Showing posts with label தமிழ் சினிமா. Show all posts
Showing posts with label தமிழ் சினிமா. Show all posts

Saturday, June 16, 2012

தமிழ் சினிமா ’அப்பா’க்கள்!



சிவாஜியைப் போல ‘அப்பா’ பாத்திரத்தை யாரேனும் செய்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.  பார் மகளே பார், வியட்நாம் வீடு, கௌரவம், தங்கப்பதக்கம், தேவர் மகன் என்று வூடு கட்டி ஆடியிருக்கார்!

காதல் மன்னன் கண்டிப்பான அப்பா ‘பிலஹரி’யாய் மாறியது, சபல அப்பாவாய் ‘அவ்வை சண்முகி’யில் கலாய்த்தது..சூப்பர்!

மேஜர் - அப்பாவாகத் துவங்கிய ‘மேஜர் சந்திரகாந்த்’ – பின்னர் எவ்வளவு படங்களுக்கு அப்பாவாக நடிக்க வைத்தது?!

குணச்சித்திர அப்பா பாத்திரத்தை ஏற்று நடிக்க எஸ் வி ரங்காராவ், பாலையா, நாகையா, எஸ் வி சுப்பையா, சஹஸ்ரநாமம், பூர்ணம், வி எஸ் ராகவன், தயாராகத்தானே இருந்தனர்!

வசன உச்சரிப்பில் அப்பாவை புதிய கோணத்தில் காட்டிய பாவ மன்னிப்பு எம் ஆர் ராதா…

கண்டிப்பான அப்பாவாக முத்துராமன் நடித்த ‘தீர்க்க சுமங்கலி’யை எத்தனை பேருக்குத் தெரியும்?

கமல் ஆரம்ப காலத்தில் ‘டாடி’ என்பதைத் ‘தாடி’ என்று தப்பாக நினைத்து, ’தாடிப்பா’வாக வந்து படுத்திய படங்கள் உண்டு. பிராயச்சித்தமாக, நாயகனில் மழுங்கச் சிரைத்து, அப்பாவாக வலம் வந்து கொள்ளை கொண்டதை மறக்க முடியுமா?  மகாநதியில் பிரவாகமாய்ப் பொங்கி எழுந்து, சுகன்யாவுக்கு முத்தமிட்டு, பழி வாங்கிய அப்பாவை இனி பார்க்கத்தான் முடியுமா?

ரஜினி கால் ஊன்றுமுன்னே தாங்கிப் பிடித்த ‘சக்ரவர்த்தி’ நெற்றிக்கண், ‘மாணிக்கம்’ நல்லவனுக்கு நல்லவன்..அட்டா! அருமை, அருமை, அருமையைத் தவிர வேறென்ன? மசாலா அப்பிய படங்களின் அப்பாவாக ‘அண்ணாமலை’, ‘படையப்பா’ – படங்களில் வரும் தந்தை-மகள் மோதல் – நிஜ வாழ்க்கையிலும் தொடர்வது சோகம்தான்!

சத்யராஜ் ‘அதகள’ அப்பாவாக வந்த ‘நாகராஜ சோழன்’ அமைதிப்படை – அயோக்கியத்தனத்தை அமுக்கச் சிரிப்பில் அடக்கி வாசித்து, அல்வா கொடுத்ததை வார்த்தைகளில் விவரிக்க முடியுமா?

விஜயகாந்த் ‘அப்பா-பையன்’ பாத்திரங்களைச் சிருஷ்டித்து, திரை கொள்ளாமல் நிரம்பி நம்மைச் சோதித்ததையும் தாங்கிக் கொண்டுதானே இருந்தோம்?!

சிவகுமார் நடித்த ‘இனி ஒரு சுதந்திரம்’, ‘மறுபக்கம்’ அப்பாவை இன்னும் நான் பார்க்கவில்லை.

இயல்பான அப்பாவாக ரகுவரனின் ‘லவ் டுடே’, ‘யாரடி நீ மோகினி’…வாவ்!

கண்டிப்பே காட்டாத அப்பாவாக வாரணம் ஆயிரம் சூர்யா, வரலாறு படைத்த அஜீத் என இந்தத் தலைமுறையும் ‘அப்பா’வை விட்டு வைக்கவில்லை.

