Tuesday, April 03, 2012

அறியப்படாத அண்ணா ஹசாரே...

‘அண்ணா ஹசாரே’ பற்றி அண்ணா சந்திரமௌளீஸ்வரன் எழுதியதைத் தபாலில் வாங்கி, ஒரே மூச்சில் படித்து, முடித்து விட்டேன்.

‘சென்னை போகும்போது, புத்தகத்தை வாங்கி, அண்ணாவிடம் ஆட்டோகிராஃப் பெற்று, பின்னரே படிக்க வேண்டும் என்கிற முடிவில் மாற்றம் ஏற்படக் காரணம் ‘சென்னை’க்கான வாய்ப்பு நிகழாததுதான்.

88 பக்கங்களில் ஒரு ஆவணப் படம் பார்த்த உணர்வு எனக்கு. 

சிறிய முன்னுரையில் துவங்கி, பதின்மூன்று அத்தியாயங்கள் ‘ஹசாரே’வைப் பற்றி புட்டு புட்டு வைக்கின்றன.  பதினான்காம் அத்தியாயம் ஜன லோக்பால் பற்றி விரிவாகப் பேசுகிறது.

ஊழலின் விஸ்வரூபத்தில் முதல் அத்தியாயம் – 2 ஜி, காமன்வெல்த் ஆய்வு.
1965 இந்திய-பாகிஸ்தான் போரில் ஹசாரேவின் பங்கு கொண்ட இரண்டாம் அத்தியாயம்.

சமூகப் போராளியாய்த் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளும் ஹசாரேவின் மூன்றாம் அத்தியாயம்.  மண்டல்/ட்ரஸ்ட்/யோஜனா என ஹசாரே உறுப்பினராயிருக்கும் அமைப்புகளின் வெளியே தெரியாத முறைகேடுகள், ஹசாரேவின் மௌனம், ரொம்பவே ஆச்சரியம்.  காந்தியின் ”கணக்கு சீராக இல்லாவிட்டால், உண்மையை அதன் தூய்மையான பொருளில் பேண முடியாது” வார்த்தைகளை ஹசாரே கடைபிடித்ததாகத் தெரியவில்லை.

‘தகவல் அறியும் உரிமைச் சட்டம்’ பற்றி விரிவாய் எடுத்துரைக்கும் நான்காம் அத்தியாயம்.

’ஹசாரே குழு’ உறுப்பினர்களின் அறிமுகம் கொண்ட ஐந்தாம் அத்தியாயம்.

லோக்பால் சட்டத்தின் வரலாறு பதியும் ஆறாம் அத்தியாயம்.

இந்திய அரசியலமைப்பை மாற்றக்கூடிய சிக்கல் நிறைந்த ஜன லோக்பால் பற்றி ஆராயத் துவங்கும் ஏழாம் அத்தியாயம்.

ஹசாரேவின் போராட்டம் பற்றிப் பேசும் எட்டாம் அத்தியாயம்.  ஹசாரேவின் உண்ணாவிரதம் - ஊடக வியாபாரப் பசிக்குத் தீனி, இளைஞர்களின் வியப்பு, மக்களின் உணர்ச்சிகளோடு விளையாட்டு - என அழுத்தமாய் உணர வைக்கிறது.

அரசுத் தரப்பு/ஹசாரே தரப்புக் குழு உருவானது, அதன் கூட்டங்கள் கொண்ட ஒன்பதாம் அத்தியாயம்.  அரசியலமைப்பின் சட்டத்தோடு முரண்பட்டிருப்பதால் சட்டச்சிக்கல்கள், அரசின் இயலாமை, அரசு மீது ஹசாரே குழுவின் நம்பிக்கையின்மை / நடைமுறைச் சிக்கல்களை ஏற்றுக் கொள்ளாமை/ வலுவான வாதங்களை முன் வைக்கத் தெரியாமை பற்றிய விவரங்கள் உண்டு. ‘எத்தனை பணியாளர்கள் தேவைப்படுவார்கள்?’ என்கிற எளிய கேள்விக்குக் கூட ஹசாரே குழுவினரின் புள்ளி விவரங்கள் அடங்கிய பதில் இல்லை எனும்போது ஆயாசம்தான்.

