Sunday, February 26, 2012

எக்ஸைல் - 1



இது என் பார்வை. விமர்சனம் அல்ல. ஏனென்றால், சாருவை எனக்குப் பிடிக்கும்.

சாரு கையொப்பமிட்ட 'எக்ஸைல்' நாவலை 4 நாட்களாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். 126 பக்கங்கள் போயிருக்கின்றன. சாருவின் கட்டுரைகளைப் படித்தவர்களுக்கு, படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு பெரும்பாலான பக்கங்கள் ஏற்கெனவே அறிமுகமானதுதான்.

கதையின் முடிவு துவக்கத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. சுரேஷ், அஞ்சலி தம்பதியினருக்கு நடுவில் உதயா, அஞ்சலியின் 60 வயதுக் காதலன் (அல்லது 50?!). கூடா உறவுடன் துவக்கம் (அல்லது முடிவு?!)

சாருவின் எழுத்து காட்டாறு போல. தலைப்பை எடுத்துக் கொண்டால் ஓட்டம்தான். குஷால்தாஸ், பக்கிரிசாமி, குணரத்தினம், நளினி, சாட் பெண், ஜிம்கா சாமியார், பெருந்தேவி என பக்கங்கள் (கொக்கரக்கோ!) நீள்கின்றன. தன்னைத் தமிழகம் புரிந்துகொள்ளவில்லையே என்கிற நினைப்பும் உண்டு. ஊடே அஞ்சலி/உதயா காதல்/காமம் கலந்த உரையாடல்கள் பல மொழிகளில்.

எனக்குத் தெரியவே தெரியாத எழுத்து, இசை, பாடல்-களைப் படிக்கும்போது பிரமிப்பு. 'இணையத்தில்தான் இறைந்து கிடக்கிறதே? எடுத்து எழுதுவது சாரு போன்றவர்களுக்குக் கஷ்டமா?' எனப் பொத்தாம் பொதுவாய்க் குற்றம் சாட்டுபவர்களுக்கு - எடுத்து எழுதுவதற்கும், அனுபவித்து எழுதுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது ஐயா!

நண்பர் தியாகராஜனிடம் உண்மையைச் சொன்னேன் 'எக்ஸைல் என்னுள் தாக்கத்தை இன்னும் ஏற்படுத்தாதது ஏமாற்றம்தான். ஆனால், படிக்கத் தூண்டுகிறது' என்றதற்கு 'பின்நவீனத்துவம் என்றால் என்ன ரங்கா?' என்றார்! 'எனக்கும் தெரியாது!' என்றேன். ஆனால், எங்கள் இருவருக்குமே சாருவைப் பிடிக்கவே செய்கிறது.

பேச்சு திசை மாறி, எக்ஸைலின் விற்பனைக்குத் திரும்பியது. 'சேத்தன் பகத் போன்றவர்களின் புதினங்கள் விற்பனையாகும் அளவிற்கு, தனது புத்தகங்கள் ஆகவில்லையே என்கிற எண்ணம் சாருவிற்கு நிச்சயம் இருக்கும். அதற்காகவே எக்ஸைலை விற்பனை செய்வதற்குச் சிரத்தை எடுத்துக்கொள்கிறார்' என்றார் தியாகராஜன். அவர் கூறுவதிலும் உண்மையிருக்கிறது.

'கமல் என்னதான் உடல் முழுக்கக் கறுப்பாய் 'அபிராமி! அபிராமி!' என நடித்தாலும், ரஜினி 'சாங்குசிக்கு, சாங்குசிக்கு, சாங்கிசிக்குச்சா' என இடுப்பை ஆட்டுவதுதான் எடுபடுகிறது! ஆக, எல்லாத் துறைகளிலும் இந்தப் 'பிரச்னை' உண்டு' என்றேன். ஆறுதலான விஷயம் என்னவென்றால் கமல் காம்ப்ரமைஸ் செய்வதுபோல சாரு செய்ய நினைக்காதுதான் அவருக்கென தனி இடத்தைத் தந்திருக்கிறது.

பாசாங்குகளை விட்டுவிட்டு படிக்கும் எவருக்கும் சாருவை ரசிக்க முடியும். ஆனால், அவரின் எழுத்தை வைத்து அவரையும், அவரது வாசகர்களையும் எடைபோட்டு, ஒதுக்கி வைத்து, ஓரம் கட்டுவதுதான் இன்றுவரைக்கும் நடந்து கொண்டிருக்கிறது.

பின்குறிப்பு: எக்ஸைல் என்பதற்கான தமிழ் வார்த்தை 'நாடு கடத்தப்பட்டவர், அஞ்ஞாத வாசம்'. கடைசி பாராவைப் படித்தால் உங்களால் தலைப்பை நன்றாகப் பொருத்திக் கொள்ள முடியும்.

1 comment:

Anonymous said...

அன்புள்ள ஸ்ரீ்ராம்,

சில கேள்விகள்.

1. என் பார்வை, என் விமர்சனம் - இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
2. நவீனத்துவம் என்றால் என்ன? (பின் நவீனத்துவத்தை பிறகு தெரிந்து கொண்டவுடன் விளக்கவும்)
3. பாசாங்கில்லாமல் படிப்பது என்றால் என்ன? எப்படி?
4. ஒரு எழுத்தாளரை அவருடைய எழுத்தை வைத்து எடை போடாமல், வேறு எதை வைத்து எடை போடுவது?

நன்றி,
Shankar

பிகு: சாரு நிவேதிதாவின் ஒரு புத்தகத்தைக் கூட இதுவரை நான் படித்ததில்லை.

பிகு 2: 1994 ஆம் வருடம் வெளி வந்த Pulp Fiction (http://www.imdb.com/title/tt0110912/) திரைப்படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? பின்நவீனத்துவத்திற்கும், இதற்கும் சம்பந்தம் இருக்கலாமோ என்று தோன்றுகிறது.