நமது மனம் நமக்கு வசமாக வேண்டும். எவ்வளவோ காலமாகத் தன்னிஷ்டப்படியெல்லாம் தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்த இந்த மனத்தைத் தன்னுள் அடக்கச் சிறிது சிறிதாகவேனும் முயற்சி செய்ய ஆரம்பிக்க வேண்டும். மனம் அடங்கிவிட்டால் நமக்கு வேறொன்றும் தேவையில்லை. அதுதான் நாம் பெற வேண்டிய பூர்ண சுதந்திரமாகும்.
ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது மனத்தை சாந்தமாக வைத்துக்கொண்டு, வேறு நினைவுகளை மனத்தில் செலுத்தாமல், கடவுளது தியானத்தில் அமர வேண்டும். வேறு நினைவுகள் இல்லாமல் தியானம் செய்வதால் நாளடைவில் புத்தியானது தெளிவடையும். ஆசையையும் கோபத்தையும் அடக்குவதற்கு இது ஒரு சாதனமாகும். இவ்வித சாதனையைப் படிப்படியாக மேற்கொண்டவனுக்குச் சீக்கிரமாக ஆத்ம ஞானம் உண்டாகும். குறைவில்லாத அந்த ஞானத்தைப் பெறுபவன்தான் உண்மையான சுதந்திரனாகிறான்.
வெகு காலமாக நாடு சுதந்திரத்திற்காகப் பாடுபட்டுள்ளது. கடவுள் அருளாலும், மகான்கள் ஆசியினாலும், மக்களின் ஒப்பற்ற தியாகத்தினாலும் கிடைத்த இந்த சுதந்திரத்தினால் நமது நாடு செழித்து ஓங்கி, பஞ்சம் விலகி, தேச மக்கள் சமூகச் சச்சரவுகள் எதுவும் அறவேயின்றி, ஒற்றுமையுடன் அன்பு கொண்டு ஒரே சமுதாயமாக ஒட்டி வாழ அருள் பொழிய வேண்டுமென எங்கும் நிறைந்த கடவுளைப் பிரார்த்திப்போமாக!
-மகா பெரியவர், தெய்வத்தின் குரல், ஏழாம் பகுதி, வானதி பதிப்பகம்
No comments:
Post a Comment