Showing posts with label HFD. Show all posts
Showing posts with label HFD. Show all posts

Saturday, June 16, 2012

தமிழ் சினிமா ’அப்பா’க்கள்!



சிவாஜியைப் போல ‘அப்பா’ பாத்திரத்தை யாரேனும் செய்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.  பார் மகளே பார், வியட்நாம் வீடு, கௌரவம், தங்கப்பதக்கம், தேவர் மகன் என்று வூடு கட்டி ஆடியிருக்கார்!

காதல் மன்னன் கண்டிப்பான அப்பா ‘பிலஹரி’யாய் மாறியது, சபல அப்பாவாய் ‘அவ்வை சண்முகி’யில் கலாய்த்தது..சூப்பர்!

மேஜர் - அப்பாவாகத் துவங்கிய ‘மேஜர் சந்திரகாந்த்’ – பின்னர் எவ்வளவு படங்களுக்கு அப்பாவாக நடிக்க வைத்தது?!

குணச்சித்திர அப்பா பாத்திரத்தை ஏற்று நடிக்க எஸ் வி ரங்காராவ், பாலையா, நாகையா, எஸ் வி சுப்பையா, சஹஸ்ரநாமம், பூர்ணம், வி எஸ் ராகவன், தயாராகத்தானே இருந்தனர்!

வசன உச்சரிப்பில் அப்பாவை புதிய கோணத்தில் காட்டிய பாவ மன்னிப்பு எம் ஆர் ராதா…

கண்டிப்பான அப்பாவாக முத்துராமன் நடித்த ‘தீர்க்க சுமங்கலி’யை எத்தனை பேருக்குத் தெரியும்?

கமல் ஆரம்ப காலத்தில் ‘டாடி’ என்பதைத் ‘தாடி’ என்று தப்பாக நினைத்து, ’தாடிப்பா’வாக வந்து படுத்திய படங்கள் உண்டு. பிராயச்சித்தமாக, நாயகனில் மழுங்கச் சிரைத்து, அப்பாவாக வலம் வந்து கொள்ளை கொண்டதை மறக்க முடியுமா?  மகாநதியில் பிரவாகமாய்ப் பொங்கி எழுந்து, சுகன்யாவுக்கு முத்தமிட்டு, பழி வாங்கிய அப்பாவை இனி பார்க்கத்தான் முடியுமா?

ரஜினி கால் ஊன்றுமுன்னே தாங்கிப் பிடித்த ‘சக்ரவர்த்தி’ நெற்றிக்கண், ‘மாணிக்கம்’ நல்லவனுக்கு நல்லவன்..அட்டா! அருமை, அருமை, அருமையைத் தவிர வேறென்ன? மசாலா அப்பிய படங்களின் அப்பாவாக ‘அண்ணாமலை’, ‘படையப்பா’ – படங்களில் வரும் தந்தை-மகள் மோதல் – நிஜ வாழ்க்கையிலும் தொடர்வது சோகம்தான்!

சத்யராஜ் ‘அதகள’ அப்பாவாக வந்த ‘நாகராஜ சோழன்’ அமைதிப்படை – அயோக்கியத்தனத்தை அமுக்கச் சிரிப்பில் அடக்கி வாசித்து, அல்வா கொடுத்ததை வார்த்தைகளில் விவரிக்க முடியுமா?

விஜயகாந்த் ‘அப்பா-பையன்’ பாத்திரங்களைச் சிருஷ்டித்து, திரை கொள்ளாமல் நிரம்பி நம்மைச் சோதித்ததையும் தாங்கிக் கொண்டுதானே இருந்தோம்?!

சிவகுமார் நடித்த ‘இனி ஒரு சுதந்திரம்’, ‘மறுபக்கம்’ அப்பாவை இன்னும் நான் பார்க்கவில்லை.

இயல்பான அப்பாவாக ரகுவரனின் ‘லவ் டுடே’, ‘யாரடி நீ மோகினி’…வாவ்!

கண்டிப்பே காட்டாத அப்பாவாக வாரணம் ஆயிரம் சூர்யா, வரலாறு படைத்த அஜீத் என இந்தத் தலைமுறையும் ‘அப்பா’வை விட்டு வைக்கவில்லை.

‘அப்பா’வுக்குச் சிகரம் வைத்த ‘தவமாய்த் தவமிருந்து’ ராஜ்கிரண் பற்றிப் பேசி நிறைவு செய்வதுதானே பொருத்தமாயிருக்கும்?! ராஜ்கிரண் வார்த்தைகளோடு இதை முடிக்கிறேன் (நன்றி - விகடன்)

‘தன்னை உண்மையா உசுருக்குசுரா நேசிக்கிற ஒரு ஜீவன் கிடைக்காதானு தேடித் தேடியே பல பேருக்கு பாதி வாழ்க்கை போயிரும். இன்னும் சிலருக்கு ‘உன்னை நான் எவ்ளோ நேசிக்கிறேன் தெரியுமா?’னு நிரூபிக்கிறதுலயே மீதி வாழ்க்கை போயிரும். இந்த எதிர்பார்ப்பு, நிரூபிக்கிறதுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு உறவு, நம்ம அப்பன், ஆத்தாவோட அன்பு மட்டும்தான்!

பி.கு.
எவர்க்ரீன் எம் ஜி ஆர் அவர்களை ‘அப்பா’வாக பார்க்கும் பாக்கியம் மட்டும் நமக்கு இல்லவே இல்லை!