Thursday, November 01, 2012

சர்ச்சை நாயகன்!

வெள்ளி விழா ஆண்டில் எடுத்து வைக்கும் ‘நாயகன்’, டைம்ஸ் நாளிதழால் சிறந்த 100 படங்களில் ஒன்றாய்த் தெரிவு செய்யப்பட்ட ‘நாயகன்’ பலத்த சர்ச்சைக்குள் சிக்கியிருப்பது பரிதாபமே.
 
 
 
 
Of course Velu Nayakan doesn’t dance என்கிற தலைப்பில் கமல் அளித்த பேட்டி, மறுப்பு தெரிவித்த தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் (Living in past glory) – அதோடு நிற்காமல் வழக்கு தொடுக்க, கோர்ட் வரை நீண்டிருக்கிறது.
 

 
முதலில் கமல் அளித்த பேட்டியைப் பார்ப்போம் (ஹிந்து நாளிதழ், 21 அக்டோபர் 2012).
 
 
நாயகன் படத்தில் கமல் என்கிற கலைஞனின் பங்களிப்பை யாரும் மறுக்க இயலாது.  மறக்கவும் இயலாது.  கட்டுரை கொஞ்சம் மேலே போய் அவர் மெனக்கிடல்களை விலாவாரியாக அலசுகிறது.  கதை, காட்சிகள்,வசனம், சண்டை, ஒப்பனைகள், தேடல்கள், நடிப்பு, மணிரத்னம் அவர்களுடனான நெருக்கம் என்று விரிவாகக் கூறிய கமல் முடிந்தவரையில் ‘தயாரிப்பாளர் ஒத்துழைக்கவில்லை’ என்று வரிக்கு வரி வருத்தப்பட்டு, வெளிச்சம் போட்டுக் காட்ட, விவகாரம் சூடு பிடித்தது.
 
 
முக்தா சீனிவாசனின் மறுப்புக்கு முன்னால், அவரைப் பற்றிய சிறு குறிப்பு…
 
 
 
முக்தா சீனிவாசன், முக்தா ராமசாமி (சகோதரர்கள்) சினிமாவை மிகவும் நேசித்தவர்கள்.  ஆபாசம் துளிக்கூடக் கலந்துவிடக் கூடாது என்பதில் கவனம் வைத்து, ஜனரஞ்சகப் படங்களைக் கொடுத்தவர்கள். 
 
சிவாஜி, நாகேஷ், சோ, ஜெமினி கணேசன், ஜெயலலிதா, முத்துராமன், சிவகுமார், லக்ஷ்மி, சுஜாதா, ஸ்ரீவித்யா, கமல், ரஜினி, சரிதா போன்ற உச்ச நட்சத்திரங்களை வைத்து கிட்டத்தட்ட 40 பட்ஜட் படங்களை இயக்கியவர் முக்தா சீனிவாசன்; தயாரிப்பாளர் முக்தா ராமசாமி. 
 
 
சில படங்களைக் காஷ்மீர், அந்தமான், சிம்லா என்று கதைக்கு வேண்டி போய் எடுத்தார். இவர்களது படங்களில் நகைச்சுவை பிரதானமாயிருக்கும்; இரட்டை அர்த்தங்கள் இருக்கவே இருக்காது.
 
 
இதற்காக முக்தா சகோதரர்கள் பரிசோதனையில் இறங்கவேயில்லை என்று முடிவு கட்டி விட முடியாது. உ-ம்: ஒரு சிங்கம் முயலாகிறது (சிவசங்கரி எழுதியது) என்கிற நாவலை ‘அவன் அவள் அது’ என்கிற பார்க்கும்படியாய்ப் படம் எடுத்தவர் முக்தா சீனிவாசன்.  தாயாகும் தகுதியில்லாத மனைவி, பிள்ளைக்காக தன் கணவனை வேறொருத்தியுடன் உறவு கொள்ளச் செய்வது போன்ற கதையை முக்தா சீனிவாசன் கையாண்டிருந்த விதம் அற்புதம்.
 
