இயக்குநர் ஸ்ரீதர் அவர்கள் இயக்கிய படங்கள் மக்களைச் சென்றடையாததால் சித்ராலயா நிறுவனம் நொடித்துப் போயிருந்த நேரம் அது.
ஸ்ரீதர் யோசித்தார். உடனடித்தேவை 'சித்ராலயா'வை நிமிர்த்துவது. ஒருவரால் மட்டுமே அது முடியும். தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்தவுடன், 'வாருங்கள்' என்ற பதில் வந்தது. சென்றார். சந்தித்தார். மனம் விட்டுப் பேசினார். 'உங்களுக்குப் படம் பண்ணுவதாக முடிவு செய்தாகிவிட்டது. ஆகவேண்டியதைப் பாருங்கள்' என்றவுடன் ஸ்ரீதருக்கு மகிழ்ச்சி.
தினத்தந்தியில் வந்திருந்த விளம்பரம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 'சிவாஜி' கேம்ப் இயக்குநர் 'எம் ஜி ஆர்'-ஐ இயக்குவதா, என்ன கொடுமை இது?! எம் ஜி ஆருக்காக எவ்வளவு விட்டுக் கொடுக்க வேண்டும்? ஸ்ரீதருக்குப் புத்தி கெட்டுவிட்டதா?! இப்படி காலில் விழுந்தால் 'எம் ஜி ஆர்'தான் மதிப்பாரா? அந்நாளில் எம் ஜி ஆர் ஷ¤ட்டிங்கில் பண்ணும் அலம்பல் மிகப் பிரசித்தம்! ஸ்ரீதர் இதையெல்லாம் தாங்குவாரா?! இருந்தாலும் விநியோகஸ்தர்களிடமிருந்து பணம் கொட்டியது!
பல விமர்சனங்களுக்கு நடுவில் எம் ஜி ஆரைப் போட்டாயிற்று. அட்வான்ஸ் பணமும் வந்தாகிவிட்டது. இனி என்ன படம் எடுக்க வேண்டியதுதானே?! அதில்தான் சிக்கல்.
ஸ்ரீதருக்கு கவியரசர் இல்லையென்றால் சரிப்பட்டு வராது. எம் ஜி ஆருக்கோ கவியரசர் சரிப்பட்டு வராது! என்ன செய்வது?!
சங்கடத்திற்கு எம் ஜி ஆரே முற்றுப் புள்ளி வைத்தார். 'கவிஞர் எழுதட்டும். ஏனென்றால் இது ஸ்ரீதர் படம்!' அந்த ஒரு பாடல் இன்றும் பேசப்படுகிற, அழியாக் கவிதை, பசுமைக் கனவுப் பாடல் 'விழியே கதை எழுது!'
'உரிமைக்குரல்' பட விளம்பரத்தில் எம் ஜி ஆர் வேட்டியை உடுத்தியிருந்த விதம் 'ஆந்திரா கட்டை'ச் சார்ந்திருந்தது. 'ஸ்ரீதர் எதற்காக இப்படியெல்லாம் எடுக்க வேண்டும்?' என்று அவரைப் போற்றும் ரசிகர்கள் வேறு மண்டை காய்ந்திருந்தனர். ஆனால், எம் ஜி ஆரின் ரசிகர்களுக்கு உற்சாகம் தாளவில்லை. 'வாத்யார் கட்டு சூப்பர்மா!' என்று சான்றிதழ் கொடுத்தனர்!
எம் ஜி ஆர் எந்தவித பந்தாவும் செய்யாமல், மிக விரைவில் முடித்துக் கொடுத்த படங்களில் ஒன்றான 'உரிமைக்குரல்'-ன் வெற்றி ஸ்ரீதரை வாழவைத்தது; சித்ராலயாவின் பணப் பிரச்னையையும் தீர்த்து வைத்தது.
உரிமைக்குரல் வெற்றிக்குப் பின் வெளியான ஸ்ரீதர் படங்களில் 'இயக்குநர்' முத்திரை இல்லாவிட்டாலும், வெவ்வேறு கோணங்களில் ரசிக்கும்படியாய் அமைந்தன. காரணம் நிச்சயம் 'உரிமைக்குரல்'தான்!
No comments:
Post a Comment