Wednesday, December 16, 2009

இன்பா, மைக்கேலைச் சுட்டதை அர்ஜுன் பார்த்துவிடுகிறான். இப்படித்தான் துவங்குகிறது 'ஆய்த எழுத்து'.

கதை? மணிரத்னம் ரொம்பவே மெனக்கிடாமல் தன்னுடைய முந்தைய படங்களிலிருந்து சுட்டிருக்கிறார். பின்னோக்கிச் சொல்லப்படும் கதையும் 'விருமாண்டி'யில் பார்த்துவிட்டபடியால், புதுமை இல்லை. ஆனாலும், முன்பகுதி கொஞ்சம் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.

மாதவன், சூர்யா, சித்தார்த் என்று மூவர் கூட்டணியில் மாதவனுக்குத்தான் ஸ்கோப் அதிகம். 'ரன்' மாதவன் நல்லவனாக இல்லாது, பொறுக்கியாக இருந்தால்...இன்பா! சும்மா சொல்லக்கூடாது. மனிதர் 'வூடு' கட்டி அடிக்கிறார். அதுவும் மீரா ஜாஸ்மின் 'நெருக்க'க் காட்சிகளில்...காமிராவும் மாதவனோடு சேர்ந்து எல்லை மீறாது விளையாடுகிறது! 'சாக்லேட்' மாதவனை 'சல்பேட்டா' மாதவனாய் மாற்றியதில் இயக்குனரின் பங்கு நிறைய உண்டு.

ஸ்டூண்ட் லீடராக மைக்கேல்(சூர்யா). 'ஒன்றுமே செய்ய வேண்டாம். ஐயா வந்து போனா போதும்' என்று சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது. அலட்டாத நடிப்பு. அதுவும் லோக்கல் மந்திரியுடனான காட்சிகளில் பேச்சிலும், முகத்திலும் தென்படுகிற லாவகத்தில் ஒரு முதிர்ந்த நடிகருக்கான முத்திரை தெரிகிறது.

அமெரிக்கக் கனவுகளுடன் அர்ஜுன்(சித்தார்த்). ஜாலி கேரக்டர். த்ரிஷாவுடனான காட்சிகளில் 2004-ன் மௌனராகம் சாயல்! நடிப்பில்...ஸாரி!

இவர்களின் ஜோடியாக மீரா, இஷா, த்ரிஷா. இதில் மீரா ஜாஸ்மின் மட்டுமே தேறுகிறார். லோக்கல் மந்திரியாக பாரதிராஜா அறிமுகமாகும்போது இன்னொரு 'உமாபதி'(அக்னி நட்சத்திரம்)யோ என நினைக்க வைத்தாலும், இறுதியில் புஸ்...........! ஒன்றிரண்டு காட்சிகளில் எட்டிப் பார்க்கும் ஜனகராஜைப் பார்க்கும்போது, அட...இவருக்கு இத்துணை வயதாகிவிட்டதா?!

இன்பாவின் பாத்திரப் படைப்பில் இயக்குனரின் குழப்பம் தெரிகிறது. அதே போல, நான்கு தொகுதிகளில் மாணவர்கள் 'சுளு'வாக ஜெயிப்பதும்.

வசனம் 'சுஜாதா'வாம். டைட்டிலோடு சரி. 'பாய்ஸ்' பாதிப்பில் அடக்கியே வாசித்திருக்கிறார்.

இசை ஏ ஆர் ரஹ்மான். 'சண்டைக்கோழி', 'ஜன கண' பாடல்களில் வைரமுத்துவின் வரிகள் காதில் விழும்படியும், இசையோடு ரசிக்கும்படியும் செய்திருக்கிறார்.

காமிரா ரவி கே சந்திரன், கலை சாபு சிரில், தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத் என அனைவரும் மெனக்கிட்டிருக்கிறார்கள். இருந்தாலும்.......

உயிர் எழுத்துக்களை நிறைவு செய்யும் கடைசி எழுத்து ஆய்த எழுத்துதான்; ஆனால், மணிரத்னத்தின் '' மனதை நிறைக்கத்தான் இல்லை.

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

மீள் பதிவா என்ன?