Sunday, October 09, 2011

வாகை சூடவா

வாகை சூடவா பார்த்துவிட்டு கொஞ்ச நேரம் உட்கார்ந்து கொண்டிருந்தேன்...

ஜெஃப்ரி ஆர்ச்சர் அவர்களின் சிறுகதையான 'அல கார்ட்டே' அநேகமாக எல்லோரும் படித்திருப்பீர்கள். அப்பா சொன்னதைக் கேட்டு, வேண்டா வெறுப்பாக ஒரு வருட ஒப்பந்தந்த்தில் ஹோட்டல்-ல் மகன் வேலைக்குச் சேருவதும், பின்பு ஈடுபாடு கொண்டு மிகப் பெரிய செஃப் / செய்ன் ஹோட்டல்ஸ் முதலாளி ஆவதுமான அருமையான நடை கொண்ட கதை.


இதே மாதிரிதான் கதையின் நாயகன், தந்தைக்கு வேண்டி, 'அரை' மனதுடன், 6 மாதத்திற்குக் 'கிராம சேவை'க்கான ஆர்டரைச் சுமந்து கொண்டு, செங்கல் சூளை செய்யும் 'கண்டெடுத்தான் காடு' கிராமச் சிறார்களுக்குப் பாடம் சொல்லும் வாத்தியாராக வருகிறான். பள்ளிக்கூடத்திற்கு 'பசங்க' வந்தார்களா, பாடம் சொல்லிக் கொடுத்தானா, அப்பாவின் கனவான 'சர்க்கார் வேலை'யில் சேர்ந்தானா என்பதுதான் கதை. 1966 வருடத்திய நிகழ்வுகள் என்பது கூடுதல் சுவாரசியம்.


'ஏண்டா வேலை விஷயமா யாரையோ பாக்கபோறேன்னிட்டு படம் பாக்க போயிருக்கே?' என அம்மாவின் கேள்விக்கு 'இல்லம்மா, வாத்தியார் படம்னு சொன்னாங்களா, நாம வாத்தியார் வேலைக்குதானே போகப்போறோம், பயன்பட்டாலும் பயன்படுமே, அப்பிடின்னு போனேன் ' எனக் குறும்புடன் துவங்குகிறது விமலின் பயணம். எடுத்துக்கொண்ட பாத்திரத்தின் கனம் குறையாமல் கையாண்ட மனிதருக்கு ஒரு சபாஷ். ஏற்கெனவே குறிப்பிட்டது போல, விமலின் மானரிசம்-களில் எண்பதுகளின் 'பாக்யராஜ்' ரீவைன்ட் ஆகி கண்ணுக்குத் தெரிவது நிஜம், கலகலப்பு.


மலையாள இறக்குமதி இனியா மனதை நிறைத்துவிட்டு போகிறார். நாயகனுக்கு ஈடான பாத்திரத்தில் நாயகியை உலாவ விடுவது வரவேற்கத்தக்கது. 'நான் பேச நினைப்பதெல்லாம்' பாடலை இயக்குனர் 'சேர்த்த' இடத்தில் அம்மணியின் நடிப்பு தெரிகிறது.

'முருங்கை'யோடு என்ட்ரி ஆனாலும் பாக்யராஜ் பாத்திரப் படைப்பு இதம். தம்பி ராமையா 'கணக்கு' பண்ணியே மாட்டிக்கொள்வது கல கல. இவர்களோடு 'பசங்க' போட்டி போட்டு நடிச்சிருக்காங்கடோய்!


பாடல்களும், இசையும் படத்திற்குத் பெருந்துணை. 'செங்க சூளைக்காரா', 'சார சார காத்து', 'தஞ்சாவூரு மாடத்தி' பாடல்கள் நயமாய் இருந்தாலும், 'போறானே, போறானே' பாட்டு இதயத்தைத் தொந்தரவு செய்கிறது. எழுதிய கார்த்திக் நீதா, பாடிய ரஞ்சித் /நேஹா சூப்பர்! இத்தனைக்கும் 'கிப்ரான்'-க்கு முதல் படம்...!


அந்தக் காலத்து கிராமத்தைக் கண் முன் நிறுத்திய சாபு சிரில் சீடருக்கு நன்றிகள் பல. அதே போல படம் பிடித்து நிறுத்திய ஓம் பிரகாஷ், எடிட்டிங் செய்த ராஜ முஹம்மது.

ஷங்கர் போல பல கோடிகள் செலவழித்து சமூகத்திற்கு மெசேஜ் சொல்லலாம். இல்லை இயக்குனர் சற்குணம் போல எடுத்துக் கொண்ட களத்தை விட்டு விலகாமல், இறுதியில் 'பொடேர்' என பொட்டில் அடித்து உண்மையை, நிதர்சனத்தை, மனிதத்தை உணர வைக்கலாம்.

கடோசி -1

படத்தில் ஒரு வசனம் வரும். பசங்களுக்குப் பாடம் கற்றுத் தராமலேயே முதல் மாதச் சம்பளம் வாங்கும் விமலிடம் சித்தர் 'விதைக்கல, அறுக்கறே' என்று சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார். எவ்வளவு உண்மை? நிதர்சனத்தில் நம்மில் ஒவ்வொருவரும் எவ்வளவு தரம் 'விதைக்காமல்' அறுத்துக்கொண்டிருக்கிறோம்?

கடோசி - 2

படத்தில் வரும் கிராமங்கள் போல இன்றும் இந்தியாவில் பல கிராமங்கள் இருப்பது சடாரென நினைவுக்கு வந்து தாக்கியது! அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டு, திருட்டுப் படம் பார்த்துக்கொண்டு, 'எழுத்துச் சொல்'-ல் மட்டுமே வீரனாய் இருக்கிறேனோ?

3 comments:

Anonymous said...

National award vella povathu nechayam....

திருமயிலை எங்க ஊரு ... said...

மிக அருமையான விமர்சனம்... உடனே படத்தை பார்க்கவேண்டியதுதான்

spk4343 said...

nice movie every see this flim....