Saturday, May 20, 2006

இரண்டு வருடங்களுக்கு முன் காவ்யா விசுவநாதன் என்ற பெயர், ஆங்கில இலக்கிய உலகில் திடீரென்று அடிபட்டுப் பரபரப்பு ஏற்படுத்தியது. ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் படிக்கும், பதினேழு வயதுப் பெண்ணான இவர் எழுதிய முதல் நாவலுக்கு அத்தனை மவுசு, புகழ், கீர்த்தி.

சமீபத்தில் இவருடைய இரண்டாவது நாவல் வெளியாகி, இன்னும் பெரிய பரபரப்பு. How Opal Mehta Got Kissed, Got Wild, and Got a Life என்பது அதன் பெயர். (இதன் நீளத்துக்காகவே தனிப் பரிசு தரலாம்). இதற்கும், எழுதவிருக்கும் அடுத்த புத்தகத்துக்குமாக ஐந்து லக்ஷம் டாலர் கொடுத்திருக்கிறார்கள். ஹாலிவுட்டில் சினிமா எடுத்தால் அது தனியே பண மழை கொட்டும்.

இந்தப் புத்தகத்தின் பெருமை எல்லாம் சில வாரங்களுக்குத்தான். மெகான் மெக்க·பர்ட்டி என்ற பெண்மணி எழுதிய இரண்டு நாவல்களிலிருந்து பல பகுதிகளைத் திருடி, காவ்யா விசுவநாதன் 'ஓபல்' நாவலைப் படைத்திருக்கிறார் என்ற குட்டு வெளிப்பட்டுவிட்டது. நாவல்களிலிருந்து இருபது இடங்கள் அப்படியே திருடப்பட்டிருப்பதாக முதல் தகவல்; பிறகு வந்த தகவலின்படி நாற்பது இடங்கள்!

வேறு வழியில்லாமல் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார் காவ்யா. மெக்க·பர்ட்டியின் நாவல்களை 'ரொம்ப ரொம்ப' ரசித்துப் படித்திருந்ததாகவும், அதனால் தன்னையும் அறியாமல் சில பகுதிகள் தனது புத்தகத்தில் இடம் பெற்று விட்டன என்றும், மன்னிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறாள். இதற்குள் உலகெங்கும் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாகிவிட்டன!

Adam was the only man, who, when he said a good thing knew that nobody had said that before him என்று மார்க் ட்வெயின் சொன்னது போல, ஒரிஜினலாகச் சிந்தித்து, ஒரிஜினலாக எழுதுகிறவர்கள் யாருமே கிடையாது போலிருக்கிறது!

காவ்யா விசுவநாதன் என்ற பெயரை முதன் முதலில் கேள்விப்பட்டபோது, ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு இத்தனை புகழ் கிட்டியிருக்கிறதே என்ற சந்தோஷம் முதலில் ஏற்பட்டது. சென்னையில் பிறந்தவர் என்பதைத் தவிர, அவருக்கும் தமிழ் நாட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என்று தெரிந்து, அவமானத்திலிருந்து தப்பினோம் என்று கடவுளுக்கு நன்றி சொல்லத் தோன்றுகிறது.

-டெலிவிஷயம், வினோத், துக்ளக் வார இதழிலிருந்து

No comments: