Saturday, December 24, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 36

இன்று திரு எம் ஜி ஆர் அவர்களது நினைவு தினம் (24.12.2011)


எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் 1968 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட படம் "அடிமைப்பெண்" இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் "25 நாட்கள்" நடந்தது. மிகப் பிரமாண்டமான ஜெய்ப்பூர் அரண்மனை மற்றும் பல இடங்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.

அந்த சமயம் ராஜஸ்தான் முதலமைச்சராக இருந்த மேகன்லால் சுகாதியா, மக்கள் திலகம் அவர்களையும், ஜானகி அம்மா அவர்களையும் அழைத்து, தன் மாளிகையில் அருமையான விருந்து கொடுத்தார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் விருந்தைச் சாப்பிட்டு விட்டு, விடை பெறும் போது, முதல்வர் சுகாதியா அவர்கள் மக்கள் திலகத்திற்குப் பரிசாக, ஒரு தொப்பியை, ஒரு சிறிய பெட்டிக்குள் வைத்துக் கொடுத்தார். 

அதை பெற்றுக் கொண்ட மக்கள் திலகம் அவர்கள். உடனே 'இது என்ன பரிசு?' என்று கேட்டார். அதற்கு முதல்வர் அவர்கள் பெட்டியை திறந்து பாருங்கள் என்றதும், பெட்டியைத் திறந்து பார்த்த மக்கள் திலகத்திற்கு ஆச்சரியமாக இருந்தது. அதற்குள் இருந்த தொப்பியை பார்த்தார் உடனே அந்த தொப்பியை எடுத்து புரட்டிப் புரட்டி பார்த்தார். 

அடுத்த நிமிடம் சுகாதியாவிடமே கொடுத்து, 'என் தலையில் நீங்களே வைத்து விடுங்கள்' என்றதும், உடனே தொப்பியை தலையில் வைத்துவிட்டு, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களிடம் 'இப்பொழுது நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்' என்றதும் மக்கள் திலகம் அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி ஆகிவிட்டது. முதல்வருக்கு நன்றி கூறிவிட்டு, புறப்பட்டார். 

காரில் போய்க் கொண்டு இருக்கும்போது ஜானகி அம்மாவிடம், 'என்ன ஜானு, தொப்பி எனக்கு நன்றாக உள்ளதா?' என்று கேட்டதும், ஜானகி அம்மையார் 'ஒரு மாநில முதல் அமைச்சர் அவரே உங்கள் அழகை புகழ்ந்துள்ளார் இதற்கு மேல் நான் வேறு சொல்ல வேண்டுமா? சரி, இப்போது, நீங்கள் பாக்கெட்டில் வைத்து இருக்கும் கறுப்பு கண்ணாடியை எடுத்து போட்டுக் கொள்ளுங்கள் இன்னும் மிக அழகாக இருப்பீர்கள்' என்றதும், உடனே கண்ணாடியை எடுத்து போட்டுக் கொண்டார். அப்பொழுது ஜானகி அம்மா மிகப் பெருமையுடன் 'அழகுக்கு மேல் அழகு, அதோடு ஒரு அந்தஸ்து, இனிமேல், நீங்கள் எங்கே சென்றாலும், இப்படியே செல்லுங்கள்'. சரி ஓ.கே. தேங்க்ஸ் என்றார் மக்கள் திலகம். 

அடுத்த நாள் காலையில், வேட்டி, ஜிப்பா, கண்ணாடி தொப்பியுடன் சென்றார். "அடிமைப்பெண்" படப்பிடிப்பிற்கு புதிய இடம் பார்ப்பதற்காக செல்லும் போது அங்கே டைரக்டர் கே. சங்கர், கேமராமேன் ராமமூர்த்தி புகைப்பட நிபுணர் ஸ்டில்ஸ் நாகராஜராவ், அலுவலக நிர்வாகி ஆர்.எம். வீரப்பன் ஆகிய நால்வருக்கும் ஒரே ஆச்சரியம் 'என்ன இப்படி திடீரென்று தொப்பி வெச்சுக்கிட்டீங்க?' என்று டைரக்டர் சங்கர் கேட்க, கல கல வென்று சிரித்த மக்கள் திலகம் 'எப்படி இருக்கு?' என்று கேட்க 'ஆஹா! மிகவும் பிரமாதமா இருக்கிறது. இதையே நீங்கள் தொடர்ந்து கடைப்படித்தால் மிகவும் நன்றாக இருக்கும்' என்று நால்வரும் கூறினர்.

நம் மக்கள் திலகம் அவர்கள் தொப்பி அணிந்து பல கோணங்களில் புகைப்படம் எடுத்துப் பார்த்தார் நன்றாகவே இருந்தது ஆகவே, அவர்கள் நால்வரும் கூறியது உண்மை என்பதை அறிந்த மக்கள் திலகம் அவர்கள் தொடர்ந்து தொப்பி அணிந்து வெளியே செல்ல, அதுவே அவருடைய கட்டாய வழக்கமாகிவிட்டது.

தொப்பி அணிவதற்கு முன்பு, மக்கள் திலகம் அவர்கள். கறுப்புக் கண்ணாடி மட்டும் அணிந்து செல்லும் வழக்கம் இருந்தது. பின்பு கறுப்புக் கண்ணாடியோடு, தொப்பியும் அணிந்து மக்கள் திலகம் இருப்பதைக் காண்பவர்கள். அவர் அழகு கூடியது கண்டு, சொக்கிப் போனார்கள். 

-வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு

No comments: