Thursday, August 25, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 15

ஈர்ப்பு என்கிற சொல்லுக்கான அர்த்தத்துடன் நமது பதிவைத் துவங்குவோமா?! (வர வர 'மா நன்னன்' வாழ்க்கைக் கல்வி, தொலைக்காட்சித் தொடர் போல...என்னய்யா இது?!)

'ஈர்ப்பு' என்பது பெயர்ச்சொல்.

1. கவர்ச்சி, வசீகரம், மோகனம் (வசீகரன், மோகன் பெயர்கள் இதிலிருந்துதான் வந்தனவோ?!)
2. இழுப்பு (புவியீர்ப்பு - நியூட்டனின் மூன்றாம் விதி?!)

ஆங்கில மொழிபெயர்ப்பு இன்னும் சுவாரசியம்...

1. attraction
2. pull

'ஈர்ப்பு' எனும் வார்த்தைக்குப் பாலியல் ரீதியான அர்த்தம் ஒன்றைப் பின் குறிப்பில் கொடுத்திருக்கிறேன். ஆர்வமுள்ள வாலிப / வயோதிக வாசகர்கள் அப்டியே தாவி பி.கு.-விற்குப் போகவும்!

விருப்பிமில்லாது நடிப்போர்கள் மேல படிக்கலாம்.

முகப் புத்தகத்தில் எழுதியது...

//கவிஞர் தாமரை மீதான மதிப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது. வாரணம் ஆயிரம் / வி தா வ படங்களில் வரும் ஒரு பாடலில்...ஒரு அரிதான (rare) தமிழ் வார்த்தையை உபயோகித்திருப்பார். எனக்குத் தெரிந்தவரை இந்த வார்த்தையை உபயோகித்த பாடல்கள் இல்லை எனத்தான் நினைக்கிறேன். அது என்ன? - பாடல்களைக் காதுகளிலேயே ஒலிக்க வைத்துக்கொண்டிருக்கும் அன்பர்களே, யோசியுங்கள். அல்லது எனது பதிவுக்குக் காத்திருங்கள்! //

சூர்யா, பெண்களை ஈர்க்கத் துவங்கிய பின்னும் கூட, 'பெண்ணே உன் மேல் பிழை' என அழகு காட்டிப் பாடும் பாடல்....அடடா...என்ன ஒரு இளமை...?!

பொன் வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை...!

என ஆரம்பித்து,

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க,
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க,
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புனைகையோ போகன்வில்லா...

காதலில் மூழ்கியதை என்றென்றும் கேட்கலாம்...பார்க்கலாம்!


ஸ்ரேயா கோசல் மென்மையில் 'மன்னிப்பாயா' கேள்வி தொடுத்து மறக்கும்படி கொஞ்சும் போது, எங்கிருந்தோ 'திடுக்'கென எட்டிப் பார்த்து, ஏ ஆர் ரெஹ்மான்......

'தொலை தூர வெளிச்சம் நீ...
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாய்!'
மேலும்... மேலும்... உருகி... உருகி...
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை... என்ன செய்வேன்....?

எனக் குரல் கொடுத்து வருடியதை, அதனால் நம் மனம் நெருடியதை மறக்க முடியுமா?! அல்லது சிம்பு, த்ரிஷா-வை 'இச்'னு எச்சப்படுத்தியதை-தான் மறக்க முடியுமா?!


தாமரை அவர்கள், இவை தவிர வேறு எங்கும் உபயோகிக்கவில்லை என இன்று 'மாலை இள(ம்) வெயில் நேரம்' வரை நினைத்திருந்தேன்....இல்லை எனத் தெளிந்த போது 'அங்கே தொலைந்தவன் நானே!'-அம்மணி...கலக்கிப்பிட்டீங்கோ! அடடா! அனைவரையும், ஆமீரையும் கூட, பாடு படுத்திய பாட்டல்லவா இது?!!

அவள் நின்று பேசும் தருணம்...
என் வாழ்வில் சர்க்கரை நிமிடம்...
ஈர்க்கும் திசையை அவளிடம் கண்டனே...!


பின் குறிப்பு:

1. நேராய் வந்தவர்களுக்கு - உங்களுக்கு 'அது' மேல் ஈர்ப்பு இருக்கிறது! - என்ன கொஞ்சம் பொறுமை மிஸ்ஸிங்! (ஹி..ஹி..!)

2. பொறுமையாய் வந்தவர்களுக்கு - உங்களைப் போல் வாழ்க்கையை ரசிப்பவர்கள் யாரும் இருக்க முடியாது - நிச்சயமா உங்களோட 'அவங்க'ளுக்கு உங்க மேல ஈர்ப்பு என்னிக்கும் உண்டு!!!

3. 'என்னடா மோஹம்-ங்கறான், ஈர்ப்பு-ங்கறான், மாமி இல்லை, தனியா கீறான்' எனச் சந்தேகப்படும் சாமானியர்களுக்கு....'எனக்கு 'ஆத்து மாமி', அப்புறமா தமிழ் மேலதான்யா மோஹம், ஈர்ப்பு - வேற மேட்டர் இல்லைய்யா' என 'பாப்பையா' அவர்கள் பாணியில் பணிவுடன் சொல்லி விடை பெறுகிறேன்.

1 comment:

JK said...

உன் தனிமை உன்னை ஈர்த்திருக்கிறது ஈர்ப்பு மனையாள் இல்ல்லாததில் அதிகரித்து இல்லாததினால் தமிழின்பால் திசைதிரும்பிருக்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது
ஈர்ப்பின்பால் ஈர்ப்பாகி தமிழின் ஈர்ப்புதனை கவிஞர்களி ஈர்ப்பு மிகு கவிதைகளையும் அள்ளித்தெளித்து எங்களை ஈர்த்தமைக்கு ஒரு மிக பெரிய ஓ

(அப்பாட ஈர்ப்புக்கு நிறைய தடவை ஈர்ப்பு வைத்து உன்னை ஈர்க்க ஒரு பின்னூட்டமும் கொடுத்தாகிவிட்டது)

ஈர்ப்பான
ஜேகே