‘அப்பா’வுக்குச் சிகரம் வைத்த ‘தவமாய்த் தவமிருந்து’ ராஜ்கிரண் பற்றிப் பேசி நிறைவு செய்வதுதானே பொருத்தமாயிருக்கும்?! ராஜ்கிரண் வார்த்தைகளோடு இதை முடிக்கிறேன் (நன்றி - விகடன்)

‘தன்னை உண்மையா உசுருக்குசுரா நேசிக்கிற ஒரு ஜீவன் கிடைக்காதானு தேடித் தேடியே பல பேருக்கு பாதி வாழ்க்கை போயிரும். இன்னும் சிலருக்கு ‘உன்னை நான் எவ்ளோ நேசிக்கிறேன் தெரியுமா?’னு நிரூபிக்கிறதுலயே மீதி வாழ்க்கை போயிரும். இந்த எதிர்பார்ப்பு, நிரூபிக்கிறதுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு உறவு, நம்ம அப்பன், ஆத்தாவோட அன்பு மட்டும்தான்!

பி.கு.
எவர்க்ரீன் எம் ஜி ஆர் அவர்களை ‘அப்பா’வாக பார்க்கும் பாக்கியம் மட்டும் நமக்கு இல்லவே இல்லை!

Monday, August 08, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 10

மோகம், (பெயர்ச்சொல்)

1. மாயையால் நிகழும் மயக்கவுணர்ச்சி
2. திகைப்பு.
3. காம மயக்கம்
4. ஆசை
5. மூர்ச்சை
6. மோகநட்சத்திரம் - சனி நிற்கும் நட்சத்திரத்திற்கு ஆறாவதும் பத்தாவதும் 7. பதினோராவதும் இருபதாவதுமாகிய நட்சத்திரங்கள்
8. மோர். மோகமுறை யிணக்கம்
9. பாதிரிப் பூ

மோகம், தாபம், விரகம், போகம், காமம் இந்த வார்த்தைகள் எல்லாமே அடிப்படையில் ஆசை சார்ந்த சொற்கள்.

'மோகம்’ என்றால் சித்தம் கலங்குவது. 'யாரைப் பார்த்து?’ என்பதெல்லாம் அதற்கு அவசியம் இல்லை!
'தாபம்’ என்றால், காதல் தாகத்தால் துன்புறுவது-அதன் காரணமாக உடலில் வெப்பம் அதிகரிப்பது!
விரகம் - பிரிவினால் ஏற்படும் (காதல்) துன்பம்!
போகம்-சிற்றின்பங்களை அனுபவிப்பது.
காமம்-உடற்கூறுசம்பந்தப்பட்டது-Physical.

என்கிறார் மதன் (ஆனந்த விகடன், கேள்வி-பதில்)

ஒரு பேராசிரியர் குறிப்பிடுவது போல 'மோகம்' என்பதற்குத் தனியாக அர்த்தம் ஏதும் இல்லை. எதையேனும் சார்ந்திருத்தலே 'மோகம்'...உதாரணத்திற்கு..நாகரீக மோகம், சினிமா மோகம், பண மோகம், பதவி மோகம், ஆடம்பர மோகம், ஆங்கில மோகம், வெளிநாட்டு மோகம் ...என சொல்லிக்கொண்டே போகலாம்...

பாரதியார் நொந்து/வெந்து போய்....

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்...
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்...

பாடியிருப்பதும் நினைவுக்கு வரலாம்!

'மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்' என்பது பழமொழி. இவ்வகையில் ஆராய்ந்து, 'விக்கி' ஒரு படி மேலே போய், 'பாலியல் வேட்கை' தான் என்கிறது...

மோகம் (perversion) என்பது மோகி, மோகித்தல் என்ற பொருள்களின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன. இது உளவியல் நோக்கில் பாலியல் தொடர்பான வேட்கைகளைக் (sexual desires) குறிப்பதாகும். இதன் அடிப்படையிலேயே மோகத்திரிபுகள் (perversions) ஏற்படுகின்றன என்பர் அறிஞர். இவ்வாறான மோகம் என்பது பல நிலைகளில் அழைக்கப்பட்டு வருகின்றன. அவை, காட்சிமோகம் (exhibitionism), பார்வைமோகம் (voyerism), சார்பொருள்மோகம் (fetishism), தன்மோகம் (narcissism) என்பனவாகும். பிறரைக் காமநோக்கில் பார்த்து இன்புறுவது பார்வைமோகம் எனப்படும். தன் அழகை, அங்கங்களைப் பிறருக்குக் காட்டுவது காட்சிமோகம். தன் காதலி, காதலன், பயன்படுத்திய பொருட்களைக் கண்டு காமுறுதல் சார்பொருள் மோகம். தன்னைத் தான் கண்டு தானே காமுறுதல், தன் அழகில் தானே மயங்குதல் தன்மோகம் எனப்படும்.

மோகம் என்கிற சொல்லை / உணர்வை வைத்து தமிழ் சினிமா / பாடல் விளையாடியிருக்கிறது.

'ஜெயப்ரதாவின் உயரிய நடிப்பு வெளிப்பட்டிருக்கும், கொஞ்சம் பிறழ்ந்து விட்டால் கூட விரசமாய் விழுந்திருக்கும்...இது மௌனமான நேரம்'(சலங்கை ஒலி, இளையராஜா, வைரமுத்து,எஸ் பி பி, எஸ் ஜானகி, 1983)பாடல்...கே விஸ்வநாத் என்கிற மாபெரும் இயக்குனர் கை பட்டு 'மோகம்' கூட மிளிர்கிறது பாருங்கள்.....

மனதில் ஓசைகள்...
இதழில் மௌனங்கள்...
ஏன் என்று கேளுங்கள்...!!

இளமைச் சுமையை
மனம் தாங்கிக்கொள்ளுமோ?!

ஊதலான மார்கழி ,
நீளமான ராத்திரி,
நீயும் வந்து ஆதரி!


'மோக'த்தின் பிடியில் சிக்குண்டு வீணாய்ப் போவது போல வேறெதுவும் இருக்க முடியாது....ஒரு கலைஞனுக்கு இது நேரும் தருணம் மிகவும் அவஸ்தையானது...அதுவும் தன மனைவியோடு இன்புற்று இருக்கையில்...வேறொருத்தி நினைவில் நின்றால்...ஒரு நல்ல மனிதனால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியாது....அதோடு மோதிப் பார்த்து, வீழ்த்தி விட வேண்டும் என்கிற துடிப்போடு அமைந்த பாடல் தான் 'மோகம் என்னும் தீயில்' (சிந்து பைரவி, இளையராஜா, வைரமுத்து, யேசுதாஸ், 1985)

மோகம் என்னும் மாயப்பேயை
நானும் கொன்றுபோட வேண்டும்...
இல்லை என்ற போது
எந்தன் மூச்சு நின்று போக வேண்டும்...

அருமையான பாடல் பதிவு இது....ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு நடுவே ஆக்ரோஷமான பாட்டு....Hats off to KB saar!


இந்தப் பாட்டு கொஞ்சம் ஜாலியான வகை...பார்வையிலேயும், பழக்கத்திலேயும் வந்த 'மோகம்' இது...இசை / வரிகள் / பாடியவர் அற்புதமாய்ச் செய்திருந்தாலும் இயக்குனர் சொதப்பிய பாடல்....இருந்தாலும்...அரவிந்த்சாமி, கஜோல் நடிப்பில் கொஞ்சம் நிமிரச் செய்து நம்மைச் சந்தோஷிக்க வைக்கிறது...எஸ் பி பி அவர்களுக்குத் தங்கத் தாமரை வாங்கித் தந்த 'தங்க தாமரை' (மின்சார கனவு, ஏ ஆர் ரஹ்மான், வைரமுத்து, எஸ் பி பி, 1995)

வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே!

தொடட்டுமா
தொல்லை நீங்க...?!!

நகம் கடிக்கும் பெண்ணே!
அடக்காதே ஆசை...
நாகரீகம் பார்த்தால்
நடக்காது பூசை!

என எந்தப் பருவத்தினருக்கும் பொருத்தமாய் எழுதியிருப்பதை என்னவென்று சொல்ல?!!


நன்றி: நண்பர்கள் திரு ஜே கே / திரு தியாகராஜன் அவர்கள், விடியலைத் தேடி பதிவு மற்றும் விக்கி வலைத்தளம்.

