Tuesday, October 05, 2010

மாற்றி யோசிக்கலாம்!

எதிர்பாராத நெருக்கடி ஏற்படும்போது மூளை அபாரமாகச் செயல்படும். வழக்கத்துக்கு மாறாக ஏதேதோ கணக்குகள் போட்டு புது வழிகளை புலப்படுத்தும்.

மிகப் பெரிய நிதி நிறுவனங்கள் திவாலானது அமெரிக்காவின் சென்ற ஆண்டு சோகம். அந்த நாட்டைச் சார்ந்து இருந்ததால் ஐரோப்பாவும் ஸ்தம்பித்தது. இந்த சோதனை அவர்களை புது வழி தேட துரத்தியது. நிர்வாக குளறுபடிதான் சரிவுக்கு இட்டுச் சென்றது என்பதில் ஒருமித்த கருத்து உருவானதால், மாற்று ஆராயத் துவங்கினார்கள். அப்போது சந்தித்த பல சிந்தனைகளில் ஒன்று இந்திய நிர்வாகவியல் நிபுணர் வினீத் நய்யாருடையது.

எச்.சி.எல் டெக்னாலஜீஸ் தலைமை நிர்வாகி அவர். 'அமெரிக்கா பட்டதாரிகள் எந்த நேரமும் பணக்காரனாவது எப்படி என்ற சிந்தனையில் மூழ்கியிருப்பதால் இந்தியனைப் போல ஒழுங்காக வேலை செய்ய மாட்டார்கள்' என இவர் வெளிப்படையாக்ச் சொல்லி அங்கே கொந்தளிப்பு ஏற்பட்டது. மிரட்டல் வந்தும் கருத்தை மாற்றிக் கொள்ள மறுத்துவிட்டார். பெரிய நிறுவனங்களுக்கு அவர் கூறும் யோசனை மகாதமா காந்தியின் 'கஸ்டமர் இஸ் கிங்' தத்துவத்துக்கு முரணானது.

'எம்ப்ளாயீஸ் ·பஸ்ட் கஸ்டமர்ஸ் ஸெகண்ட்' என்ற தலைப்பில் நய்யார் எழுதிய புத்தகம் அமோகமாக விற்கிறது. பணியாளர்களின் நலனை நிர்வாகம் கவனித்துக் கொண்டால் வாடிக்கையாளர்களை பணியாளர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்பது அது சொல்லும் சேதி. அதாவது, மனக்குறையுள்ள பணியாளர்கள் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தத் தவறுவதால் வாடிக்கையாளருக்கு அதிருப்தி ஏற்பட்டு அதனால் கம்பெனிக்கு இழப்பு உண்டாகிறாது என்று சுட்டிக் காட்டுகிறார்!

நேரமும் பணமும் செலவிட்டு கோயிலுக்குப் போய் மனநிறைவுடன் வீடு திரும்பும் ஒருவன், சம்பளம் தரும் அலுவலகத்திற்கு வேண்டாவெறுப்பாக ஏன் கிளம்புகிறான் என்பதை யோசிக்கச் சொல்கிறார். பணியாளர் பிரச்னையின் ஆழத்தைப் புரிந்து உதவ பரிந்துரைக்கிறார்.


இன்றைய தலைமுறையின் தேவைகளும் எதிர்பார்ப்பும் மாறியிருப்பதை கருத்தில் கொண்டு நிர்வாக கட்டமைப்பை திருத்தினால் மட்டுமே திறமையான இளைஞர்களை ஈர்க்க முடியும் என்கிறார். புதுமையான இந்த யோசனைகள் தொழில்துறை மேலாண்மையில் திருப்பத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். மாற்றி யோசிக்கலாம்; யோசித்தும் மாற்றலாம்.

-தினகரன் நாளிதழ்

1 comment:

எஸ்.கே said...

நல்ல கட்டுரை!