Sunday, November 07, 2010

மைக்கேல் டிஸோஸா!

மஜ்பூர் என்கிற இந்திப் படத்தின் மோசமான தழுவல் அந்தப் படம்.

jaded சிவாஜி, bell bottom மாமி கே ஆர் விஜயா, மேஜர், உரக்கச் சிரித்துக் கொல்லும் வி கே ராமசாமி, இளமையான ஜெய்கணேஷ் - மொத்த சிவாஜி கேம்ப்-ஐ வைத்து திரு யோகானந்த் அவர்கள் இயக்கிய படம் படு தோல்வியைச் சந்தித்திருக்கக் கூடும். கடைசி இருபது நிமிடங்களில் 'அதிரடியாய்' ஸ்கிரிப்டை இழுத்துப் போகும் அந்த நடிகர் மட்டும் இல்லாமல் போயிருந்தால்.

இளமையான அமிதாப், பர்வீன் பாபி, ஸீஸன் நடிகர் ப்ரான் என்கிற பட்டாளத்தை வைத்து, சலீம்-ஜாவேத் கதையைப் பின்னியிருந்தாலும் மஜ்பூர் கல்லாப் பெட்டியை அவ்வளவாக அசைக்கவில்லை. இருந்தாலும், தமிழில் சிவாஜி-கே ஆர் விஜயாவை வைத்து எடுத்தார் யோகானந்த். அது சரி, ப்ரான் அவர்கள் மிகத் திறம்படச் செய்திருந்த 'மைக்கேல்' பாத்திரத்தை யார் செய்வது? அப்போதுதான் உயர்ந்து கொண்டிருந்த 'அவரை'ப் போடலாமா? சிவாஜியைக் கேட்டதற்கு 'நீங்க பார்த்து செய்ங்க' என்கிற பதில் வந்தது!


'ஆகாயம் மேலே, பாதாளம் கீழே' என்கிற பாடலில் அறிமுகமாகி, படத்தை இறுதிவரை தாங்கிச் செல்லும் பாத்திரமாய் வந்து போகும் 'மைக்கேல் டிஸோஸா' ரஜினியின் நடிப்பு மற்றும் ஸ்டைல் 'ஒண்ணாங்'கிளாஸ் என்று ரசிகர்களால் அமோகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது! இளையராஜாவின் இசையும் சேர்ந்து கொள்ள, படம் நூறு நாட்கள் ஓடியது!

இளையராஜாவின் இசை பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். எஸ் பி பி அவர்களின் heavy voice-ல் சிவாஜி வாயசைத்த 'திருத்தேரில் வரும்', 'என்னோடு பாடுங்கள்' மற்றும் மென்குரலோன் யேசுதாஸ் அவர்களின் 'ஆகாயம் மேலே, பாதாளம் கீழே' டப்பாங்குத்து, என பாடகர்களை மாற்றியமைத்த இளையராஜாவின் யுக்தி அபாரம். அதுவும் ரஜினி காட்சிகளின் BGM உயர்தரம்!

இளமை அமிதாப் செய்திருந்ததை நடிகர் திலகம் ஏற்று நடிக்க, ஸீனியர் ப்ரானின் ரோலை வளர்ந்து வரும் ரஜினி ஏற்றிருந்தது இன்னுமொரு சுவாரஸ்யம்.

'நான் வாழ வைப்பேன்' படம் தயாரிப்பாளரை வாழ வைத்தது; அன்றிலிருந்து இன்று வரை அனேகமாய் எல்லாரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் ரஜினியின் மற்றுமொரு பரிணாமத்தையும் வெளிக்கொணர்ந்தது என்பதில் துளியும் சந்தேகமில்லை.

1 comment:

எஸ்.கே said...

நானும் அந்த படம் பார்த்திருக்கிறேன். ரஜினி வந்த பிறகுதான் படத்தில் விறுவிறுப்பே இருக்கும்!