Sunday, January 02, 2011

மன்-மதன்-அம்பு!

தனது முயற்சியில் முற்றும் தளராத விக்கிரமாதித்தன் மயானத்திற்குள் பயப்படாது சென்று மரத்திலிருக்கும் உடலை வீழ்த்தி, தோளில் போட்டுக்கொண்டு நடந்தான்.

உடலிலுள் இருக்கும் வேதாளம் மெல்ல நகைத்துப் பேசத் துவங்கிற்று 'என்ன விக்கிரமாதித்தரே?! உலக நாயகன் என எல்லோராலும் அழைக்கப்படும் கமல்ஹாசன், அவரை வைத்து இயக்கியே பெயர் வாங்கும் கே எஸ் ரவிக்குமார், 50 வயது ஆசாமிகளையும் ரசிகர் மன்றம் வைக்கத் தூண்டும் த்ரிஷா, மூன்றாவது படத்திலேயே கமலை புக் செய்த உதயநிதி ஸ்டாலின், பிரம்மாண்ட கப்பல் என்றெல்லாம் விளம்பரப்படுத்தப்படும் மன்-மதன்-அம்பு படத்தைப் பார்க்கவில்லையா இன்னும் நீ?!' என்றது!

படம் ரிலீஸான மூன்றாம் நாளில், பெங்களூர் மல்ட்டிப்ளக்ஸில் 9 டிக்கெட்டுக்களைப் புக் செய்துவிட்டு, குடும்பமே வர மறுத்ததால், இரண்டு மணிநேரம் புக்கிங் ஆ·பிஸில் சென்னை நண்பருடன் வெயிட் செய்து, 'நொந்து நூடுல்ஸாகி' டிக்கெட்டுக்களை ஒரு வழியாக விற்றுத் தீர்த்த கடுப்பிலிருந்த விக்கிரமாதித்தன் நேற்றுத்தான் திருட்டு விசிடியில் படம் பார்த்திருந்ததை எப்படி வாய் விட்டுச் சொல்ல முடியும்?!


'சரி, சரி, நீயா பார்க்காமலிருந்திருப்பாய்?! இருந்தாலும் சொல்கிறேன் கேள்!' என வேதாளம் கதைக்கத் துவங்கியது.

ஆர்மி மேஜர் ராஜ மன்னாராக அறிமுகமாகும் கமல் கடைசி வரை மதன் - மாதவனுக்காகத் துப்பறியும் வேலை செய்து, இறுதியில் அம்பு - திரிஷாவைக் கைப்பிடிப்பது கதை. காத்திருந்தவன் காதலியை நேற்று வந்தவன் 'தள்ளி'கிட்டுப் போவதை ஐரோப்பா/க்ரூஸ் என்கிற ஜிகினா வேலையோடு சொல்லியிருக்கிறார்கள். நடுவில் சங்கீதா, ரமேஷ் அர்விந்த், ஊர்வசி. கௌரவமாய் சூர்யா, தமிழைக் கொஞ்சும் உஷா உதூப்!

டெக்னாலஜி முன்னேறியிருப்பதை இண்டர்நெட், மொபைல் பேச்சுக்களிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. அதற்கென்று அதையே காட்டிக் கொண்டேயிருப்பது தாங்கலைடா!

அறிமுகக் காட்சியில் அசத்தும் கமல், அப்படியே அமுங்கிப் போய் அல்லாடுவது கஷ்டமாயிருக்குது, சாமியோவ்!

படம் முழுக்கக் கத்தும் மாதவன், அய்யோ பாவம்!

சரி, த்ரிஷாவாவது இருக்கிறார்களே என்றால் பாதிக் காட்சிகளில் அம்மணி அழுதுவடிவது போலிருப்பது, என்னாச்சு?!

கமல்-த்ரிஷா நெருக்கக் காட்சிகள் இல்லாதது ஏனோ நெருடுகிறது (ஒரு கனவுப் பாட்டு வைத்து 'இன்னும் என்னை என்ன செய்யப்ப் போகிறாய்?' எனச் சொல்லியிருக்கலாம்தான்!, ஹ¤ம்!, என்ன உள்குத்தோ?!) கடைசிக் காட்சியில்தான் கமல், திரிஷா மேல் 'கை'யே வைக்கிறார்!