ஹசாரேவின் இரண்டாவது உண்ணாவிரதப் போராட்டம், பிரதமர் / ராஜ் தீப் சர்தேசாய் கடிதம், காந்தியடிகள் உண்ணாநோன்புடன் ஒப்பீடு, ஹசாரே கோரிக்கைகளோடு கூடிய பத்தாம் அத்தியாயம்.

ஊடகங்களின் பெரிதான பங்கு, புற உலகத்துடனான ஹசாரேவின் தொடர்பு, உணர்ச்சிக்குவியலான மக்கள் – இதற்கெல்லாம் மாறுபட்ட காந்தியடிகளின் (சுளுவான/போற்றத்தக்க) அணுகுமுறை எனப் பேசிப் போகும் பதினொன்றாம் அத்தியாயம்.

ஹசாரேவுக்குச் ‘செக்’ வைக்கும் பன்னிரெண்டாம் அத்தியாயம்.  எனக்குப் பிடித்த இரண்டு கேள்விகள் – 1. ஏன் அரசு ஜன் லோக்பாலை அப்படியே ஏற்கத் தயங்குகிறது? அரசுத் தரப்பில் முன் வைக்கும் சட்டச் சிக்கல்கள் என்னென்ன? அந்தச் சிக்கல்களை ஏன் அண்ணா ஹசாரேவால் களைய முடியவில்லை? – 2. அனைத்து ஊடகங்களையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக்கொள்ளும் அண்ணா ஹசாரே, அதே ஊடகங்களைப் பயன்படுத்தி எந்த அளவுக்கு மக்களோடு நெருக்கமாக மாறியிருக்கிறார்?  காந்தியின் சத்தியாகிரகப் போராட்டத்தின் ஒப்பீடு, ’அடேங்கப்பா!’

டீம் ஹசாரே ’நேர்மை’யைக் கேள்விக்குறியாக்கும் பதின்மூன்றாம் அத்தியாய ம்.  ஆசிரியர் வைக்கும் விமர்சனங்கள் சிந்திக்கப்பட வேண்டியவை.


அண்ணா ஹசாரே பற்றிய எனது கருத்துக்களுடன் ஒத்துப் போவதால் என்னால் ரொம்பவே ரசிக்க முடிந்த்து.  காந்தியோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஹசாரே எவ்வளவு அந்நியப்பட்டு இருக்கிறார் என்பதும் தெரியவந்தது.  (இயக்குநர் ஷங்கரின் ‘இந்தியத் தாத்தா’ ஒப்பீடு மற்றுமொரு தமாஷ்!) ஆசிரியருக்கு எனது இதயங்கலந்த நன்றி.

’தனிமனித ஒழுக்கம் இல்லை’யெனில் நடைமுறையில் எதுவுமே சாத்தியமில்லை என்று நம்புபவர்களில் நானும் ஒருவன்.  சட்டத்தால் எதையும் சாதித்து விட முடியாது – ஏனெனில், புதிதாக இயற்றப்படும் சட்டத்தோடு, மீறுதலும்/புகுந்து வெளி வருதலும் பிறக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.  ஆக, ‘தனிமனித ஒழுக்கம்’ ஒன்றுதான் தீர்வுக்கு வழி.

‘அறியப்படாத அண்ணா ஹசாரே’ ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் இன்னும் நிறைய பேரால் அறியப்படலாம் என்பது என் அபிப்பிராயம் – சந்திரமௌளி அண்ணாவுக்கு வைக்கும் கோரிக்கையும் கூட.

-அறியப்படாத அண்ணா ஹசாரே, வி. சந்திரமௌளீஸ்வரன், கிழக்கு பதிப்பகம், ரூ 75/-

No comments: