Thursday, September 24, 2009

M R ராதாயணம் - நடிகவேள் எம் ஆர் ராதா அவர்கள் வாழ்வின் சுவாரஸ்ய நிகழ்வுகளை விரிவாகச் சொல்கிறது.
நாடகக்காரனாய்த் துவங்கிய ராதாவின் பயணம், அரசியல் ஈடுபாடு, பகுத்தறிவு கொள்கை, சினிமா என விரிவது இயல்பான அற்புதம். ஔவையாருக்காக ஒரு லட்சம் கேட்ட கே பி சுந்தராம்பாள் பாதிப்பில் 'ஒரு லட்சத்து இருபத்தையாயிரம் கொடு' என ரத்தக்கண்ணீர் தயாரிப்பாளரிடம் ராதா கேட்பது குழந்தைத்தனம் என்றால், சாப்பாடு எடுத்து வர சிவாஜியிடம் 'இம்பாலா' கேட்க, சிவாஜி மறுக்க, மறுநாளே இம்பாலா வாங்கி 'வைக்கோல் அடைப்பது' டிபிகல் ராதா ரவுசு! அதுவும் எம் ஜி ஆரைச் சுட்ட பின் தனிமைப்படுத்தப்பட்ட ராதாவை, ராதாதான் காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது! ராதாவைப் பற்றியது என்றால் சுவாரஸ்யத்திற்கு, சர்ச்சைக்கு பஞ்சமா என்ன? அ நூலிலிருந்து சில பகுதிகள் இதோ!

'நானும் ஒரு பெண்' படத்தில் ரங்காராவ் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். அவரும் ராதா போல் ஒரு சீனியர். அவரிடம் பேசவும் எல்லோரும் பயப்படுவார்கள். ஆனால் அப்போது ரங்காராவ் ஒழுங்காக படப்பிடிப்புக்கு வராமல் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தார்.

காலையில் ஷ¤ட்டிங் ஆரம்பிக்கும். ஒன்பது மணிக்கே ராதா வந்துவிடுவார். ஆனால் ரங்காராவ் பதினோரு மணிக்கு சாவகாசமாக வருவார். மதியம் ஒரு மணிக்கு வீட்டுக்குச் சாப்பிடக் கிளம்பி விடுவார். சில சமயங்களில் மாலை மீண்டும் வருவார். பல சமயங்களில் மது அருந்திவிட்டு வீட்டிலேயே இருந்துவிடுவார். இது பல நாட்கள் தொடர்ந்தது. டைரக்டர் உட்பட யாராலும் அவரை கேள்வி கேட்க முடியவில்லை.

ராதா கூடிய மட்டும் பொறுமையாக இருந்தார். அவரது கால்ஷீட் வீணாகிக் கொண்டே போனது. அடுத்த நாள் செட்டில் ராதா காத்திருந்தார். பத்தரை மணிக்கு உள்ளே நுழைந்தார் ரங்காராவ்.

'ராதாண்ணே வணக்கம்' என்றார் அவர்.

உடனே ராதா கஜபதி (ராதாவின் மேக்கப் மேன்) யிடம் 'பாருய்யா, படத்துல நான் கெட்டவன் வேஷம் போடுறேன். ஒன்பது மணிக்கே வந்து காத்துக்கிட்டிருக்கேன். படத்துல இவரு நல்லவன் வேஷம் போடுறாரு, வர்ற நேரத்தைப் பார்த்தியா?' - பஞ்ச் டயலாக் ஒன்றைச் சொன்னார்.

ரங்காராவின் முகம் சுருங்கிப் போனது. மேக்-அப் ரூமுக்குச் சென்ற அவர், கஜபதியை அழைத்தார். 'இந்தப் படம் முடியற வரைக்கும் தயாரிப்பாளர்கிட்ட சொல்லி, மதியான கொஞ்ச நேரம் நான் படுக்கறதுக்கு ஏற்பாடு செஞ்சு கொடுக்கணும்' என்றார்.

ஏற்பாடு செய்யப்பட்டது. ராதாவும் ரங்காராவும் மதியம் ஒன்று முதல் மூன்று வரை ரெஸ்ட் எடுத்துடுவிட்டு, மூன்று மணிக்கு வரும் டிகிரி காபியைக் குடித்துவிட்டு நடிப்பைப் தொடர்ந்தார்கள். படப்பிடிப்பும் சீக்கிரம் முடிந்தது.


ராதா நாடகத் துறையில் நுழைந்த காலத்தில் மைக் எல்லாம் கிடையாது. கடைசி வரிசையில் உட்கார்ந்திருக்கும் ரசிகனுக்கும் கேட்கும் வகையில் தொண்டை கிழிய கத்தித்தான் பேச வேண்டியிருக்கும். எனவே, ஒவ்வொரு இரவும் நாடகம் முடிந்தபிறகு ராதா, மேக்கப் அறைக்குள் வருவார். ஒரு பெரிய குண்டா அவருக்காகக் காத்திருக்கும். வாயை மட்டும் நீரால் துடைத்து விட்டு உட்காருவார்.

குண்டாவில் பாதி அளவுக்குப் பழைய சோறு, மீதி அளவுக்கு சிறு வெங்காயம் நிரம்பியிருக்கும். அவ்வளவையும் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார். மற்றவர்கள் என்றால் நள்ளிரவில் பழையதும் சின்ன வெங்காயமும் சாப்பிட்டால் ஜன்னி வந்து விடும். ஆனால் மேடையில் தன் சக்தியை எல்லாம் பிரயோகித்து நடித்துவிட்டு வந்த பின் அந்த உணவு ராதாவுக்குத் தேவையானதாகவே இருந்தது. அவரது குழுவிலிருந்த சிறுவர்களுக்கு, ராதாவுக்காக வெங்காயம் உரிப்பதுவும் முக்கியமான வேலையாக இருந்தது.


இயக்குனர் ப நீலகண்டன், சுடப்பட்ட எம் ஜி ஆரை காண வந்திருந்தார். வழி தெரியாமல் ராதாவின் அறைக்குச் சென்றுவிட்டார்.

ராதா தனக்கே உரித்தான பாணியில் 'வாய்யா! நீலகண்டா! ராமச்சந்திரனைச் சுட்டேன். அவனும் சாவலை. என்னைச் சுட்டுகிட்டேன். நானும் சாவலை. என்னய்யா துப்பாக்கி கண்டுபிடிக்கிறானுங்க? இந்தத் துப்பாக்கியை வெச்சுகிட்டுத்தான் சைனாக்காரனை ஓட்டப்போறாங்களாம?!'

நீலகண்டன் பதறிப்போய் அங்கிருந்து வெளியேறினார்!

எம் ஆர் ராதாயணம் - முகில் - ரூ 80 - கிழக்கு பதிப்பகம்

2 comments:

Sumi said...

Baahhaaa!! My father used to and so even I love MR Radha! such a versatile actor, and a unique personality. his comments on ''thuppaki'' says everything about this guy! there is a bright side to even the branded ''bad boys'', and a dark side to the glorified ''good guys'',naah?

(Mis)Chief Editor said...

பதிவுக்கு நன்றி. தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை...!

பி.கு.
தங்களின் ஆங்கிலம் மிக நன்றாயிருக்கிறது!