Showing posts with label திருவல்லிக்கேணி. Show all posts
Showing posts with label திருவல்லிக்கேணி. Show all posts

Thursday, July 22, 2010

திருவல்லிக்கேணி!

புனே வாசகர் திரு சேகர் அவர்கள் எழுதியது

மதராஸ் திருவல்லிக்கேணி என்று சொல்லும்போது பிறந்தது முதல் பதினெட்டு வருடங்கள் அங்கு இருந்தது ஒரு CD யாக மன திரையில் ஓடுவது சகஜமாகி விட்டது.

பாரதி ராஜா படத்தில் காட்டும் கிராமம் மாதிரி வயலோ, ஒரு சின்ன ஆறு, வாய்க்கால், அக்ரஹர்ரம், கோவில், மாட்டு வண்டி, என்றல்லாம் இருக்காது. ஆனாலும் பத்து தெருக்கள், பெரிய தெரு பிள்ளையார் கோவில், சிவப்பு கட்டிடமாக ரெட் போர்ட் போல ஹிந்து உயர் நிலை பள்ளி, பார்த்தசாரதி கோவில் (அத்தனை உயர பெருமாளுக்கு ஸ்டூலில் ஏறி மீசை வரைவர்களா தினமும்) , அதை ஒட்டி குளம் -- மாலை வேளைகளில் பச்சை காய் கறிகளை பரப்பி விற்கும் அழகு, மெரினா பீச், தேங்கா மாங்க பட்டாணி சுண்டல், பற்களை காட்டி சிரிப்பது போல கிளி மூக்கு மாங்காய் பத்தைகள். எதை எழுதுவது எதை விடுவது?

ரத்னா கபே இட்லியும் சாம்பாரும், மனோரமா பாட்டை நினைவு படுத்தும் ஜாம்பஜார்.... மறந்து விட்டேனே ... சேப்பாக் ஸ்டேடியம்... பொங்கல் பண்டிகை சமயம் வரும் கிரிகெட் மேட்ச்., பிள்ளயார் சதுர்த்தி சமயத்தில் களிமண்ணை பிசைந்து அச்சில் போட்டு விற்கப்படும் பிள்ளை பொம்மைகள், அதற்கு குடை, சிவப்பு கருப்பு மணி கண்கள், எருக்க மாலை...மிகவும் நெருசலான தெருக்கள்.. மசூதிகளை ஒட்டி இந்துக்களும் முஸ்லிம்களும் சேர்ந்து வாழும் வீடுகள்.. மைலாபூருக்கும், தி நகருக்கும் இல்லாத ஒரு பெருமை இதுதான்.

கடந்த ஒரு வாரம் சந்தித்த மக்கள் திருவல்லிகேணியை சேர்த்தவர்களாக இருந்தது அதிசயம். ஜனகல்யாண் நிறுவனர் திரு. செம்பூர் ராமன், TCS HUMAN RESOURCES குளோபல் ஹெட் திரு.கணேஷ், உடன் பணி புரியும் சங்கர் பத்மநாபன். எல்லோர் முகத்திலுமே அந்த திருவல்லிக்கேணி மகிழ்ச்சியை காண முடிந்தது. 1937 , 47 , 57 , 67 , 77 87 இல் பிறந்தவர்களாக இவர்கள் இருந்தாலும் எல்லார் மனதிலும் ஒரே மாதிரியான CD தான்.

அல்லி மலர்கள் இருந்த குளம் கொண்ட பார்த்தசாரதி பெருமாள் கோவில் அதனால் திருவல்லிக்கேணி என்று பெயர் வந்தது.. பேயாழ்வார் பாடினார், பாரதியார் வாழ்ந்த இடம் என்றல்லாம் ஆராய்ந்தாலும்.. இது ஒரு தனி சிறப்பு வாய்ந்த இடம்.. இளைஞர்கள் ரூம் எடுத்து தங்கும் இடம் .. சுஜாதா கதையில் வரும் சைடோஜி லேன் மெஸ்ஸை யாரும் மறக்க மாட்டார்கள்.

நீங்கள் பாசாத்தி கோயிலண்டயோ, கிஸ்ணாம் பேட்டயன்டயோ, ஜாம்பஜருக்கு அப்பாலையோ, ஒரு தபா தங்கி இர்ர்தீங்கன்னா .... உங்க இஸ்டதுக்கு தில்லகேனி பெருமைய எடுத்து இத்த தொடருங்க... இன்னா நயனா நான் சொல்றது புர்தா?!!