Saturday, December 17, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 35

வாள் தடங்கண் மாதே! 
ஆதியும் அந்தமும் இல்லா 
அரும்பெருஞ்சோதியை 
யாம்பாடக் கேட்டேயும் 
வளருதியோ?! 
நின்செவிதான் வன்செவியோ..?! 

ஒளிபொருந்திய நீண்ட கண்ணையுடைய பெண்ணே, முதலும் முடிவுமில்லாத, காண்டற்கரிய பெருமையுடைய ஒளியானவனை நாங்கள் பாடுதலைக் கேட்டும், நீ (இன்னும்) துயில்கின்றனையோ? உன் செவிதான், சொல்லுவதைக் கேளாத வலிய செவியோ? 

 'தினமணி'யில் திருவெம்பாவை முதல் பாசுரத்தை மேற்கூறிய விளக்கத்தோடு அளித்திருக்கிறார்கள். 

மார்கழி மாதம் இந்த வருடம் அமெரிக்காவில். 

முந்தைய இரவு நண்பரிடம் மனுப்போட்டு வைத்திருந்தேன் கோயிலுக்குக் காலையிலேயே சென்று விடவேண்டுமென. பிவாகி இந்து ஆலயம் எட்டரை மணிக்குத் திறப்பதாகவும், போய் விடலாம் என்றதில் உற்சாகம் தொற்றிக்கொண்டது. 

காலையில் வழக்கம் போல் 6 மணிக்கு முழிப்பு வந்துவிட்டது. குளித்துவிட்டு, இணையத்தின் தயவில் திருப்பாவை/திருவெம்பாவை முதல் பாடலைக் கேட்டு விட்டு நண்பருக்குப் போன் செய்தேன். எட்டரைக்கு தயாராய் இருக்கச் சொன்னார். (அப்படியென்றால் நிச்சயம் ஒன்பது மணிக்கு வந்து விடுவார்!). ஒன்பதடித்து ஐந்து நிமிடங்களுக்கு போன் வந்தது! 

வெளியில் வந்தால் 'முதல் பனி' சாலையெங்கும் வெண்மையை நிறைத்திருந்தது. மார்கழி என்றால் பனிதானே?! இரவு முழுதும் பனி பெய்திருக்க வேண்டும். மரங்களில், சாலையில், வாகனங்களில் பனி இறைத்திருந்தது. (ஐந்து வருடங்களுக்குப் பிறகு, பணியின் காரணம் கொண்டு பனி தரிசனம்). 

'பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்', 'முகுந்தா முகுந்தா', பாடல்களை கேட்டுக் கொண்டே பிவாகி கோயிலுக்கு வந்துவிட்டோம். 

மயிற்பீலி சூடி நிற்கும் மன்னவனே! 
மங்கைக்கு என்றும் நீயே மணவாளனே! 

எனும் வரிகளைக் கேட்ட போது 'சூடிக் கொடுத்த சுடர்க்கொடி' நினைவுக்கு வந்தாள்! 

நம்மூர் கோயில்களைப் போல கூட்டம் எந்நேரமும் அம்முவது இல்லை. சுவாமி விச்ராந்தியாய் நம் வருகைக்காகவே காத்திருக்கிறார் போலும். விநாயகரில் துவங்கி, சிவன், கிருஷ்ணன், துர்க்கா, ராமர், விஷ்ணு, பாலாஜி, மகாலட்சுமி, சத்யநாராயணா, அனுமன், நவக்ரகங்கள் ஆலயத்தை அலங்கரிப்பது விசேஷம். 

ஏகாந்த தரிசனம் செய்துவிட்டு, சந்நிதியை விட்டு வெளியில் வந்தால்... இரணடு தட்டுகளில் (மாத்திரம்) கொஞ்சூண்டு வெண் பொங்கல் பிரசாதம் இருந்தது (முந்திரியோடு!). எடுத்து வாயில் போட்டுக்கொண்ட போது 'அடடா!'.  

மார்கழி நன்றாகவே தொடங்கிவிட்டது.

No comments: