Sunday, January 02, 2011

மன்-மதன்-அம்பு!

தனது முயற்சியில் முற்றும் தளராத விக்கிரமாதித்தன் மயானத்திற்குள் பயப்படாது சென்று மரத்திலிருக்கும் உடலை வீழ்த்தி, தோளில் போட்டுக்கொண்டு நடந்தான்.

உடலிலுள் இருக்கும் வேதாளம் மெல்ல நகைத்துப் பேசத் துவங்கிற்று 'என்ன விக்கிரமாதித்தரே?! உலக நாயகன் என எல்லோராலும் அழைக்கப்படும் கமல்ஹாசன், அவரை வைத்து இயக்கியே பெயர் வாங்கும் கே எஸ் ரவிக்குமார், 50 வயது ஆசாமிகளையும் ரசிகர் மன்றம் வைக்கத் தூண்டும் த்ரிஷா, மூன்றாவது படத்திலேயே கமலை புக் செய்த உதயநிதி ஸ்டாலின், பிரம்மாண்ட கப்பல் என்றெல்லாம் விளம்பரப்படுத்தப்படும் மன்-மதன்-அம்பு படத்தைப் பார்க்கவில்லையா இன்னும் நீ?!' என்றது!

படம் ரிலீஸான மூன்றாம் நாளில், பெங்களூர் மல்ட்டிப்ளக்ஸில் 9 டிக்கெட்டுக்களைப் புக் செய்துவிட்டு, குடும்பமே வர மறுத்ததால், இரண்டு மணிநேரம் புக்கிங் ஆ·பிஸில் சென்னை நண்பருடன் வெயிட் செய்து, 'நொந்து நூடுல்ஸாகி' டிக்கெட்டுக்களை ஒரு வழியாக விற்றுத் தீர்த்த கடுப்பிலிருந்த விக்கிரமாதித்தன் நேற்றுத்தான் திருட்டு விசிடியில் படம் பார்த்திருந்ததை எப்படி வாய் விட்டுச் சொல்ல முடியும்?!


'சரி, சரி, நீயா பார்க்காமலிருந்திருப்பாய்?! இருந்தாலும் சொல்கிறேன் கேள்!' என வேதாளம் கதைக்கத் துவங்கியது.

ஆர்மி மேஜர் ராஜ மன்னாராக அறிமுகமாகும் கமல் கடைசி வரை மதன் - மாதவனுக்காகத் துப்பறியும் வேலை செய்து, இறுதியில் அம்பு - திரிஷாவைக் கைப்பிடிப்பது கதை. காத்திருந்தவன் காதலியை நேற்று வந்தவன் 'தள்ளி'கிட்டுப் போவதை ஐரோப்பா/க்ரூஸ் என்கிற ஜிகினா வேலையோடு சொல்லியிருக்கிறார்கள். நடுவில் சங்கீதா, ரமேஷ் அர்விந்த், ஊர்வசி. கௌரவமாய் சூர்யா, தமிழைக் கொஞ்சும் உஷா உதூப்!

டெக்னாலஜி முன்னேறியிருப்பதை இண்டர்நெட், மொபைல் பேச்சுக்களிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. அதற்கென்று அதையே காட்டிக் கொண்டேயிருப்பது தாங்கலைடா!

அறிமுகக் காட்சியில் அசத்தும் கமல், அப்படியே அமுங்கிப் போய் அல்லாடுவது கஷ்டமாயிருக்குது, சாமியோவ்!

படம் முழுக்கக் கத்தும் மாதவன், அய்யோ பாவம்!

சரி, த்ரிஷாவாவது இருக்கிறார்களே என்றால் பாதிக் காட்சிகளில் அம்மணி அழுதுவடிவது போலிருப்பது, என்னாச்சு?!

