சேகர் சார் இப்படி பண்ணிட்டீங்களே, நம்ம இடத்தைப்பத்தி அழகா சொல்லி இன்னும் எழுதுன்னு சொன்ன அப்பறம் பேசாம் இருக்க முடியலை.
ரொம்ப சந்தோஷம் என்னனா நான் இந்த மாசக்கடைசில சிங்கப்பூர்லேந்து சென்னைக்கு இடம் பெயர்கிறேன். திருவல்லிக்கேணி பேர் சொல்லும் போதே CD படம் அந்த வாழ்க்கையை அனுபவித்தோர்க்கு ஓடுவது இயற்கை தான். இதுவும் ஒரு பாரதிராஜா கிராம கதைதான்.
அப்படி என்ன சார் இருக்கு திருவல்லிக்கேணில ? கேள்வி ஆயிரம் வரும் , மற்றைய சென்னை வாசிகள் சென்னையில் தம்தம் இடங்களையும் இதே பார்வையில் யோசிக்கவும் பாரட்டவும் முடியும் ஆனால் திருவல்லிக்கேணி ஒரு அழகான, விநோதமான, அபரிமிதமான இடம். 70-80களில் இருந்தே மற்ற சென்னை நகர இடங்களில் இல்லாத சில பல விஷயங்கள் இங்குண்டு,
வெளிநாட்டவர் அந்த காலத்திலேயே இங்கு தங்குவர், பல பிரசித்தமான கிரிக்கெட் வீரர்களும் , பல எழுத்தாளர்களும் இங்கு வாசம் செய்திருக்கிறார்கள். இரவு முழுதும் டீ கிடைக்கும் இடம் திருவல்லிக்கேணியில் அப்பொழுது; பாரிசுக்கு அப்புறம் இங்கு தான் இரவு இரண்டு மூன்று மணிவரை கடை திறந்திருக்கும்; பின் மீண்டும் நாலு ஐந்து மணிக்கு திறந்திடுவார்கள்! இரவும் பகலும் விழித்திருக்கும் ஒரு நகரப்பகுதி இது.
பலவருடங்களாக இன்றைய முதல்வரின் தொகுதி, துணை முதல்வரின் தொகுதியும் இங்கு அடங்கும். இது நடுத்தரம் மேல்தரம் அடிமட்ட கீழ்தர குடும்பங்களைக் கொண்ட ஒரு முழு நகரம் , நகரத்துள் நகரம்.
சீஸனுக்கேறார் போல் விழாக்கோலம் போட்டுக்கொள்ளும் தெருக்கள், பிள்ளையார் சதுர்த்திக்கு குடைகளாய், களிமண்ணாய், ரம்ஸானுக்கு பச்சை மணிமணியாய் மிட்டாய் வண்டி சகிதம், சுதந்திரதினத்துக்கு இந்திய கொடிகளாய் எங்கும் , தேசத்தலைவர்களின் பிறந்த இறந்த நாளுக்கு அவர்களின் படங்களாய் எல்லா தெரு மூலையிலும், மாரடி நோன்பில் ரத்த களறியாய் கறுப்பு சட்டைகள் அணிவகுக்கும், பொங்கல் அழகு கரும்பும், நவராத்திரி , மார்கழி மாதங்களில் தெருக்கள் விதவிதமான வர்ண கோலங்களில் தங்களை அலங்கரித்திருக்கும்.
என்றும் அழியாது பிளாட்பார “குடி”மகன்கள் இன்றும் உண்டு. ஓலைப்பாய்பின்னும் வியாபாரம் அந்த பிளாட்பாரங்களில் 30-40 வருடங்களாய் இன்றும் அமோகமாக நடக்கிறது .
கிரிக்கெட் எங்கு நடந்தாலும், திருவல்லிக்கேணி சந்துகளில் ஏதேனும் ஒரு வீட்டு திண்ணையில் அல்லது வாசலில் சற்று நின்றாலே போதும் அப்போதைய நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம், அவ்வளவு பைத்தியங்கள்!
