Friday, October 28, 2011

ஏழாம் அறிவு - 2


ஏழாம் அறிவு 'போதிதர்மன்' அறிமுகத்தோடு துவங்குகிறது.

முதல் அரை மணியில், 1600௦ ஆண்டுகள் பின்னோக்கிப் போய் 'போதி வர்மன்' சரித்திரம் முழுவதுமாய் எழுதப்படுகிறது. பல்லவ சாம்ராஜ்யம், சீனப் பயணம், மக்கள் மனதில் இடம் பிடித்தல், மருத்துவம், களரி என சீனத்தில் போதி வர்மனின் சாம்ராஜ்யம் விரிவடைவதை விஸ்தாரமாக பின்னணிக் குரலோடு காட்டப்படுகிறது. படம்தான் பார்க்கிறோமா, இல்லை நியூஸ் ரீலா என்கிற அளவிற்கு உச்சரிப்பு. முழுவதுமாய், போதி வர்மன் மறைவு வரை படம் பிடித்துவிட்டு நிகழ் காலத்துக்குத் திரும்பி, இன்றைய தமிழ் சமுதாயத்திற்கு ஆவேசக் கேள்வி தொடுக்கப்படுகிறது 'உங்களுக்கு போதி வர்மன் தெரியுமா?' youngisthan 'தொங்கிஸ்தான்' ஆகி 'தெரியாதுப்பா' என்கிறது!

இந்தியா வளர்ச்சி பிடிக்காத சீனா 'டாங் லீ' என்கிற நாசகாரனின் தலைமையில், இந்தியாவை அழிக்க 'ஆபரேஷன் ரெட்' என்கிற போர்வையில் அனுப்புகிறது. டாங் லீ-க்கு கொடுக்கப்பட்ட வேலை ஒரு இளம் ஆராய்ச்சியாளினி-ஐ அழித்துவிட்டு, இந்தியாவை 'நோய்'லிட்டு, சீனா-விடம் கையேந்த வைப்பதுதான்! டாங் லீ லேசுப்பட்டவனில்லை என்பதை ஐந்து நிமிடங்களில் காட்டி விடுகிறார் இயக்குனர். டாங் லீ இந்தியாவை அழித்தானா, ஆராய்ச்சியாளினி-ஐக் கொன்றானா, போதி வர்மரின் மிச்ச வம்சத்தைக் களைந்தானா என்பதுதான் கதை.

கதைக்குள் Genetic Engineering, hypnotising, mind reading / controlling என்கிற concept-கள் அற்புதமாய்ப் பொருந்துகின்றன. ஆனால், இயக்குனருக்கு ஏற்பட்ட சிறு குழப்பத்தில், மெய்ன் கதைக்கு வருவதற்குள் இடைவேளை மணி அடித்து விடுகிறார்கள்.


போதி வர்மனாய் மிளிர்கிற சூர்யா, அர்விந்தனாய் வரும்போது 'பாத்திரப் படைப்பின்' காரணமாய் ரசிக்க முடியவில்லை. சராசரி நாயகன் போல காதல் வசப்படுவதும், பின்னாடியே போவதும், ஜோராய் கடலில் நனைந்து டூயட் பாடுவதும், காதல் இல்லை என்றவுடன், 'லேஸ் சிப்ஸ் பாக்கெட்' கிடைக்காத குழந்தை அழுவது போல சாந்தமாய், ஒரு ஓரமாய் நின்று 'சோக'ப் பாட்டு பாடுவதும் ரொம்பவே தாங்கல! படம் நெடுக வில்லனுக்கும், நாயகிக்கும் ஃபுல் ஸ்கோப்பு கொடுத்துவிட்டு, இறுதிக்காட்சியில் 'slog overs' ஆட்டம் ஆடியிருக்கிறார்.
ஸ்ருதி ஹாசன் நாயகி. சும்மா சொல்லக்கூடாது 'செம வெய்ட்' அறிவியல் ஆராய்ச்சியாளினி பாத்திரத்தை வாரிசு நாயகி எதார்த்தமாய்ச் செய்துவிட்டுப் போவது புதுசு. தமிழ் சினிமா நாயகிகளை 'கொஞ்ச நாளாய்' உள்ளுக்குள்ளும் 'அதிகம்' வைத்து (அதாம்பா, தலைக்குள் இருக்கறதைச் சொன்னேன்!) உலாவ விடுவதில் மகிழ்ச்சி. கமல் ஸார் பொண்ணு சரி, அதுக்காக அவரை மாதிரியே 'அதிகம்' பேசணுமா?! அந்தக் காலத்துல அப்பா பாம்பே / ஆந்திர போயிட்டு, அப்பாலிகா தமிழ்-ல செட்டில் ஆனாப்போல, அம்மணியும் இந்தி/தெலுகு பருப்பு வேகாமல் தமிழுக்குத் தவ்வி இருக்கிறது. தமிழ், ஹாசனிடம் கொஞ்சம் தள்ளாடுகிறது! தமிழை 'இம்மாதிரி உச்சரிப்பவர்களிடமிருந்து' யார் காப்பற்றுவார்கள் அய்யா?

ஸ்டண்ட் இயக்குனர், நடிகர் Johnny Tri Nguyen கண்கள், நடை, பாடி லாங்குவேஜ் என ஆரம்பமே அசத்தல். சீனர்களுக்கே உரித்தான சிறிய கண்களாயிருந்தாலும், மனிதரின் பார்வை ஊடுருவி பயம் கொள்ள வைக்கிறது. இடைவேளைக்குப் பின் இவரது ராஜ்யம்தான். நாயகனைப் பின்னோக்கி, பயப்படுத்தும் பாத்திரத்தில் ஜமாய்த்திருக்கிறார். இறுதிக்காட்சிகளில் சூர்யாவுடன் மோதும்போது பொறி பறக்கிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் பாட்டுக்கள் படத்திலிருந்து ஒட்டாமல் 'தனித்து' இருப்பது மற்றுமொரு பலவீனம். பின்னணி இசை, ஸாரி, அது பற்றிய பேச்சே வேண்டாம்! வில்லனுக்குக் கொடுக்கப்பட்ட BGM-ஐக் கேட்கும்போது 'ச்சே', காதலன் படத்தில் ரகுவரன் எட்டிப் பார்க்கும்போதெல்லாம் ரெஹ்மான் எப்படிக் கொடுத்திருப்பார்?!

எடிட்டிங், ஒளிப்பதிவு, ஸ்டண்ட் என எல்லாம் 'ஒரு படி' மேல்தான். வித்தியாசமான சண்டை காட்சிகள், எடுக்கப்பட்ட விதம், தொடுக்கப்பட்ட விதம் என அனைத்திலும் நேர்த்தி.

பாத்திரப் படைப்புகள், கதைக் களம் நன்றாயிருந்தாலும் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது அவ்வளவு திருப்தியாயில்லை. தனது இரண்டாவது படத்திலேயே 'gun-காந்த்'-ஐ 'cum-காந்த்' ஆக்கியவர், பாழாய்ப் போன கமர்ஷியல் சினிமாச் சூழலில் சிக்கி, கதையிலிருந்து பிறழ்ந்து, காதல், பாட்டு எனத் தடுமாறிப் போனது ஏனோ? கடைசி வரை நாயகிக்கு நாயகன் மேல் காதலா என இயக்குனருக்கும் புரியவில்லை, நமக்கும்!

தமிழ் நாட்டில் இருப்பவர்க்கு 'போதி தர்மனும் தெரியவில்லை, 'அண்ணா பல்கலைக்கழகம்' ஐம்பது ஏக்கர் பரப்பளவும் தெரியவில்லை' - படத்தில் வரும் வசனங்கள் இவை! போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே தமிழுக்கு என்கிற ஆதங்கம் சரி, ஆனால் இதையே தெலுகுவில் டப்பிங் செய்து வெளியிடும்போது...?!! இந்த உண்மையை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்பதைக் கூடவா மறந்து விட்டார்கள்?

கதைக் களம் அருமை (ஈ என்கிற படம் இதையே நேர்க்கோட்டில் சொல்லும்!), நடிகர்கள் தேர்வு அருமை, technical crew அருமை, தயாரிப்பாளர் அருமை...இவ்வளவு இருந்தும் படம் கொஞ்சம் சுமார்தான்! எக்கச்சக்க எதிர்பார்ப்பில் வெளியாகி இருக்கும் 'ஏழாம் அறிவு' இதனாலேயே 'பெட்டிக்குள்' உடனே பதுங்கி விடும் அபாயமிருக்கிறது.


கடோசி - 1

கதையைக் கமர்ஷியல் நோக்கோடு கொண்டு போவதில் 'ஷங்கர்' தான் பெரீய ஆள் என்பது மீண்டும் நிரூபணம் ஆகி இருக்கிறது. இந்த ரேஸில் 'கே வி ஆனந்த்' பாஸாவதும் 'நோட் டவுன் யுவர் ஹானர்!'

கடோசி - 2

தீபாவளிக்கு வரும் படங்கள் சில சமயம் 'கில்லி' அடிப்பதும்...சில சமயம் 'கிலி' தருவதும் சகஜம். கமலுக்கு ஒரு 'ஆளவந்தான்' போல சூர்யாவுக்கு 'ஏழாம் அறிவு' ? ஒரே சுவாரஸ்யம் இரண்டிலும் கமலின் 'பங்கு' உண்டு என்பதுதான்!

கடோசி - 3

'ஏழாம் அறிவு சுமாரா இருக்கப்போய், மக்கள் வேலாயுதத்தை ஹிட்-ஆக்கிடுவாங்க பாரேன்' என்றான் என் தம்பி...தீர்க்கதரிசிடா நீ!

3 comments:

இராஜராஜேஸ்வரி said...

'ஏழாம் அறிவு சுமாரா இருக்கப்போய், மக்கள் வேலாயுதத்தை ஹிட்-ஆக்கிடுவாங்க பாரேன்' என்றான் என் தம்பி...தீர்க்கதரிசிங்க நீங்க!!

Anonymous said...

kandippa neenga sonna mathiri seekiram pettikkul poividum.velautham padathirukku positive previews than neraya varuginrana so velautham already super hit than

Anonymous said...

velayutham padu pitukuli thanamaga irupathaga oru vimarsanam solgirathu. irunthalum athu 7am arivai jeikkum. yenendral atharkku kidaikkum positive reviews than. athu yen positive reviews endra politics than.