வருடத்தின்
முதல் தினம்.
காலையில்
கடவுளை வணங்கித் தொழுது, ஸஜ்ஜன் ராவ் சர்க்கிள் முருகன்/ஜயநகர் பிள்ளையாரைத் தரிசித்து,
லைட்டா வீட்டில் டிஃபன் போட்டு, பனஷங்கரி வந்து வோல்வோவைப் பிடித்தேன்.
எதிரும்
புதிருமான இருக்கைகளில் அமரும் வழக்கமுண்டு.
எதிரே உட்கார்ந்திருந்த பெண்ணின் கைகளில் வெள்ளைக் கைகுட்டை. கழுத்தின்
கருகமணி திருமணமானவள் என்று சொன்னது. கையில்
வைத்திருந்த கோட் மருத்துவத்தைச் சார்ந்தவர் என்று சொன்னது. சிவந்த கண்கள் ‘அழுகிறாளோ?’
சங்கமா
ஸர்க்கிள் நிறுத்தம் வந்தவுடன் தெரிந்து விட்டது.
அழுது கொண்டு, கைக்குட்டையில் துடைத்துக் கொண்டு இருந்தவளைப் பார்த்ததும் கையலாகாத
கோபம் பொங்கியது. ’புத்தாண்டுத் திருநாளில்
இவளை அழ வைத்த கிராதகன் யார்?’ வழக்கமாய்க்
கண்களைத் தழுவும் தூக்கம் தொலைந்து போனது.
சில்க்
போர்டில் விறுவிறுக்க ஏறிய பெண் பார்க்க பாந்தமாயிருந்தாள். என் பக்கத்தில் அமர்ந்து, லேசாய்ப் புன்னகைத்தாள். ‘புதுவருட வாழ்த்துக்கள்!’ என்றவுடன் முகமலர்ந்து
‘உங்களுக்கும் உரித்தாகுக’ என்றாள். நெற்றியில்
தீற்றியிருந்த குங்குமம் – கோயிலுக்குப் போயிருக்க வேண்டும்.
பக்கத்துப்
பெண் தன் கையில் வைத்திருந்த லேப்டாப் பையிலிருந்து கணினியை எடுத்துவிட்டு, பையைக் காலுக்குக் கீழே வைத்தபோது, எதிரே இருந்த
பெண் ‘வைக்காதீர்கள்’ என்றாள். கணினியைக் கையில்
வைத்துக்கொண்டு, பையையும் எப்படி? கசமுசா ஏற்படுவதற்கு
முன் நான் உள்ளே புகுந்து ‘இந்த gap-ல் வைத்துவிடுங்கள்’ என்றேன். முதல் இருக்கைக்கும், எங்கள் இருக்கைகளுக்கும் நடுவே
இடைவெளி உண்டு. உட்காரவும் செய்யலாம். உடைமைகளையும் வைக்கலாம்.
பக்கத்துப்
பெண் மலர்ந்து, உடனே வைத்து விட்டது. நான்
சும்மாயிராமல் ‘all are happy now’ என்று சொன்னது எதிர் பெண்ணிற்குப் பிடிக்காமல் போயிருக்கலாம்.
‘you
should not disturb others’ என்று புன்னகைத்தாள் (அப்பாடி)! உடனே பக்கத்துப் பெண் பதறி ‘iam sorry’ என்றது. ‘இது உங்களுக்கல்ல, அவருக்கு’ என்றாள் என்னைப் பார்த்து!
‘you
are already disturbed, how can I disturb you again?’ என்று வாய்வரை வந்துவிட்டது. நான் ஒன்றும் சொல்லாமல் அமைதியாயிருந்தேன்.
வைதேகி
மருத்துவமனை வந்ததும் அழுவாச்சி பெண் இறங்கிப் போனது. பக்கத்துப் பெண்ணிடம் நான் சொல்ல நினைத்ததைச் சொன்னேன். மீண்டும் அழகாய்ப் புன்னகைத்தாள்.
‘உங்களிடம்
வெளிப்படையாய்ப் பேசித் தனது இன்னலை விடுவித்துக் கொண்ட மாதிரி, தன்னைத் தொந்திரவு
செய்யும் விஷயத்தை வேண்டியவர்களிடம் பகிர்ந்து பேசித் தீர்த்துக் கொண்டிருந்தால் சுமை
இறங்கிச் சுகமாய் இருந்திருக்கலாமே?’ என்று இயல்பாய்ச் சொன்ன என்னை வியப்புடன் பார்த்து
‘நன்றி, நானும் இன்று ஒன்றைக் கற்றுக்கொண்டேன்’ என்று சொல்லி ஸத்ய சாயிபாபா மருத்துவமனையில்
இறங்கிப் போனது.
பெண்கள்
மலைகளைத் தாங்கும் மனம் படைத்தவர்கள். இருந்தாலும்
பெரும்பாலான தருணங்களில் மென்மையான சிறகுகளால் கட்டுண்டு உடைந்து போகிறார்கள்.
No comments:
Post a Comment