எல்லாவற்றிற்கும் மேலாக உலகப் புகழ் பெற்ற மெரீனா கடற்கரை இங்குண்டு. காசின்றி சந்தோஷத்தை கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணலாய் விரித்து வாரித்தரும் ஒரு அரிதான இடம். இங்கு கூடி உட்கார்ந்து இன்றைய பிரச்னையும் நாளைய கனவையும் கொட்டிவிட்டு வீட்டிற்கு போய் உண்வருந்தி நிம்மதியாய் உறங்கிய உள்ளங்கள் பல கோடி , எங்கள் நண்பர் குழாமையும் சேர்த்து.
அந்த கடலும் , பரந்த பீச் ரோடும், எதிரில் பழமை தாங்கிய கட்டிடங்களும் , ரோட்டோர புல்லுதரையும், அந்த உப்புக்காற்று வாசமும் இன்னமும் என்னில் வியாபித்திருக்கிறது. இதற்க்கு இணை சென்னையில் ஏன் இந்தியாவில் தேடினாலும் கிடைப்பது மிகச் சில தான்.
தீபாவளியன்று வீட்டில் திட்டு வாங்கிவிட்டு வெறும் பழைய லுங்கி (இதுவும் ஒரு உடை தான் மறந்தே போயிருக்கும்) அணிந்து எல்லா தெருக்களையும் நண்பர்களோடு சேர்ந்து பவனி வரும் அனுபவம் இன்றும் பசுமையாய் நினைவில் இருக்கிறது.
திருவல்லிக்கேணி ஒண்டு குடித்தினம் இரு பக்கமும் சாரையாய் வீடுகள், என் வீட்டு பிரச்னைக்கு பக்கத்துவீட்டிலிருந்து தீர்வும், அவர் வீட்டு சந்தோஷம் என் வீட்டில் சிரிப்பாகவும், நடுவே வாரந்தா போல் தளமும், அதில் காலை குளியல், மதியம் வம்பு, மாலை கிரிக்கெட் கில்லி தாண்டு, கோலி, ஐந்து கல் விளையாட்டும், வெயில் காலத்தில் மொட்டை மாடியில் அனைவரும் பாயில் வானம் பார்த்து படுத்து உறங்குவதும், கொஞ்சம் வயதானபின் அதுவே இரவுக்காட்சி போக யேதுவாயிருந்ததும் பல கோடி திருவல்லிக்கேணி வாசிகள் நினைவை விட்டு அகலாது.
என்னைப்பொறுத்தவரை திருவல்லிக்கேணி 30 வருடங்களுக்கு முன்னால் நமக்கு தெரிந்த cosmopolitan நகரம். இன்றைய condo வாழ்க்கை முறையை அன்றே மத்திய நடுத்தர வர்க்கத்திற்கு காட்டிய ஓரு இடம், USயும், ஐரோப்பாவும், சிங்கப்பூரும் செல்ல அடித்தளம் போட்டு நம்மை அன்றே migrated societyக்கு தயார் செய்த ஒரு திர்க்கதரிச க்ஷேத்திரம். என் இளமையை சிரிக்க வைத்த , வளர்த்த, சிந்திக்க வைத்த ஒரு நண்பன்.
திருவல்லிக்கேணி எல்லா பாச்சுலர்களும் சந்தோஷமாய், எதிர்காலத்தை நினைக்காமல், நிகழ்காலத்தை பசுமையாக்கிய ஒரு இயந்திரம். அதன் பெயரைச்சொன்னாலே மனக்குதிரை வேகமெடுத்து, நினைவுப்புழுதியில் நம்மை மறையச்செய்து, விழித்திரையில் ஆனந்தக்கண்ணீரில் மூழ்கடிக்கும்.
சேகர் அப்படி தட்டிவிட்ட குதிரையின் ஒரு காலடி புழுதி தான் இந்த நினைவுப்பகுதி!
நன்றி குசும்பு ஆசிரியர் , நன்றி திரு சேகர்!
No comments:
Post a Comment