ஹ்யூமர் சென்ஸ் அதிகமாயுள்ள ஊர்வசி/ரமேஷ் அர்விந்தைப் படம் முழுக்க அழ வைத்திருப்பதை என்னான்னு சொல்ல?!


கமலுக்கும் பாத்ரூமிற்கும் அவ்வளவு நெருக்கம். படத்தில் தாராளமாக இந்தக் காட்சிகள் வருகின்றன. ஆனால், அனைத்தும் மாதவனைச் சுற்றியே இருப்பது அவ்வளவாகச் சரியாயில்லை. கொஞ்சம் த்ரிஷா, சங்கீதா காட்சிகளையும் சேர்த்திருந்தால் என் போன்ற 'கட்டை'களுக்குக் கொஞ்சம் சுவாரஸ்யம் தட்டியிருக்கும்.

அங்காங்கே தெளிக்கப்பட்டிருக்கும் நகைச்சுவை, சில இடங்களில் புகுத்தியிருக்கும் கமலின் கருத்துக்கள் (அஷட்டுத்தனமா இருக்கு!) என வசனங்களும் நொண்டியடிப்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

டிஎஸ்பி இசையில் ஒரே பாடல் 'நீலவானம்' மனதிற்கு இதமாயிருக்கிறது. ஒளிப்பதிவாளர் / இயக்குநர்/ எடிட்டர் என எல்லோரும் காணாமல் போயிருப்பது மற்றுமொரு துர்ப்பாக்கியம்.

'என்ன ஆட்டினாங்க?' என்று யாரும் கேட்க முடியாது, ஏனென்றால் ஒரே காட்சியில் இருவர் கட்டை விரலை(யாவது) ஆட்டுகிறார்கள்!' என முடித்து விட்டு,

இந்தப் படம் அவ்வளவாக வெற்றி(?!) பெறாமல் போனதற்குக் காரணம் உதயநிதி ஸ்டாலினா, கே எஸ் ரவிகுமாரா, கமலா, த்ரிஷாவா? நீர் என்னதான் நினைக்கிறீர் விக்கிரமாதித்தரே?!' என்று கொக்கி போட்டது வேதாளம்.


'எங்கிருந்தோ 'வாங்கி' இங்கே 'கொட்டி'யிருக்கும் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களைக் குறை சொல்ல முடியாது; எம் ஜி ஆருக்கு சொன்னதைச் செய்யும் ஒரு ப நீலகண்டன் போல், கமல் சொன்னதைச் செய்த இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் அவர்களையும் திட்ட முடியாது, துடை தெரிய உடையணிந்து பவனி வரும் 'அயகு ராணி' த்ரிஷாவையும் (ஹி! ஹி!) ஒன்றும் சொல்ல இயலாது (இதைத் தவிர என்னதான் செய்வார் அவர்? பாவம்!) கதை/திரைக்கதை/வசனம் - நிற்காமல் - பாடலாசிரியர்/பாடகர் என்று எல்லாவற்றையும் தலையில் போட்டுக் கொண்டு, மூன்று மணி நேரம் நம்மை வதைத்த கமலின் கற்பனை வறட்சியே படத்தின் தோல்விக்குக் காரணம்' என மௌனத்தைக் கலைத்த விக்கிரமாதித்தனுக்கு 'பெப்பே' காட்டிவிட்டு மீண்டும் மயானத்துக்குள் போய் மறைந்தது வேதாளம்!

'அடடா! கமலை மாதிரி நாமும் அதிகமாய்ப் பேசிக் காரியத்தைக் கெடுத்துவிட்டோமே?!' என நோகாமல் தலையில் அடித்துக்கொண்டான் விக்கிரமாதித்தன்
.

Friday, December 31, 2010

திரை 2010 - ஒரு வெகு ஜன பார்வை - 3

சென்னை வாசகர் திரு ஜி ஆர் ஷங்கர் அவர்கள் எழுதியது.

தமிழ்த் திரை!

10. நந்தலாலா - Average / Critic / Ilayaraja
9. மைனா - Hit - Critic / Media / Script
8. அங்காடி தெரு - Hit - Critic / Media / Script
7. பாஸ் (எ) பாஸ்கரன் - Hit - Comedy
6. களவாணி - Hit - Comedy
5. பையா - Hit - Media / Music / Action / Pair
4. மதராஸ பட்டிணம் - Above Average / Old Chennai /Music
3. நான் மகான் அல்ல - Super Hit - Media / Music/ Action / Pair
2. VTV - Super Hit - Media / ARR/ Simbu and Trisha in a differnet outfit
1. சிங்கம் - Super Hit - Media / Racy narration / Surya

* கடந்த மூன்று ஆண்டுகளாக சீரான வளர்ச்சியாக இருந்த 'அந்த மூன்று "நிதி" நிறுவனங்கள்' இந்த வருடம் மிக அதிகப்படியாகவே திரை வர்த்தகத்தை ஆக்கிரமித்து விட்டனர். ஏறக்குறைய 60 - 70% வியாபாரம் இவர்கள் குழுமங்கள் மூலமாக நடத்தப்பட்டிருக்கலாம்.

* முன்னணியின் மூத்த சூப்பர்கள் இருவரும் அவர்களிடம் அடைக்கலமாக, அடுத்த தலைமுறை 'இருவரோ' வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பகையுணர்விற்கே ஆளான சம்பவங்களும் நடந்தன.

* இவர்களது ஆக்கிரமிப்பால் சாதாரண படங்கள், முடிக்கப்பட்டு Release க்கு Theaters கிடைக்காமலிருக்கும் படங்கள், என கிட்டத்தட்ட 50 - 60 படங்களாவது இருக்கும். இவைகளில் பெரிய ஹீரோக்கள் படங்களும் அடங்கும். 2011 க்கு பிறகாவது இந்நிலை மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

* Best Critic பட வரிசையில் மைனா, அங்காடி தெரு அடைந்த பெருமை ஏனோ நந்தலாலா விற்கு இல்லை. Media மத்தியில் இயக்குனர் நற்பெயர் பெற தவறிவிட்டாரோ?

* விஜய், அஜீத், விக்ரம், மணிரத்னம், செல்வ ராகவன் தந்தது ஏமாற்றம்தான்
* சிம்பு, கார்த்தி, சூர்யா - வெற்றி!
* ARR - Going Great
* தமன்னா, அனுஷ்கா - ^^
* நயன், 3ஷா, அசின், ஸ்ரேயா - சர்ச்சை
* கடைசி இருவார படங்கள் எடுத்துக்கொள்ளப்படவில்லை


என்னடா இது கடைசிவரை முக்கியமான ஒரு செய்தி காணுமேங்கறவங்களுக்காக....

61 வயது இயந்திரர் :

- மீசையில்லா படங்கள் பார்த்து - வயசாயிடுச்சுன்னாங்க
- Budget பார்த்து - போணி ஆகாதுன்னாங்க
- Trailer பார்த்து - பொம்ம படம் மாதிரியிருக்குன்னாங்க
- Songs எல்லாம் net ல முன்னமே download செய்துவிட்டு சரியில்ல / அவ்வளவா suit ஆகாதுன்னாங்க



இப்படி என்னென்னவோ சொல்லி, பேசி, எழுதி, blogய பிறகு.....

# சுமார் 2200 உலக அரங்குகளில் முதல் தமிழ் படம்
# முதல் மூன்று நாட்கள் அனைத்து அரங்கங்களும் Housefull ஆகி production cost ல 70% வரை வசூல்
# அநேகமாக 25 நாட்கள் 2000 திரைகளில், 50 நாட்கள் 1500 திரைகள் என...etc...etc... சாதனைகள் தொடர்ந்தன.

- நமது தமிழ் திரை வரலாற்றில் - வியாபார / வர்த்தகத்தில் இதன் வெற்றி ஒரு மைல்கல்.

-Castings, Music, Photography, Make up, Dialoge, On Screen narration என பல ப்ளஸ்கள் மட்டுமல்லாது இது தமிழ்பட "Technology" வளர்ச்சிக்கு ஒரு சான்றும் கூட.

-நல்ல Team, அதிக Budget ல நல்ல சினிமா கொடுத்தாங்கன்னா, கண்டிப்பா அது சூப்பர் டூப்பர் மெகா ஹிட் ஆகும் என்னும் கூற்றிற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.


-ஒரு கடைசி பார்வையாளனா...ரசிகனா..விமர்சகனா...

Sun, Ice-warya, shankar, ARR என entire team ல் எல்லாருக்கும் ஒரு பெரிய சபாஷ்.

ரஜினி - 61 வயதுல ஒரு மெகா ஹிட் கொடுத்து இன்னும் துடிப்புடனியங்கும் நடிகர் - younger generation நடிகர்களுக்கு - அவருடைய ஈடுபாடு, தன்னை தாழ்த்தி பிறரை உயர்த்தி பேசும் விதம், இறைபற்று என இன்னும் ஒரு உந்து சக்தியாகவே இருக்கிறார்.

தமிழ் திரை பெரும்பாலும் அரசியல் சார்ந்தே இருப்பதால் 2011 க்கு பிறகு என்னவாகும் என்பதை இப்போதே சொல்ல முடியவில்லை.

எவர் வரினும் அரசியல் கலக்காமல் திரை வர்த்தகத்தின் ஈட்டால் திரைதுறை சார்ந்தோர் பயனடைந்தார் என்னும் நிலைப்பாடு வருமன்றுதான் தமிழ் திரை உண்மை வளர்ச்சி கண்டது என்பேன்.

*******

My Ratings

1. Telugu - Vedham
2. Malayalam - Paleri Manikyam- Oru Pathira Kolapathakathinte Katha
3. Tamil - Nandalala (Best critic point of view), Endhiran (Best commercial point of view)

*******

முடிக்கும் முன் : Inception விரைவில்..... one among my best films list and the best for this year too...

Monday, June 07, 2010

ராஜ்நீதி, கமல், ரஜினி மற்றும் பலர்

ப்ரகாஷ் ஜா (கங்காஜல், அபஹரன்) இயக்கிய ராஜ்நீதி திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டு 'ஸீரியஸ் சினிமா' என்கிற முத்திரையில் வெற்றி வலம் வருகிறது. பார்த்த என் நண்பர் விளித்த ஒரு வரி காமெண்ட் 'மகாபாரதம், God Father மற்றும் தளபதி படங்களின் கலவை!'

கவனிக்கவும். இந்தக் கட்டுரை படத்தைப் பற்றியதல்ல.

அஜய் தேவகன், அர்ஜுன் ராம்பால், மனோஜ் பாஜ்பாய், ரன்பீர் கபூர், நாநா படேகர், நஸ்ருதீன் ஷா போன்ற பெரிய நடிகர்களை பங்கேற்க வைத்து, அவர்களுக்குத் தகுந்தாற்போல வேடங்களைக் கொடுத்து, இயக்குவது இந்தியில் மட்டுமே சாத்தியமாகிக் கொண்டு வருகிற விஷயம். இது போன்ற பல்வேறு நடிகர்களை ஒன்றிணைப்பது தமிழில் ஏன் நடப்பதில்லை?

கொஞ்சம் பின்னோக்கிப் போனால் விடை கிடைக்கலாம்.

எம் ஜி ஆர் / சிவாஜி கோலோச்சிய நேரங்களில் எஸ் எஸ் ஆர், ஜெமினி, முத்துராமன், பாலையா, ரங்காராவ், நாகையா, நம்பியார், மனோகர், அசோகன், நாகேஷ், சந்திரபாபு, எம் ஆர் ராதா, ஜெய்சங்கர், வி கே ராமசாமி, மேஜர், எஸ் வி சுப்பையா, சகஸ்ரநாமம் ஆகியோரின் பங்களிப்பும் பக்கபலமும் வார்த்தைகளில் விவரிக்க இயலாது. சக நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதில் சிவாஜி / எம் ஜி ஆர் கவனமாய் இருந்ததின் காரணமும் இதுதான்.

ஜெய்சங்கர், சிவகுமார், முத்துராமன், ஏவி எம் ராஜன், ஸ்ரீகாந்த், விஜயகுமார், ஜெய்கணேஷ் காலங்களில் கூட இது மாறவில்லை. சில படங்கள் நீங்கலாக, இவர்களது படங்கள் பெரும்பாலும் இசை/நகைச்சுவை/இயக்குநர் பலத்தை நம்பியே இருந்தன.

கமலின் முதல் 60 படங்களில் பல நடிகர்/நடிகையரின் பங்கேற்பு, தாக்கம் உண்டு. இயக்குநர்களின் நாயகனாக கமல் பரிணமித்த நேரம். எம் ஜி ஆரின் அரசியல் பிரவேசம், சிவாஜியின் தேக்கம் - கமல், சிவகுமார், விஜயகுமார் போன்ற இளைஞர்களுக்குக் கை கொடுத்தது.

Enter ரஜினி. வியாபாரிகள் கமல்/ரஜினி இணைப்பைக் 'கண்டு' கொண்டதில் இருவரும் இணைந்து நடிக்கத் துவங்கினர். கமல்/ரஜினி காம்போவில் வெளிவந்த பெரும்பான்மையான படங்கள் சூப்பர் ஹிட் (அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, ஆடு புலி ஆட்டம், நினைத்தாலே இனிக்கும், இளமை ஊஞ்சலாடுகிறது, 16 வயதினிலே). பின்னர் நடந்தது வேதனைக்குரிய விஷயம்.

ரஜினியும் கமலும் தனித்தனியாகப் படம் பண்ணுவது என்று முடிவெடுத்தனர். இதைக் கமல் சொன்னார் என்று ரஜினியும், ரஜினியே விருப்பப்பட்டுத் தனியாகப் போனதாகவும் வந்த செய்திகளில் எது உண்மை என்று இன்று வரை தெரியாது.

Star Image என்கிற அஸ்திவாரம் தமிழ்ப் படங்களுக்குப் போடப்பட்டது அன்றுதான்.

ரஜினி அல்லது கமல் அவ்வளவுதான். சற்று விரிந்து விஜயகாந்த், சத்யராஜ் (வில்லனாக நடித்தவர் ஹீரோவாக மாறியது தமிழ் சினிமாவின் மற்றுமொரு துரதிர்ஷ்டம்), சரத்குமார், ப்ரபு, கார்த்திக், மோகன், முரளி என்று நீண்டது. போதாதென இயக்குநர்களும் நடிகர்களாகத் துவங்கினர். தமிழ் சினிமா தயாரிப்பாளர் / இயக்குநர் கைகளிலிருந்து நடிகர்களின் கைகளுக்கு மெதுவாக மாறத் துவங்கியது.

விஜய்யின் துவக்கப் படங்கள் 'ஷகீலா'வின் நீலக்காட்சிகளுக்கு போட்டியாக இருந்தன (இத்தனைக்கும் இயக்குநர் இவரது தந்தை!). பின்னர் மீண்டு, கதைகளில் கவனம் செலுத்தத் துவங்கிய பின் வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறத் துவங்கினார். சரி, தமிழ் சினிமா இனி மெல்ல நிமிரும் என்கிற நம்பிக்கை விஜய்யின் 'commercial/அரசியல்' கனவுகளில் சிதைந்து போனது. அஜீத் / விக்ரம் / சூர்யா போன்ற இயக்குநரின் நடிகர்கள் வலம் வந்தாலும் இவர்களை ஒன்றிணைப்பது சாத்தியமேயில்லாது போனது.

தப்பிப் பிழைத்த அன்பே சிவம் (கமல்/மாதவன்), ஆய்த எழுத்து (சூர்யா/மாதவன்) வசூலில் திருப்தியளிக்கவில்லை. தமிழ் சினிமா முழுக்க முழுக்க ஹீரோயிஸத்தில் மூழ்கிப் போனது. நட்சத்திரங்களை ஒருங்கிணைப்பது 'வெற்று அரசியல்' மற்றும் 'பிரம்மாண்டமான நட்சத்திரப் பெருவிழா' மட்டுமே ஆகிப் போனது.

கமல்/ரஜினியின் தமிழ் சினிமா பங்களிப்பு மறக்க முடியாது/மறக்கவும் கூடாது. ஆனால், 'தனித்தனியாகப் படம் பண்ணுவோம்' என்கிற முடிவு மன்னிக்க முடியாதது. சற்று சிந்தித்திருந்தால், அட்லீஸ்ட் 'சேர்ந்தும் பண்ணுவோம்' என்றாவது சொல்லி, வருடம் ஒரு படமாவது செய்திருந்தால், நிச்சயம் தமிழ் சினிமா பிழைத்திருக்கும்.