

சுற்றி நொக்கியதில், சமையலறை பளிச்சென கண்ணாடியினூடே தெரிந்தது. பேரர்கள் மிகவும் மும்முரமாய் இருக்க, அந்த இடமே ஒரு துரித கதியில் இயங்கிக்கொண்டிருந்தது. இதற்குள் 1 இட்லி, 1 வடை வந்துவிட்டது!

இட்லி, தொட்டுக்கொள்ள க்ரீன் சட்னி (சிவா பாஷையில்!) மற்றும் சற்றே இனிப்பான சாம்பார்; தவிர 'இத்துணூண்டு கப்'-ல் நெய்! (அப்டி போடு!) இந்த கப் எல்லா ஐட்டங்களும் இலவச இணைப்பு போல!

நன்றாக ஒரு 'பிடி' பிடித்தபின், 1/2 கா·பி சொன்னோம். வெள்ளி முலாம் பூசப்பட்ட (அல்லது வெள்ளி?!) டம்ளர்கள் வந்தன. அருமையான அரை கா·பி குடித்தது, முழு ·பில்டர் கா·பி எ·பெக்ட்-ஐத் தந்துவிட்டது!

பில்-ஐப் பார்த்த 'மாமி' அவ்வளவு சுரத்தாயில்லை!
1 இட்லி, 1 வடை 35
1 மசாலா தோசை 35
1 சாதா தோசை 30
1 கா·பி 15
அதிசயமாய், க்ரெடிட் கார்ட் வாங்கிக்கொள்கிறார்கள்!

கீழ்த் தளத்தில் இனிப்பு மற்றும் நொறுவல் ஐட்டங்கள் சற்றே தூக்கிய விலையில் கிடைக்கின்றன. இது தவிர பு·பே ப்ரேக்பாஸ்ட் 125-க்கு ஐஸ்க்ரீமுடன் கிடைக்கிறது (ஞாயிறு மட்டும் 150!).

இரண்டாவது தளத்தில் '·பைன் டைனிங்' என்கிறார்கள். என்னவென்று இன்னொரு முறை பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும்!

வலது பக்கத்தில் கா·பி கவுண்டர் தனியாக (ரொம்ப நெரிசலுடன்!) ஓடிக்கொண்டிருக்கிறது!
மொத்தத்தில், கையேந்தாமல், கால் ஊன்றாமல், அவதிப்படாமல், அமைதியாகவும், ருசித்தும், ரசித்தும் சாப்பிட்ட மிக சுகமான அனுபவம் மய்யா'ஸ்.