 
முக்தா சீனிவாசனின் மறுப்பில் அதிசயம் / ஆச்சர்யம் / அதிர்ச்சி (அக்டோபர் 28, 2012)
 
 
60 லக்ஷம் என்கிற முதலீட்டில் துவங்கிய படத்தின் செலவு ஒரு கோடியைத் தாண்டியிருக்கிறது!  1986-ல்  கோடியைத் தாங்கக்கூடிய சக்தி எந்தத் தயாரிப்பாளருக்கும் இருந்திருக்க முடியாது.  கமலின் ஊதியம் மட்டும் 17.5 லக்ஷங்கள்.
 
 
சிவாஜி-கமல்-அமலா-வை வைத்து காட்ஃபாதர் பாணியில் முக்தா சீனிவாசன் எடுக்கவிருந்த கதையை கமல் ஏற்கவில்லை.  காரணம் – சிவாஜிக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும் என்பதே.
 
 
கமல் தருவித்த ஜிம் அலன் (சண்டைக் காட்சி) ஒரு நாள் ஊதியம் இரண்டு லக்ஷ ரூபாய்கள்.
 
 
படத்தில் வன்முறை அளவுக்கதிகமாய்த் தெரிய, நாயக்கரின் மனைவியாய்ச் சரண்யா-வை அறிமுகம் செய்ய வேண்டி வந்தது.
 
 
கமல் / மணிரத்னம் ‘வரதராஜ முதலியார் கதை’ என்கிற பேட்டி பல சிக்கல்களைத் தந்தது.  வரதராஜ முதலியார் அவர்கள் வாயாலேயே ‘என் கதை அல்ல’ என்று சொல்ல வைக்கப் பெரும்பாடு பட்டு, தணிக்கைச் சான்றிதழ் வாங்கியது.
 
 
தாராவி போல வீனஸ் ஸ்டூடியோவில் போடப்பட்ட செட்-ன் செலவு தாராவி போய் எடுப்பதை விட மூன்று மடங்கு அதிகமாயிருந்தது.  அசல், நெரிசல் சேரியான தாராவியில் படப்பிடிப்பு என்பது 1986-ல் முடியாத காரியம்.
 
 
படத்தின் மூன்று மணிநேர நீளத்தை, ரசிகர்கள் பார்க்கும்படியாய்த் தொகுத்த லெனின், மற்றும் இசைஞானி அவர்களின் பங்கு.
 
 
முக்தா சீனிவாசன் பேட்டியில் நேர்மை தொனிக்கிறது; துயரம் இருக்கிறது; உண்மை உறைக்கிறது.  காலத்தின் கட்டாயத்தால் ஜி வெங்கடேஸ்வரன் அவர்கள் பெயரைத் தயாரிப்பாளராய்ப் போட வேண்டி வந்தது எனும்போது வலிகளை உணரமுடிகிறது.
 
 
’என் தமையனார் இறந்த பின்னர் நான் நாயகன் பற்றி பேச விரும்பவில்லை; ஏன் கமல் இப்போது இதையெல்லாம் பேசுகிறார்?’ என்று கேட்கும்போது ஆதங்கம் தொனிக்கிறது.
 
 
கதாநாயகர்கள்தான் பஞ்ச் வைப்பார்கள்.  ஆனால், முக்தா சீனிவாசன் வைத்த பஞ்ச் அபாரம்…I have nothing against Kamal Hassan taking credit for the success of Nayakan – but not at my cost, please! 
 
 
நாயகனில் கமலின் பங்களிப்பும், உழைப்பையும் எவ்வளவு உண்மையோ.  அவ்வளவுக்கு அவ்வளவு தயாரிப்பாளர் / அனுபவஸ்தர் முக்தா சீனிவாசன் அவர்களின் வலிகளும் உண்மை.

No comments: