Saturday, January 01, 2011

இனிய புத்தாண்டு!

கடந்த ஆறு வருடங்களாக அலுவலகத்திலதான் எனது புத்தாண்டு துவங்கியிருக்கிறது. அதிகாலை மூன்றுக்கு விழித்துக்கொண்டு, நான்கே-கால் மணிக்குக் காரில் ஏறி, ஐந்துக்குள் அலுவலகத்தில் அடைந்துவிடும் புத்தாண்டு எனக்கு!

ஸப்போர்ட் ப்ராஜக்ட்-லிருந்து விலகியதால், இந்த வருடம் புத்தாண்டு வித்தியாசமாயிருந்தது! ஐந்திற்கு வைத்த அலாரத்தைத் தணித்துவிட்டு, மெதுவாய் ஆறரைக்கு எழுந்து, நிதானமாய்க் குளித்து, மிக நிதானமாய் சந்தியாவந்தனம், பூஜைகளை முடித்து, ராகி குட்டா ஆஞ்சநேயர் ஆலயத்துக்குச் சென்றோம்.


பத்தடிக்கு விக்னேசுவரர் இருந்தாலும், கோயிலுக்கு அனுமன் பெயர் சூட்டியிருப்பது அதிசயம். கண் கொள்ளாமலிருக்கும் விநாயகரைத் தரிசித்து, அன்னபூரணிக்கு அரிசியிட்டு (சாப்பாட்டுக்கு யாரும் கஷ்டப்படக்க்கூடாது மற்றும் நேரத்துக்குச் சாப்பாடு கிடைக்கவேண்டுமப்பா!), 40 படிகள் (சுமார்!) ஏறினால் சிவ பெருமான், ராம லக்ஷ்மணர்கள் சகித ஆஞ்சநேயரைக் கண் குளிரத் தரிசிக்கலாம்.

வெள்ளியில் பிள்ளையார், வெள்ளையாய் அன்னபூரணி, தங்கத்தில் மாருதி தக தகவென ஜ்வலித்தனர். கூட்டம் அதிகமில்லாததால் தரிசனம் இயல்பாகவும், அமைதியாகவும் நிகழ்ந்தது.

பசியெடுத்ததில், மெதுவாய் நடந்து எஸ் எல் வி உணவகத்துக்குச் சென்று மாடியில் அமர்ந்தோம். இரண்டு மேசைகள் மட்டுமே நிரம்பியிருந்தன. 'தோசை' சாப்பிட்டுப் போரடித்துப் போனதால், இட்லி வடையுடன், வித்தியாசமாய் 'பிஸி பேளா பாத்'! அடடா! அட்டஹாஸம்(அன்னபூரணி எ·பெக்ட்!)!! 'அடக்கி வாசிக்கும்' விஷ்ணு கூட அடம்பிடித்து 'பிஸி பேளா'வை ஒரு பிடி பிடித்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! சாப்பிட்டு, அரை கப் (1 by 2) கா·பியைச் சுவைத்தபோது 'இதை விட வேற என்னடா வேணும் ரங்கநாதா உனக்கு?!' என்றது மனது.

மூன்று சக்கர வாகனத்தைப் பிடித்து, ஜயநகர் பிள்ளையார் கோயிலுக்குச் சென்றால்.... அடேங்கப்பா! கூட்டமோ கூட்டம்! பணக்காரப் பிள்ளையார் தங்கத்தில் மினுமினுக்க, அனேகமாய் எல்லோரும் காக்காய் பிடித்துக்கொண்டிருந்தனர்! (பின்னே, வேண்டினால் உடனே நடத்திவிடும் பாப்புலர் பிள்ளையாராயிற்றே!) உடல் நோகாது பூக்கொண்டு செந்நிற மேனியனான கணபதியைத் துதித்தால், வாக்குண்டாம், நல்ல மனமுண்டாம், லக்ஷ்மி கடாக்ஷம் உண்டாம் என்கிறார் ஔவைப் பாட்டி. ஆனால், 'மேனி நுடங்காது' (உடல் நோகாது) என்கிற பதம் இந்தப் பிள்ளையாருக்குப் பொருந்துமா எனத் தெரியவில்லை! ஏனென்றால், தீபத்தை ஒற்றிக்கொண்டு, தீர்த்தத்தை வாங்கிக்கொண்டு, ஒரு சுற்று சுற்றி வருவதற்குள் கொஞ்சம் கசங்கித்தான் போய்விட்டோம்!

ஜயநகர் பேருந்து நிலையம் அருகில், கணேஷ் ஜுஸ் எதிரிலிருக்கும் திண்ணையில் ஆராமாய் உட்கார்ந்தால் உலகம் மாறியிருப்பது நிதர்சனமாய்த் தெரிகிறது. இளம்பெண்கள் உட்கார்வது, செல்பேசி அதிர்வது, பின்னர் ஆண்மகன் வந்து 'இட்டாந்து' செல்வதும் இயல்பாயிருக்கிறது. வயதானவர்கள் என்னதான் யோசித்துக் கொண்டிருப்பார்கள்?! உட்கார்ந்திருந்த என் அம்மாவைக் கேட்டேன். சிரித்தாள்!

விஷ்ணுவிற்கு ஒரு ஆட்டோ, ஒரு லாரி, ஆரஞ்ச் புக் (ஜயநகர் பிள்ளையார் நோட்டீஸ் கம் மினி புக்-ஐக் காட்டி ஏமாற்றி விட்டேன்!), எனக்கு சக்தியுடன் பக்தி + தினகரன் + துக்ளக், அம்மாவுடன் மீண்டும் ஒரு மினி கா·பி (அதிகமில்லை ஜெண்டில்மேன், ஐந்தே ரூபாய்தான்!, விஷ்ணு இதிலும் பங்கு, ஆச்சரியம்!) என என்னுடைய புத்தாண்டின் முதல் நாள் முதல் பாதி 'நிம்பவே' வித்தியாசம்தான்.

No comments: