Monday, February 27, 2012

சுஜாதா!

1975-ல் நான் லண்டன், ஜெர்மனி இரண்டு தேசங்களுக்குப் போய் இரண்டு மாதம் கழித்துத் திரும்பி வந்ததும் லண்டனில் நடப்பது போல் ஒரு தொடர்கதை எழுதட்டுமா? என்று எஸ் ஏ பி யைக் கேட்டபோது அவர் உடனே சம்மதித்தார். அந்தக் கதை 'ப்ரியா'.

ஒரு சினிமா நடிகை படப்பிடிப்புக்காக லண்டன் போகிறாள். அவளுடன் அவள் காதலனும் போகிறான் என்று தெரிந்துகொண்ட கண்டிப்பான கார்டியன், லாயர் கணேஷையும் அவளைக் கண்காணிக்க உடன் அனுப்புகிறார். இப்படி சுவாரஸ்யமாகச் சென்ற கதை பாதியில் தடம் புரண்டுவிட்டது. எனக்கு என்ன ஆச்சோ, கடுமையான ஜலதோஷமோ முதுகுவலியோ தெரியவில்லை. கதாநாயகியைக் கொலை செய்துவிட்டேன். அவள் பிரேதம் லண்டனில் கிடைத்தது என்று எழுதிவிட்டேன். அந்த அத்தியாயம் வெளிவந்ததும் ஆசிரியரிடமிருந்து டெலிபோன் வந்தது. இணையாசிரியர் ரா கி ரங்கராஜன் பேசினார்.

'என்ன சார், ப்ரியா பிழைச்சுருவாள் இல்லையா?'

'சான்ஸே இல்லை சார், நிஜம்மாவே செத்துட்டா, அதான் கதை.'

'அப்படியா? கொஞ்சம் ப்ராப்ளம் வருமே!'

'ஏன்?'

'ரொம்ப நல்லா அந்த கேரக்டரை கொண்டுவந்துட்டு பாதில கதாநாயகி இறந்துபோய்ட்டாள்னு சொன்னா, வாசகர்களை இழந்துருவோம். இருங்க! எடிட்டர்கிட்ட பேசிட்டு யோசிச்சு, அவளைப் பிழைக்க வைக்க ஒரு வழி சொல்றோம். நீங்களும் யோசிங்க' என்றார்.

'என்ன தொந்திரவு இது? செத்துப்போனவளை எப்படிப் பிழைக்க வைப்பது? என்னிடம் பிப்ரிலேட்டரோ, சிபி.ஆர் சிகிச்சையோ எதுவும் இல்லையே' என்று முடியைப் பிய்த்துக் கொண்டிருந்தேன்.

அடுத்த தினம் போன் வந்தது. 'எடிட்டர் இரண்டு வார்த்தை தான் சொல்லச் சொன்னார். 'மதாம் துஸ்ஸாடு'. மேற்கொண்டு நீங்க பாத்துக்கங்க' என்று போனை வைத்துவிட்டார்.

நான் வியப்புடன் யோசித்தபோது தெளிவு வந்தது. ப்ரியா எப்படி பிழைத்துக்கொண்டாள் என்பது இரண்டாம்
பட்சம். எஸ்.ஏ.பி.யின் நுட்பமான ஆசிரியர் திறமைக்கு இது மற்றுமொரு உதாரணம்.

ப்ரியா புத்தகமாக வந்தபோது முதல் பதிப்பில் 'இந்தக் கதையை ஒரு முக்கியமான கட்டத்தில் திசை திருப்பிய ஆசிரியர் எஸ்.ஏ.பி. அவர்களுக்கு' என்று சமர்ப்பணம் செய்தேன்.


-என்றும் சுஜாதா, எஸ் ராமகிருஷ்ணன், உயிர்மை.

1 comment:

தக்குடு said...

அந்த ரெண்டு வார்த்தையோட அர்த்தம் என்ன எடிட்டர் சார்???