Tuesday, September 06, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 17

எழுத்தால் பிழைக்க வேண்டிய கட்டாயம் இல்லாத எழுத்தாளனுக்கு சன்மானம் பெரிசல்ல. பத்திரிகை வெளிவந்த அன்று அதை வாங்கி அவசரமாகப் புரட்டி கதை வந்திருந்தால் அதை பெட்டிக்கடையோ ரெயில்வே பிளாட்பாரமோ அங்கேயே உட்கார்ந்து கொண்டு தான் எழுதியதை யாரோ எழுதியதுபோல் படித்து மற்ற பேர் படிக்கையில் ஓரக்கண்ணால் எட்டிப்பார்த்து அதில் ஏற்படும் சந்தோஷம், இன்பம், மகிழ்ச்சி, உவப்பு, களிப்புக்கு ஈடென வாழ்க்கையில் எதுவும் இல்லை.

அந்த சந்தோஷம்கூட எனக்கு எழுத ஆரம்பித்த ஓரிரு ஆண்டுகளிலேயே விலகிவிட்டது. காரணம் ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ள நான் எழுதி அனுப்பிய தலைகீழ் முறையில், பிரசுரமாவதில் உள்ள எதிர்பாராத தன்மை விலகிவிட்டது.

ஆற அமர வார்த்தைகளைச் செதுக்கி அடித்துத் திருத்தி...இதற்கெல்லாம் சமயமின்றி எழுத ஆரம்பித்த கதைகள் பல சந்தர்ப்பங்களில் தன்னையே எழுதிக்கொண்டவை. இந்தக் கதைகளில் இளம், புதிய எழுத்தாளர்களுக்கான பாடங்கள் உள்ளன என்றால் எனக்குத் தோன்றுபவை.

1 . என் எழுத்து நடையைப் பின்பற்றாதீர்கள். இதை parody செய்வதுபோல் ஆகிவிடும். உங்களுக்கென்றே ஒரு நடைவேண்டும். அது உங்களுக்குள் ஒலிக்க வேண்டும்.

2 . முழுக்க முழுக்க கற்பனையான எழுத்தில் எழுத முடியாது. இந்தத் தொகுப்பில் உள்ள அத்தனை கதைகளும் நான் பார்த்த, கேட்ட பங்கு பெற்ற சம்பவங்கள். அவைகளை அப்படியே எழுதாமல் பெயர், இடம், காலம் இவைகளை மாற்றி மற்ற நிஜ வாழ்க்கை சம்பவங்களையும் உரையாடல்களையும் கலந்து எழுதியிருக்கிறேன். இந்த முறைதான் என் வெற்றிக்குக் காரணம்.

3 . நிறைய, மிக நிறையப் படிக்க வேண்டும். கதை எழுதுவதற்கு மட்டுமின்றி சில கதைகளை எழுதாமல் இருப்பதற்கும் அது உதவும்.

4. பண்டைத் தமிழ் இலக்கியங்கள் நிச்சயம் படிக்க வேண்டும். அது நம் மரபு மட்டுமன்றி இந்த மொழியின் பல்வேறு வாய்ப்புகளை நமக்குக் காட்டும். நல்ல தமிழ் எழுதப் பழகுவது நல்ல பேனாவை, நல்ல தூரிகையை வைத்துக்கொண்டு சித்திரம் வரைவது போல.

இக்கதைகளை நாற்பதாண்டுகாலம் எழுதிவந்தவன் என்கிற தகுதியில் இன்று இவைகளைப் பற்றி என் எண்ணம் இதுதான். எனக்கு அப்பாலும் இவை வாழும் வலுவான சாத்தியங்கள் உள்ளன.

உயிர்மை வெளியீடான 'தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - இரண்டாம் தொகுப்பு' நூலின் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் முன்னுரையிலிருந்து...

எல்லாமே கடல் முத்துக்கள் என்றாலும், ஒரே ஒரு சிறுகதை (கேட்ட கதை) என் மனதை disturb(தமிழ் வார்த்தை?!)செய்து, இன்னும் அகல மறுக்கிறது....

கிருஷ்ணன் என்கிற நபரைப் பார்க்க நண்பன் சுதாமன், மகள் சுகந்தியோடு வருகிறான். ஒண்ணாங்கிளாஸ் நண்பன் தன்னைக் கண்டு கொள்வானா என்கிற கவலை சுதாமனுக்கு. ஆனால், செல்வச் செழிப்புள்ள கிருஷ்ணன் நண்பனை இனங்கண்டு குசலம் விசாரித்து, தன்னுடைய weaknessஐயும் (புடவை துரத்துதல்!) விவாதித்து, நன்கு உபசரித்து, வேண்டிய உதவிகளைச் செய்து, மகள் சுகந்தியை அனுமதிக்காத செயலாளினியைத் திட்டி, நண்பன் இடுக்கண் நீக்குகிறான். வீடு வருவதற்குள், அமைப்பே மாறி, நிலைமை தலை கீழாகி விடுகிறது! 'கேட்ட கதை'யாக இருக்கிறதா??!! கதை முடியவில்லை.

சுஜாதா பின்குறிப்பை அப்டியே தந்திருக்கிறேன்....

இந்தக் கதை ஒரு புராணக்கதைபோல, கேட்ட கதை போல இருப்பதை, உங்களில் பல புத்திசாலிகள் கவனித்திருக்கலாம்! ஆம். அந்தக் கதை போலத்தான் இது. ஆனால் ஒரே ஒரு சின்ன வித்தியாசம். ஒரு வாரத்துக்குள் இந்தக் கிருஷ்ணனுக்கு சுகந்தியை அனுப்ப வேண்டியிருந்தது.

இன்றைய காலகட்டத்துக்கு ஒன்றும் புதிதான கதை அல்ல இது. ஆனால் 1983-ல்? நம்மை இப்படிப் புரட்டிப் போட, அயர வைக்க சுஜாதா ஒருவரால் மட்டுமே முடியும்!

No comments: