Tuesday, December 25, 2012

பாட்ஷாவும் நானும்!



பாட்ஷாவும் நானும்’ புத்தகத்தை சென்னை அடையாறு ஒடிசியில் பிடித்தேன்.  இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா / பத்திரிகையாளினி மாலதி ரங்கராஜன் இணைந்து எழுதிய தமிழ்ப் பதிப்பு.


அண்ணாமலை / வீரா / பாட்ஷா / பாபா படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா, ரஜினியுடனான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.  பாட்ஷாவும் நானும் என்று வைத்தாலும், புத்தகம் நெடுக ‘அண்ணாமலை’ புராணம்தான்.


அண்ணாமலையின் இயக்குநர் என்பது தற்செயலானது.  அறிவிக்கப்பட்ட வஸந்த் (கேளடி கண்மணி, ரிதம்) திடீரென விலகிக்கொள்ள, சுரேஷ் கிருஷ்ணாவுக்கு அடித்தது சான்ஸு!  மார்ச் 92-ல் பூஜை போட்டு, ஜுன் 92-ல் ரிலீஸாக வேண்டும் என்கிற கண்டிஷனுடன் சுரேஷ் கிருஷ்ணாவின் பயணம் துவங்குகிறது!


‘இந்த நாள்’ என்று துடை தட்டி ரஜினி ஆர்ப்பரிக்கும் காட்சியின் பின்னால் அமைந்த உழைப்பு….

-கே பி வேண்டும், ரஜினி வேண்டாம் என்று மோதிய ‘றெக்க கட்டி பறக்குதய்யா அண்ணாமலை சைக்கிள்’ பாடல் நுழைத்த இடமும், குறுகிய காலத்தில் படம் பிடித்ததும்…

-மும்பை செண்டார் ஹோட்டலில் இரண்டு மணி நேரத்தில் படம் பிடிக்கப்பட்ட ரஜினி ஏறுதலும், சரத் இறங்குதலும் காட்சி…

-கே பி எழுதி ரஜினி பேசிய வசனம் – வினு சக்கரவர்த்தியுடன் மோதுவது…

-ரஜினியின் குறியீடான ‘சூப்பர் ஸ்டார் ரஜினி’ பின்னணி இசையை படத்தின் அறிமுகக்காட்சியில் (ரஜினியின் அனுமதிக்கு மாறாக) நுழைத்து, அது இன்றும் தொடர்வது….

என்று நெகிழ்வாய்ப் பதிவு செய்திருக்கிறார்.


வீரா படத்தில்…

-கதை பிடிக்காமல், பின்னால் ரஜினிக்காக மாற்றியமைத்து எழுதியது.

-ரங்கோலியில் ரஜினி வரைதல், அதை பாதுகாக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருந்தது…

-விளக்கு ‘முத்து’ (மணிக்கோயில் வாசலில் பாடல் முதல் காட்சி) அமைக்க மேற்கொண்ட முயற்சிகள்…

-காட்சியை முடிவு செய்து, அது பிடிக்காமல் மாற்றி வேறு விதமாய் படம் பிடித்த ‘மாடத்துல, கன்னி மாடத்துல’ பாடல்…

என்று சுவாரஸ்யமாய்ப் பதிவு செய்திருக்கிறார்.



பாட்ஷா படத்தில்

-’உண்மைய சொன்னேன்’ என்கிற காலேஜ் சேர்மன் காட்சியில் துவங்கிய கதை…

-’உள்ளே போ’ என்கிற வசனம் ஏற்படுத்திய உஷ்ணம்

-’ஆட்டோக்காரன்’ பாட்டு எழுதி வாங்கியது, எடுத்தபோது ஏற்பட்ட அனுபவம்…

-‘வேண்டவே வேண்டாம்’ என்று ஒதுக்கப்பட்ட ‘அழகு, நீ நடந்தால் நடை அழகு’ மற்றும் ‘தங்க மகன்’ பாடல்களை படத்தின் ஓட்டம் கெடாமல் நுழைத்தது.

-ஒரு வாட்டி சொன்னா என்கிற பிராமண பாஷையை ஒரு தடவ சொன்னா என்று சட்டெனத் தீர்மானித்தது…

-பாட்ஷா-வாய் மாற ரஜினி மேற்கொண்ட முயற்சி…

-எட்டு எட்டாய் வைரமுத்து அவர்களை எழுத வைத்த ரஜினி...

என்று அருமையாய்ப் பதிவு செய்திருக்கிறார்.


பாட்ஷா – 2 பற்றியும் பேசுகிறார்.  ஆனால், பாபா பற்றிய மூச்சு இல்லவே இல்லை.  இது கொஞ்சம் வேதனை தரக்கூடிய சமாச்சாரம். 


பாபா இயக்குநர் என்கிற முறையில் ஒரு அத்தியாமாவது ஒதுக்கியிருந்தால் நேர்மையாயிருந்திருக்கும்.  அதை விட்டு விட்டு, வெற்றிகளுடன் உறவாடிக் கொண்டதை என்னவென்று சொல்வது?


ஆனால், வெற்றியை மட்டும் கொண்டாடும் சராசரி ரஜினி ரசிகனுக்கு இந்தப் புத்தகம் கற்கண்டு போல இனிக்கும்.  ரஜினியோடு வளர்ந்த என்னைப் போன்ற சாதாரண ரசிகனுக்கு இனிப்போடு ‘பாபா?’ என்கிற கேள்விக்குறியும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.


பாட்ஷாவும் நானும் – ஒரே ஒரு ரஜினிதான், சுரேஷ் கிருஷ்ணா / மாலதி ரங்கராஜன், வெஸ்ட்லாண்ட் பதிப்பகம், ரூ 125

1 comment:

Dino LA said...

சிறப்பான பதிவு..