கமல்-த்ரிஷா நெருக்கக் காட்சிகள் இல்லாதது ஏனோ நெருடுகிறது (ஒரு கனவுப் பாட்டு வைத்து 'இன்னும் என்னை என்ன செய்யப்ப் போகிறாய்?' எனச் சொல்லியிருக்கலாம்தான்!, ஹ¤ம்!, என்ன உள்குத்தோ?!) கடைசிக் காட்சியில்தான் கமல், திரிஷா மேல் 'கை'யே வைக்கிறார்!

ஹ்யூமர் சென்ஸ் அதிகமாயுள்ள ஊர்வசி/ரமேஷ் அர்விந்தைப் படம் முழுக்க அழ வைத்திருப்பதை என்னான்னு சொல்ல?!


கமலுக்கும் பாத்ரூமிற்கும் அவ்வளவு நெருக்கம். படத்தில் தாராளமாக இந்தக் காட்சிகள் வருகின்றன. ஆனால், அனைத்தும் மாதவனைச் சுற்றியே இருப்பது அவ்வளவாகச் சரியாயில்லை. கொஞ்சம் த்ரிஷா, சங்கீதா காட்சிகளையும் சேர்த்திருந்தால் என் போன்ற 'கட்டை'களுக்குக் கொஞ்சம் சுவாரஸ்யம் தட்டியிருக்கும்.

அங்காங்கே தெளிக்கப்பட்டிருக்கும் நகைச்சுவை, சில இடங்களில் புகுத்தியிருக்கும் கமலின் கருத்துக்கள் (அஷட்டுத்தனமா இருக்கு!) என வசனங்களும் நொண்டியடிப்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

டிஎஸ்பி இசையில் ஒரே பாடல் 'நீலவானம்' மனதிற்கு இதமாயிருக்கிறது. ஒளிப்பதிவாளர் / இயக்குநர்/ எடிட்டர் என எல்லோரும் காணாமல் போயிருப்பது மற்றுமொரு துர்ப்பாக்கியம்.

'என்ன ஆட்டினாங்க?' என்று யாரும் கேட்க முடியாது, ஏனென்றால் ஒரே காட்சியில் இருவர் கட்டை விரலை(யாவது) ஆட்டுகிறார்கள்!' என முடித்து விட்டு,

இந்தப் படம் அவ்வளவாக வெற்றி(?!) பெறாமல் போனதற்குக் காரணம் உதயநிதி ஸ்டாலினா, கே எஸ் ரவிகுமாரா, கமலா, த்ரிஷாவா? நீர் என்னதான் நினைக்கிறீர் விக்கிரமாதித்தரே?!' என்று கொக்கி போட்டது வேதாளம்.


'எங்கிருந்தோ 'வாங்கி' இங்கே 'கொட்டி'யிருக்கும் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களைக் குறை சொல்ல முடியாது; எம் ஜி ஆருக்கு சொன்னதைச் செய்யும் ஒரு ப நீலகண்டன் போல், கமல் சொன்னதைச் செய்த இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் அவர்களையும் திட்ட முடியாது, துடை தெரிய உடையணிந்து பவனி வரும் 'அயகு ராணி' த்ரிஷாவையும் (ஹி! ஹி!) ஒன்றும் சொல்ல இயலாது (இதைத் தவிர என்னதான் செய்வார் அவர்? பாவம்!) கதை/திரைக்கதை/வசனம் - நிற்காமல் - பாடலாசிரியர்/பாடகர் என்று எல்லாவற்றையும் தலையில் போட்டுக் கொண்டு, மூன்று மணி நேரம் நம்மை வதைத்த கமலின் கற்பனை வறட்சியே படத்தின் தோல்விக்குக் காரணம்' என மௌனத்தைக் கலைத்த விக்கிரமாதித்தனுக்கு 'பெப்பே' காட்டிவிட்டு மீண்டும் மயானத்துக்குள் போய் மறைந்தது வேதாளம்!

'அடடா! கமலை மாதிரி நாமும் அதிகமாய்ப் பேசிக் காரியத்தைக் கெடுத்துவிட்டோமே?!' என நோகாமல் தலையில் அடித்துக்கொண்டான் விக்கிரமாதித்தன்
.

No comments: