Sunday, February 19, 2012

பு·பே

வெள்ளியன்று இரவு ஒரு ரிஸப்ஷன் கல்யாணம். பனசங்கரி ஸ்டேஜ் மூன்றில், கெம்பகௌடா மெடிக்கல் ஸைன்ஸ் கல்லூரிக்கு அருகேயுள்ள கல்யாண மண்டபம்.

பு·பே-க்கு (Buffet) முதல் குடும்பமாய் ஆஜர். ஸ்வீட் கார்ன் சூப், சாட் வகைகள், பெங்காலி ஸ்வீட், வெஜ் கடாய், பன்னீர் பட்டர், ருமாலி ரோட்டி, வெஜ் புலவ், ரைத்தா, பிஸிபேளா பாத், உருளை வறுவல், பகாளா பாத், ஊறுகாய், ஐஸ்க்ரீம், காரட் ஹல்வா மற்றும் வெற்றிலை பான்.

சாப்பாட்டு இடம் ரொம்பவே தாராளம். எல்லா நாற்காலிகளையும் மூட்டை கட்டி, ஓரமாய்க் கிடத்தியதில் இன்னும் பெரிதாய்த் தெரிந்தது.

சூப்பை சப்பிவிட்டு, ஸ்வீட்டை மென்றுவிட்டு, சாட்/புலவை ஒதுக்கிவிட்டு, ரொட்டி/கடாய்/பன்னீர் பட்டரைத் தின்றுவிட்டு, பிஸிபேளா பாத்-ஐ மேய்ந்துவிட்டு...ஐஸ்க்ரீம்/ஹல்வா-வுக்கு வந்துவிட்டேன்! வெற்றிலை பான் வாயில் இனித்தாலும் வயிறு கனத்தது.

பொதுவாக எல்லோருக்கும் நடக்கும் நிகழ்வுதான் இது. கொஞ்சம், கொஞ்சம் என இருந்தாலும் சாப்பிடுவது அதிகம் என்பதால் கடைசியில் மிஞ்சுவதென்னவோ அசௌகரியம், களைப்பு மற்றும் 'இதை சாப்பிடாமல் போய்விட்டோமே' உணர்வு.

இதைத்தான் வாழ்க்கையிலும் செய்ய நினைக்கிறோம். கிடைக்கும் நேரத்தில் எல்லாவற்றையும் செய்து விட வேண்டுமென்கிற முனைப்பில் நமக்கு மிஞ்சுவது 'பு·பே' சாப்பிட்ட பின் வரும் உணர்வுதான்!

நேர மேலாண்மை (time management) பற்றிய புத்தகங்களில் இதற்கான தீர்வு இருக்கிறாதா? இல்லை. பதிலாக, குறைந்த நேரத்தில் எப்படி எல்லாவற்றையும் செய்து முடிக்கலாம் என்கிற யோசனைகளே அதிகம் கொட்டிக்கிடக்கிறது. அப்படிச் செய்ய முயல்வது, 'பு·பே' சாப்பிடுவதைப் போலத்தான். விளைவு கனத்த, திருப்தியில்லாத, அஜீரணம் நிறைந்த வாழ்க்கைத் தருணங்கள்.

'பு·பே'யின் ரகசியம் 'தெரிவு செய்த உணவு'களை உண்பதில் இருக்கிறது. அதே போல, வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும். மிகக் கவனமாகச் சிந்தித்து, செய்ய வேண்டியவைகளைத் தீர்மானித்து, வேண்டாதவைகளை ஒதுக்கி, 'சில'வற்றைச் செய்தாலே போதுமானது.

Peter Bregman அவர்களின் எழுத்தில் வெளிவந்த '18 minutes' என்கிற இந்த புத்தகத்தைத்தான் நான் இரண்டு நாட்களாகப் படித்துக்கொண்டிருக்கிறேன். அதிலிருந்த பகுதியைத்தான் என் 'பு·பே'யோடு தந்திருக்கிறேன்.

No comments: