Showing posts with label மரமும் மனிதனும். Show all posts
Showing posts with label மரமும் மனிதனும். Show all posts

Sunday, June 20, 2010

கோடியில் ஓருவர் – 1

சாலையில் கடுமையான வெயிலில் நடக்கும் போதெல்லாம், ஓரமாய், அமைதியாய் நிழலைப் பொழியும் மரம் தாயின் மடிபோல் சுகமாய் அரவணைத்துக் கொள்ளும். ஒரு போதும் நினைத்துப் பார்ப்பதில்லை, இந்த மரத்திற்கு விதையிட்டு, நீரூற்றி வளர்த்தது யார், இந்த மரத்தின் வரலாறு என்னவாக இருக்கும் என்று.


மரம் பற்றிய ஆழ்ந்த சிந்தனையில்லாத துரதிருஷ்டம், அந்த இரண்டு நபர்களைச் சந்தித்த போது தகர்ந்து போனது. மரத்தின் மேல கணக்கிலடங்கா காதலும் வெறியும் மனதில் வேரூன்றியது... ஈரோடு மாவட்டம் இந்த இரண்டு நபர்களைப் பெற என்ன தவம் செய்ததோ!!!?

ஈரோடு அருகே உள்ள ஒரு மிகச் சிறிய நகரம் காஞ்சிக்கோவில். நகருக்குள் நுழைந்து “ஏனுங்க இந்த மரம் நடுவாரே” என்று கேட்க ஆரம்பிக்கும் போதே “அட நாகாராஜண்ணன கேக்றீங்களா, அந்த வழியாப் போங்க” என்று பெருமிதத்தோடும், நம்மை பார்ப்பதில் கொஞ்சம் வெட்கத்தோடும் வழி காட்டுகிறார்கள்.
தன்னுடைய வீட்டிலேயே கைத்தறி துண்டு நெசவு செய்வதை தொழிலாகக் கொண்டிருக்கிறார் 56 வயதான திரு. நாகராஜன் (04294-314752 / 94865-20483) அவர்கள். மிக மிகச் சாதாரணமான ஓட்டு வீடு. எங்களுக்கு நாற்காலிகளை எடுத்துப் போட்டு விட்டு மிகுந்த சினேகமாக சிரிக்கிறார்.

இந்த மாமனிதர் தனது 17வது வயதிலிருந்து கடந்த 39 வருடங்களாக விதைகளை தெரிவு செய்து, முளைக்க வைத்து, செடியாக்கி, இடம் தேடி நட்டு, பெரிதாகும் வரை நான்கைந்து முறை முள்வேலி அமைத்து, தினமும் நீர் ஊற்றி ஆடு, மாடு, மனிதர்களிடமிருந்து காப்பாற்றி இன்று வரை மரமாக வளர்த்தெடுத்திருப்பது ஒன்றல்ல இரண்டல்ல..... பத்தாயிரத்திற்கும் அதிகம்.

ஆரம்பத்தில் தன் செயல்களைக் கண்டு பைத்தியகாரன் என்று ஊரே சொன்னது எனச் சொல்லி சிரிக்கிறார். பள்ளிக்கூடம் அருகே தான் வளர்த்து ஆளாக்கிய மரத்தில் மாலை வேளைகளில் பல்லாயிரக்கணக்கான சிட்டுக் குருவிகள் கீச்கீச்சென கத்துகிறது என்று சொல்லும் போது அவரது முகம் மகிழ்ச்சியில் திழைக்கிறது.

பேச்சினிடையே, எவ்வளவோ மறுத்தும் சமையலறைக்குச் சென்று அரிவாள்மனையில் எலுமிச்சம் பழத்தை அரிந்து, சர்பத் தயாரித்துக்கொடுத்து உபசரிக்கிறார். மகள் வயிற்றுப் பேரன் இவரோடு வளர்கிறார், அதோடு அந்தச் சிறுவனும் தற்சமயம் நான்கு மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார்.

தினமும் காலையிலும், மாலையிலும் மரம் நடுவதையும், அதனைப் பராமரிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டிருப்பவருக்கு வந்த சவால்கள் பல. சாலையோரம் நட்ட மரங்களை, விவசாய நிலத்தில் நிழலடிக்கிறது என்று விவசாயிகள் வெட்டிய சோகமும், சாலைப் பணியாளர்கள், மின்சார ஊழியர்கள் என அவ்வப்போது பல சில்லறை காரணங்களைச் சொல்லி மரங்களை சர்வசாதாரணமாக வெட்டி வீசுகிறார்கள் எனக்கூறும் போது அவருடைய மனதில் உணரும் வலி அப்படியே முகத்தில் வந்து படிகிறது. குறிப்பாக மரத்தின் கிளையை ஒரு நாள் சரக்குக்கும், பரோட்டாவிற்கும் விறகாக மாற்றும் அற்ப மனிதர்களும் இருக்கிறார்கள் என அறியும் போது நமக்கே மனது வெம்புகிறது.


ஒவ்வொரு மரத்தையும் தன் குழந்தையாகவே பாவிக்கிறார். ஆல், அரசன், புங்கை, வேம்பு, இச்சி, இலுப்பை என வகை வகையாய் எட்டு திசையிலும் வளர்த்தெடுத்திருக்கிறார். கடும் கோடையிலும் கூட மரக்கன்றுகளைச் சுற்றி தேங்காய் நார் தூவி, அருகில் உள்ள விவசாயிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி நீர் பெற்று தண்ணீர் தெளித்து செடிகளை காப்பாற்றியிருக்கிறார்.

காஞ்சிக்கோவில் அருகில் இருக்கும் ஒரு மலைக்கோவிலைச் சுற்றி விதவிதமான மரக்கன்றுகளை நடவு செய்து அந்த மலைமேல் இருக்கும் பாறைகளுக்கிடையே தேங்கியிருக்கும் தண்ணீரை குடத்தில் எடுத்து வந்து செடிகளுக்கு ஊற்றி, அதைக் காப்பாற்றி, இன்று அந்த மலையைச் சுற்றி அற்புதமாக மரங்களை வளர்த்து அந்த பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

மிகுந்த ஆச்சரியமாக, நெகிழ்ச்சியாக இருக்கிறது, இப்படி ஒரு மனிதர் இருக்க முடியுமா என்று.

Courtesy:
Mr Sowmyanarayanan / Mr JK