Monday, January 24, 2011

ரஜினியின் பன்ச் தந்திரம்!


தனது முயற்சியில் முற்றும் தளராத விக்கிரமாதித்தன் மயானத்திற்குள் பயப்படாது சென்று மரத்திலிருக்கும் உடலை வீழ்த்தி, தோளில் போட்டுக்கொண்டு நடந்தான்.

உடலிலுள் இருக்கும் வேதாளம் மெல்ல நகைத்துப் பேசத் துவங்கிற்று 'என்ன விக்கிரமாதித்தரே? நீர்தான் ரஜினி ரசிகராயிற்றே? ரஜினியைப் பற்றிய லேட்டஸ்ட் புத்தகத்தைப் படித்துவிட்டீரா?!' என்று எக்காளத்துடன் கேட்டது வேதாளம்.

'நண்பரிடமிருந்து கடன் வாங்கிப் படித்தேன் என்றால் கடித்துவிட்டு, ஓடிப் போய்விடுவாய் - பேசாமல் இருப்பதே சுகம்' என்று மௌனம் காத்தான் விக்கிரமாதித்தன்.

ரஜினிகாந்த் பேசிய பன்ச் வசனங்களில் 30ஐ எடுத்து, பிஸினஸிற்கும், வாழ்க்கைக்கும் எத்துணை பொருத்தமாயிருக்கிறது என்று அடிக்கோடிட்டு, திரு பி.சி. பாலசுப்ரமணியன் / ராஜா கிருஷ்ணமூர்த்தி (கிட்டி) ஆங்கிலத்தில் எழுதியதைத் தமிழில் மொழிபெயர்த்து 'ரஜினியின் பன்ச் தந்திரம்' என்கிற பெயரில் கிழக்குப் பதிப்பக வெளியீடாக சென்ற திஸம்பர் 2010-ல் வந்திருக்கிறது.

பாட்ஷா 7, பாபா / அருணாச்சலம் / முத்து / சிவாஜி தலா 3, படையப்பா / அண்ணாமலை தலா 2, ஜானி / 16 வயதினிலே / சந்திரமுகி / எஜமான் / தர்மத்தின் தலைவன் / எங்கேயோ கேட்ட குரல் / மனிதன் தலா 1 என ரஜினி படங்களிலிருந்து எடுத்து கையாண்டிருப்பது வித்தியாசமாயிருக்கிறது.

சந்திரமுகி திரைப்படத்தின் ஆடியோ விழாவில் பேசிய 'நான் யானை இல்ல..குதிரை...டக்குனு எழுந்திருப்பேன்!' என்றதை 'சுதாரிப்பு' உணர்வோடு ஒப்பிட்டு பிஸினஸையும், வாழ்க்கைக்கும் எத்துணை பொருத்தமான பன்ச் இது எனச் சுட்டிக் காட்டியிருப்பது வியப்பைத் தருகிறது.

வேலைக்குதவாத 'பரட்டை' அடிக்கடி எக்காளத்துடன் 'இது எப்டி இருக்கு?'ஐக் 'கருத்துக்களைக் கேட்டு வாங்கப்பட வேண்டும்' (இதுதான் 'போட்டு வாங்க'றதோ?!) , 'மௌனமாயிருக்கக்கூடாது' என்பதோடு இணைத்திருப்பதும் நன்றாயிருக்கிறது.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் விக்கிரமாதித்தரே?!

இதெல்லாம் போகட்டும். உமக்கு எது அல்லது யாரைப் பிடித்திருக்கிறது? ரஜினியின் பன்ச் டயலாக்ஸா, இதை எழுதியிருக்கும் எழுத்தாளர்களா, ஆங்கிலத்திலும், தமிழிலும் வெளியிட்டிருக்கும் பதிப்பாளர்களா?, இல்லை படிக்கும், படிக்கப்போகும் வாசகர்களா? சொல்லாவிட்டால் தலை சுக்கு இருநூறாகி விடும்!' என்று சொல்லி விக்கிரமாதித்தனுக்குக் கொக்கி போட்டது.

ரஜினி போல் அமைதி காத்து வந்த விக்கிரமாதித்தன், இனியும் 'தலை' தப்பாது எனத் தெளிந்து 'ரஜினியின் பன்ச் 'மந்திரமா'யிருந்த காலம் போய் இப்போது 'தந்திரமா'கிவிட்டது. அதற்கேற்றாற்போல தலைப்பு வைத்தது புத்திசாலித்தனம்.

பன்ச் டயலாக் ஒரு பக்கம், ரஜினி படம் ஒரு பக்கம், மேட்டர் 'திருக்குறள்' சைஸில் ஒண்ணரை பக்கம் எனப் பக்கங்களை வளர்த்து, சாதா பக்கங்களை, டைரக்டர் ஷங்கர் போல மெகா பக்கங்களாக்கிய கிழக்குப் பதிப்பகத்தார் புத்திசாலிகள்.

எழுதிய திரு பாலசுப்ரமணியன் / திரு ராஜா தேசிங்கு மெத்தப் படித்தவரென்றாலும், ரஜினி என்கிற காந்தத்தின் வசீகரத்தில் விழுந்தது ரஜினி அவர்களின் புத்திசாலித்தனம்!

தெரிந்த விஷயங்களையே, ரஜினி அவர்களின் பன்ச் டயலாக்ஸ் ஜிகினா காகிதத்தில் சுற்றி வாசகர்கள் காதில் பூமாலை வைத்தது அதி புத்திசாலித்தனம். காசு கொடுத்து வாங்கிப் படித்த உன்னை விட கடன் வாங்க்ப் படித்த நான் புத்திசாலிதானே?!' என்று விக்கிரமாதித்தன் கேட்ட எதிர்க்கேள்விக்குப் பதில் சொல்ல விரும்பாத வேதாளம் சட்டென மீண்டும் முருங்கை மரம் போய்விட்டது!

'வேதாளம் கேட்டான்..விக்கிரமாதித்தன் கெட்டான்!' என்று நொந்துகொண்டான் விக்கிரமாதித்தன்!

No comments: